கன்றிநீ யாதும் பிறவுயிர்க்கு அல்லல் புரியற்க - கொலை, தருமதீபிகை 707
நேரிசை வெண்பா
என்றும் துயரம் உறாமல் இனிதிருக்க
நன்றோர் உபாயம் நயப்பினோ – கன்றிநீ
யாதும் பிறவுயிர்க்(கு) அல்லல் புரியற்க;
ஈதேமெய் இன்ப நிலை. 707
- கொலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எவ்வழியும் யாதொரு துயரமும் நேராமல் யாண்டும் சுகமாய் நீ வாழ விரும்பின் பிற உயிர்களுக்கு ஒரு சிறிதும்.அல்லலை நீ கருதலாகாது; இதுவே நல்ல இன்ப வாழ்வுக்கு இனிய உபாயம்; இந்த வழியே ஒழுகி அந்தமில் இன்பம் அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தாம் சுகமாய் வாழவேண்டும் என்று விரும்பாத மனிதர் யாரும் இலர். யாவரும் சுக வாழ்வையே ஆவலோடு அவாவி வருகின்றனர். வரினும் கருதிய சுகம் கிடையாமல் பெரும்பாலும் மக்கள் மறுகி உழலுகின்றனர். எண்ணிய இன்பம் எய்தாமல் ஏங்குவதும், எண்ணாத துன்பம் எய்தி வருந்துவதும் மனித வாழ்வின் பாங்குகளாய்ப் படிந்துள்ளன. சுகமும் துக்கமும் வினைகளால் விளைகின்றன. நல்வினை சுகத்தை அருளுகிறது; தீவினை துக்கத்தைத் தருகிறது. இந்த மூல காரணங்களைச் சரியாகத் தெரியாமையினாலேதான் பரிதாபங்கள் பெருகி வருகின்றன. பிழைகள் பீழைகளை விளைத்து விடுகின்றன.
பிற உயிர்களுக்கு அல்லல் நேராமல் நல்ல சீலமாய் ஒழுகிவரின் அவன் எவ்வழியும் உயர்நலங்களையே அடைகிறான்; அவ்வாறு ஒழுகாமல் வெவ்விய தீமைகளை விளைத்துவரின் யாண்டும் அல்லலும் இழிவும் அவலமுமே தொடர்ந்து வருத்துகின்றன.
தான் விரும்புகிறபடியே பிறரும் சுகநலங்களை விரும்புவர்; அந்த விருப்பங்களுக்கு இடர் புரியலாகாது என்னும் உணர்ச்சி மனிதனுக்கு உயர்ச்சியாயிருக்க வேண்டும். இந்தச் சமநோக்கு மனித சமுதாயத்தில் சரியாக அமர்ந்துவிட்டால் பெரிய இன்ப வாழ்வு அங்கே இனிது அமைந்து நிற்கும். துன்பத் தொடர்பெல்லாம் அன்பு நலமற்ற அவலச் செயல்களாலேயே படர்ந்திருக்கின்றன. அன்பு நீங்கிய அளவே துன்பம் ஓங்கியது.
தன்னை ஒருவன் இகழ்ந்து பேசினாலும், இன்னல் செய்தாலும் தன் உள்ளம் துடிக்கிறது; உயிர் பதைக்கிறது; இந்த அனுபவ உணர்வையுடைய மனிதன் பிறர்க்கு இடர்செய்ய நேர்வது என்ன மதியீனம்! அறியாமையால் அல்லல்களைச் செய்து மனித சமுதாயம் எல்லையில்லாத துயரங்களை அடைந்து உழலுகின்றது. துன்பங்களை விளைத்துத் துடித்து அழிவது மடமையாம்.
பிறர்க்குச் செய்த சிறிய இடர்கள் தனக்குப் பெரிய படர்களாய் வருகின்றன. இந்த மருமத்தை நன்கு உணர்ந்தவன் தீய கருமத்தைக் கனவிலும் கருதான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தன்னைத்தான் ஆக்க எண்ணித்
..தான்பிறி(து) ஒன்றைக் கொல்வான்
தன்னைத்தான் கொல்லு கின்றான்;
..தன்உயிர் விடுத்தும் ஒன்று
தன்னைத்தான் கொல்லா தான்காண்
..தன்னைமுன் நோக்கு கின்றான்
தன்னைத்தான் நோக்கு கின்ற
..தத்துவர் இட்டம் ஈதால். – சிவ இதோபதேசம், சிவப்பிரகாசம்
பிறிதொன்றைக் கொல்கின்றவன் தன்னையே கொல்கின்றான் என்னுமிது ஈண்டு உன்னி உணரவுரியது. செய்த தீவினையாளன் எவ்வழியும் உய்தியிலனாய் உறுதுயர் உழந்து படுகின்றான். தான் புரிந்த வினை தன்னையே வளைந்து கொள்கிறது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
ஓருயிர் தன்னைக் கோறல்செய் தோர்கள்
..உயிரினை அவ்வுயிர் எய்திச்
சோர்வுறக் கொல்லும்; ஆதலால் கோறல்
..ஆதல்மற்(று) ஒழிந்திட வேண்டும்;
தேரிடின் சிவனா லயத்தினோர் புழுவா
..யினும்உயிர் செகுத்தவர் திரைசெய்
வார்கடல் உலக முழுதும்செ குத்த
..பாவத்தை அடைகுவர் அன்றே. – இலிங்க புராணம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
யானுயிர் வாழ்தல் எண்ணி எளியவர் தம்மைக் கொல்லின்
வானுயர் இன்ப மேலால் வருநெறி திரியும் அன்றி
ஊனுயிர் இன்பம் எண்ணி எண்ணமற்(று) ஒன்றும் இன்றி
மானுயிர் வாழ்வு மண்ணில் மறித்திடும் இயல்பிற்(று) அன்றே. - யசோதர காவியம்
பிறவுயிர்களைக் கொல்வதால் தனக்கு விளையும் அழிவு நிலைகளை மனிதன் உணர்ந்து யாண்டும் இனியனாய் வாழவேண்டும் என இவை உணர்த்தியுள்ளன. எவ்வுயிர்க்கும் யாதும் அல்லல் புரியாமல் எவ்வழியும் நீதிமானாய் நெறியுடன் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.