முதுமையில் ஆணின் தனிமை

கவிதைகளில் கலைச்சொற்கள்
---------------------------------------------
கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்.
_--------------+------
1. பிடுகு - இடி
2. ஒக்கல் - சுற்றம்
3. ஓவம் - ஓவியம்
4. இழிஞன் - தாழ்ந்தோன்
5. நூழிலர் - வணிகர்
6. முகரிமை - பேரறிவு; தலைமை
7. வறுவிலி - திக்கற்றவன்; வறியவன்
8. நொவ்வல் - துன்பம்
9. பழனம் - வயல்
10. புடையல் - மாலை garland
11. மங்குல் - மேகம்
12. மதுகை - மனவலிமை
13. கவ்வை - பழிச்சொல்
14. காழகம் - ஆடை

முதுமையில் ஆணின் தனிமை
-----------------------------------------
ஒக்கல் ஓம்ப ஓடியோடி உழைத்தவன்
ஒக்கல் ஒதுக்க ஓரறையில் ஒதுங்கினான்..
கை பிடித்தவள் கை விட்டு முன் செல்ல
கைத்தடியோடு காலன் வர ஏங்குகிறான்..
உடன் வந்தவள் புடையலினுள் ஓவமாய் ஒளிய அவள்
ஓவம் தினம் கண்டு நொவ்வல் நொறுக்க நொந்து சாகிறான்..
முகரிமை முகர்ந்து முன்னுக்கு வந்தவன்
முகவரி மறந்து வறுவிலியாய் வாழ்கிறான்..
இருகரம் கொண்டு இழிஞனை அணைத்தவன்
இல்லத்தார் இகழ இழிஞனாய் ஈனம் அடைகிறான்..
பழனம் பல சேர்த்து பொன் காழகம் கண்டவன்
கசடு காழகம் நாற நாதியின்றி திரிகிறான்..
கடுகு வெடித்தார் போல் பிள்ளை கவ்வை கூற
பிடுகு விழுந்த பிணமாய் பிழைத்து வாழ்கிறான்..
கனி தீனி பெயர் கூவி நூழிலர் தினம் கண்டும்
வெறுங்கை தன் நாவடக்க நாளை நகர்த்துகிறான்..
வானுயர்மதுகை தாங்கி தினம் வலம் வந்தவன்
கார்மங்குல் கடந்தது போல் மனம் புழுங்கிறான்..
மனம் விட்டு பேசி மகிழ தன் மாந்தர் தேட
கணப்பொழுது உடன் அமர யாருமில்லா
தான் வாழும் நால்சுவரை நரகமாய் காண்கிறான்..
வாழும் வரை உயிர் புழுவாய் அவனை பாவித்து
மாண்ட பின் ஓவம் கண்டு ஒப்பாரி வைப்பது சரியோ?
---------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (28-Oct-20, 11:17 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 844

மேலே