முத்து முத்தாய்
தேவையறிந்து தெளிந்தோருக்கு
தேவையில்லை தேவர்களின் பார்வை
தீராப்பகையை நெஞ்சில் சுமந்து
தினமும் சினத்தால் சிதைப்பவருக்கும்
திகிலால் தினசரி வாழ்க்கையை
திறமில்லா செய்வோருக்குமே தேவையாம்
தேவர்களின் தேனான பார்வை
ஆதி தமிழருக்கு அனைத்தும் அருகினிலே
அறிவால் உணர்ந்து எதையுமே தெளிந்தனரே
கூர்ந்து நோக்கி ஒலிகளையே
குரலில் கொண்டு பழக்கினரே
ஆழ்ந்து அதனினை உணர்ந்ததனால்
அழகாய் ஒலிக்கு உரு கொடுத்தனரே
தெளிந்து அதனை சீராக்கி
திடமான நெடுங்கணக்கில் வைத்தனரே
உயிர் எழுத்து மெய்யுமென பகுத்து
உயர்வான உயிர்மெய்யை சேர்த்தனரே
மொழிக்கு மூலமான எழுத்துக்களை
முத்து முத்தாய் உருவாக்கி மகிழ்ந்தனரே
வித்தாய் உருவான எழுத்துக்களினால்
விதவிதமான வார்த்தைகளை விதைத்தனரே
விதைகள் விசாலமாய் உலகில் பரவ
விதைத்தவர்கள் விதைகளை செறிவாக்கினரே
செறிவாக்கிய முறைகளே இலக்கணமாம்
சிதையாமல் மொழிதனையே காத்திடுமாம்
கதிரவனோடு பிறந்த மொழி அமிழ்தமிழே
கடவுளருக்கும் பெயர்தந்தது கன்னித்தமிழே
கடன் பெற்று பிறந்த மொழிகள் பலவகைகள்
கடவுளரை போற்றுவதால் மேன்மை பெறுமோ
மதிசெழித்து உழைத்த களைப்பால் மெளனமானால்
சவலை மொழி சமற்கிருதம் சாடை பேசுவதோ
நீசம் என்ற சொல்லால் எம்மை பேசினாலே
தேசந்தோறும் காசம் பற்றி மாள்வார் பாரீர்.
- - - - நன்னாடன்.