கள்ளப் பழிமக்கள் அந்தப் படுவினையைச் செய்தேன் அழிகின்றார் - பழி, தருமதீபிகை 717
நேரிசை வெண்பா
கள்ளன் எனும்பேர்தான் காதிலுறக் கேட்டாலும்
உள்ளம் கசந்துள் உளையுமே - கள்ளப்
பழிமக்கள் அந்தப் படுவினையைச் செய்தேன்
அழிகின்றார் அந்தோ அவம். 717
- பழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கள்ளன் என்னும் பெயரைக் காதில் கேட்டாலும் உள்ளம் உளைந்து உயிர் வருந்துகிறது; பொல்லாத இழிவான அந்தக் களவைச் செய்து மனிதர் பழியடைந்து பாழாயழிவது கொடிய பரிதாபம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இழிவான செயல்களால் மனிதன் பழிபாவங்களை அடைந்து பாழாகின்றான். கள்வன், திருடன், சோரன் என்னும் மொழிகள் பழியான பெயர்களாய் இழிவு குறித்து வந்துள்ளன. பிறர் வருந்தி ஈட்டி வைந்துள்ள பொருளைக் கரவாய்ப் புகுந்து கவர்ந்து செல்பவன் கள்வன் என நேர்ந்தான். ஆகவே சமுதாயத்துக்கு அவன் எவ்வளவு கொடிய தீய நோய் என்பது எளிது தெளிவாம். ஈனச் செயலால் மானம் மரியாதைகளை அடியோடு இழந்து அவன் குடியோடு இழிந்து அழிந்து போவான்.
’களவு அழகைக் கெடுக்கும்’ என்பது பழமொழி. கள்ளன் என ஒருவனைச் சுட்டிச் சொல்லின் அது எள்ளல் இளிவுகளைச் சுட்டிக் காட்டி ஈன நிலையை நீட்டி நிற்கும். எல்லாரும் வெறுத்து இகழுகின்ற பொல்லாத களவைத் தழுவி இழிவது அவலக் கேடாய் நின்றது.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282 கள்ளாமை
களவை மனதால் நினைத்தாலும் பாவம் என வள்ளுவர் இவ்வாறு பரிந்து கூறியிருக்கிறார். நெஞ்சால் நினைத்தாலும் அந்த உயிரை நாசப்படுத்துகிற நீசத் தீமையைக் கூசாது செய்கின்றாரே! ஐயோ! எவ்வளவு மதியீனம்! எத்தனை கேடு! என்று தெய்வப் புலவர் பரிதவித்திருக்கிறார். பழி நிலையில் இழிந்து பாழாய் அழிகின்றாரே! என்று அவரது அழிவு நிலைக்கு இரங்கியிருப்பது துணுகி உணர வந்தது.
களவினால் பழியும் துயரமுமே அன்றி வேறு யாதொரு பலனும் கிடையாது. அதனால் ஒரு வேளை பொருள் சேர்ந்தாலும் அது விரைந்து அழிந்து அவலக் கேடாகவே முடிந்து விடும்.
“Thefts never enrich.” (Emerson)
’களவுகள் ஒருபோதும் செல்வத்தை உண்டாக்காது’ என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிறார். தன்னை வஞ்சித்துக் கவரும் கள்வனைச் செல்வம் எள்ளி வெறுத்து இகழ்ந்து போதலால் அவன் ஏமாந்து ஈனத் துயரங்களையே அடைந்து நிற்கின்றான். திருடு அறிவைக் குருடுபடுத்தி விடுதலால் அந்த உயிர்வாழ்வு எவ்வழியும் இருளாய் மருள்மண்டி மயலுழந்தே உழலுகின்றது.
’குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’ என்னும் பழமொழியால் கள்ள மனத்தின் அல்லல் நிலையை அறிந்து கொள்ளலாம்.
Suspicion always haunts the guilty mind: The thief doth fear each bush an officer. (King Henry 6)
குற்றமுள்ள மனத்தைச் சந்தேகம் எப்பொழுதும் வேட்டையாடுகிறது; தன்னைப் பிடிக்க வருகிற காவலாளி என்று புல்புதர்களையும் கண்டு கள்ளன் அஞ்சுகின்றான்' என்னுமிது இங்கு அறியவுரியது. நெஞ்சம் கலங்க நெடுந்துயர்களாகின்றன.
அல்லலும், திகிலும், அச்சமும் கள்ளனை எப்பொழுதும் கொல்லாமல் கொல்கின்றன; அப்படியிருந்தும் அந்தப் பொல்லாத பழியில் இழிந்து புகுந்து அவன் புலையாடி அலைகின்றான்,
களவு நிலையில் அகப்பட்டால் கள்ளன் அடியும் மிதியும் பட்டு அவமானம் அடைகிறான்; அரச தண்டனையுறுகிறான்; மறுமையில் கொடிய நரக வேதனையில் அழுந்தி நைந்து படுகிறான். களவால் இவ்வாறு பழி துயரங்கள் தொடர்ந்து அடர்ந்து வருதலால் அதனை ஒழிந்து ஒழுகும்படி மேலோர் பரிந்து உணர்த்தியுள்ளனர்.
கலி விருத்தம்
(காய் காய் காய் மா)
முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
வளவிறுயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்குங்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே. 272 முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி
பிளவுகெழு வெழுநரகம் எரிகொளுவல் ஈர்தல்
உளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும்
கிளையறவு தருமரிய புகழினைய ழிக்கும்
களவுநனி விடுதலறம் என்றுகரு தென்றான். - சாந்தி புராணம்
களவினால் இவ்வாறு அளவிடலரிய துயரங்கள் உளவாகின்றன; அப்பழி நிலையில் இழியாமல் வாழ்வதே நலமாம் என இவை குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்க வேண்டும். கள்ளரை யானைக் காலில் இடுவதும், அதன் கொம்பால் குத்திக் கொல்லச் செய்வதும் பண்டு இந்நாட்டில் அரச தண்டனையாயிருந்து வந்துள்ளமையை ’நாகம் எயிறு உழுது கீற’ என்றதனால் அறிந்து கொள்கிறோம். இழிவும் அழிவும் களவால் விளைகின்றன.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281 கள்ளாமை
இன்னிசை வெண்பா
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை. 86 நான்மணிக்கடிகை
இவற்றை ஈண்டு உள்ளி உணர வேண்டும். எள்ளல் இழிவுகள் நேராமல் நல்ல மேன்மையை ஒருவன் அடைந்து வாழ வேண்டுமானால் கள்ளாமையை விரதமாகக் கருதிப் பேணி உறுதியோடு யாண்டும் அவன் ஒழுக வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.