அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்
அச்சமில்லை அச்சமில்லை
முண்டாசு கவி முழங்கினான் அன்று
அச்சமிங்கு துச்சமென்று
முண்டாசுகளால் குலுங்குது நாடு.
கலப்பை ஏந்தும் கரத்திலின்று
பதாகை ஏந்தும் பரிதாபம் காணீர்
துடிப்பை கண்டும் தூர நிற்கும்
செருக்குடன் சிந்தை சிரிப்பது காணீர்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகென்றே
செப்பும் எம் மறைமொழி கூற்றாகும்
மறந்தும் பேணோம் மக்கள் நல மென்றே
பசப்பும் மதியிலிகாள் பேச்சாகும்.
தொழுதுண்டு வாழ்த்த வேண்டோம் யாம்;
தடிகொண்டு தாக்காததே போதும்.
அழுதுண்டு அடமேற்று மறம் மறந்தாரே
வழியுண்டு வேட்கையுடன் அறம் காத்தீரே!
பெருவணிகன் பெருஞ்செல்வம் ஈட்டிடவே,
பார்த்து பார்த்து புனைவர் வெறுஞ்சட்டம்.
சிறுவிவசாயி செத்து விழும் நிலை மாற
குறுந்திட்டமும் நினைத்திடாத மூடர்காள்
உழவுக்கும் தொழிலுக்கும் யாம்
வந்தனை வேண்டோம் !
ஊழல் கார்போரேட்டுக்குதவி
நிந்தனை செய்யேல் !
குறள் உரைத்து எமை ஏய்த்து !
யாது கண்டீர் மதியிலிகாள்!
குறள் கருத்துணர்ந் து வழி நடந்தே
தீதொழிக்க திட்டம் காண்பீர்!
ஏரெழுபதீந்த கம்பரை கேட்பீர்!
ஏரேந்திய தோள் உலகேந்து மென்பார் !
திரை போட்டு வரைவு இயற்றி
வெறுமுரல் இடித்தல் தீதன்றோ?
கறை போக்க மனந் திருந்தி
அருங்குரலை செவி மடுப்பீர்!
மறம் மறந்து அறம் பிறழ்ந்தால்,;
வரலாற்றின் கறை யாவீர் முடிதுறந்தே.