தீபாவளி வாழ்த்துக்கள் 2020

வண்ணக்கோலமாய் வாழ்க்கை அரும்பும் திருநாளாய்
வெய்யோன் வெங்கதிரால் விடியல் எழிலுற
நம்மில் வாழும் நரகாசுரனை நினைப்போம்
மலரும் பொன்னாள் மகிழ்ச்சி சேர்க்கட்டும்

நினைவிருக்கிறதா அந்நாள் தீபாவளி கொண்டாட்டம்
மனமேங்கும் புத்தாடை உடுத்தி இன்புற
அதிரசமும் தட்டையும் முறுக்கும் ஓட்டடையும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் நிறைந்து வழியும்

பக்கத்து வீட்டு சரவெடி உறக்கம் பறிக்க
எதிர் வீட்டின் வண்ணக் கோலம் வரவேற்க
நசித்துளைக்கும் வெல்லப்பாகும் ஏலக்காய் வாசம்
அவசரமாய் விழித்தெழ செய்யும் எதிர்பார்ப்புடன்

உறவும் நட்பும் என்றும் மகிழ்வுற
அண்டை அசலுக்கு பகிர்ந்துண்டு களித்தோம்
தீபங்களின் ஒளியால் இல்லம் சிறக்க
நேர்மறை எண்ணங்கள் மனதினில் கொண்டோம்

புகைவிடும் சாட்டை கலர் பென்சில்
கம்பி மத்தாப்பு சீறும் பாம்பு
சகலமும் கண்டோம் ஒன்றாய் சேர்ந்து
புஸ்வானமும் தரைசக்கரமும் இரவின் அழகூட்டி

பட்டாசு சத்தம் பாதாளம் பாய்ந்தது
விடியுமுன் துவங்கும் சரவெடி சத்தம்
விடிந்தும் அடங்காத லட்சுமி வெடி
தூரல்மழையாய் விடாது கேட்கும் பிஜிலி

எங்கிருந்தோ வந்து நம்கண்முன் வெடிக்கும் ராக்கெட்டுகள்
நம்வீட்டில் வெடித்ததுபோல் துள்ளி குதிப்போம்
வீதியில் வாகன போக்குவரத்தினிடை எழும்
காதை துளைக்கும் அணுகுண்டு சத்தம்

வயிறு நிறைந்தும் கண் நிறையாது
கைத்துழாவும் குட்டி அதிரசம் தேடி
கொஞ்சம் அஜீரணம் கொஞ்சம் சண்டை
சமாதானம் இடையில் கைகலப்பில்லா யுத்தம்

மறக்கமுடியவில்லை கல்வைத்து ரோல்கேப் வெடித்தது
தீபாவளிமழை வேண்டாம்னு சாமிய வேண்டினது விடுமுறை நீளாதோனு தினம்தினம் ஏங்கியது இனிக்கும் தீபாவளி முடித்தே போனது

சத்தமின்றி ஒழிப்போம் மனமெழும் அரக்கனை
சினம் பொறாமை வஞ்சம் அச்சம்
பகை வெறுப்பு களைவோம் கனிவாக
தீபஒளியில் என்றும் வாழ்நாள் செழிக்கட்டும்

பேச்சில் இனிமை வார்த்தையில் வல்லமை
எண்ணங்களில் எழுச்சி என்றும் தங்க
மகிழ்வுடன் மனமோ நித்தம் குதூகலிக்க
அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (14-Nov-20, 6:20 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 110

மேலே