இன்பம் கருதி இயலும் மனிதயினம் பண்ணுமோ பாவம் படிந்து - பாவம், தருமதீபிகை 721
நேரிசை வெண்பா
இன்பம் கருதி இயலும் மனிதயினம்
துன்பம் மருவித் துடித்தல்தான் – என்பயனென்(று)
எண்ணி ஒருவன் இடர்நீங்கி வாழுமேல்
பண்ணுமோ பாவம் படிந்து. 721
- பாவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எவ்வழியும் இன்ப சுகங்களையே நாடி மனிதக் கூட்டம் இயங்கி வருகிறது; வரினும் துன்பங்களை அடைந்து துடிக்கின்றன. அதற்குக் காரணம் என்ன? என்று ஒருவன் கருதி உணர்வானானால் பின்பு யாண்டும் அவன் இடர் செய்யான்; எவ்வழியும் இனியதே செய்து உயர்ந்து உய்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உண்மை நிலைகளை ஊன்றி உணராமையினாலேயே மனிதன் புன்மையடைந்து புலையுறுகின்றான். அறியாமை, மடமை, அஞ்ஞானம் என்னும் மொழிகள் மனிதன் மதிகேடனாய்ப் மறுகியுழலும் இழிநிலைகளை வெளியே தெளிவாக விளக்கி நிற்கின்றன. கெட்ட நினைவுகளால் கேடுகள் விளைவதை உய்த்துணராமல் ஊனமாயுழல்வது யாண்டும் கொடிய ஈனமேயாம்.
ஏதேனும் துன்புற நேரின், எவனும் அஞ்சி அலமருகின்றான். இன்புறவரின் உள்ளம் உவந்து கொள்ளுகின்றான். இந்த அனுபவ நிலைகள் மனித சமுதாயத்துள் யாண்டும் மருவியுள்ளன. இன்ப நலங்களையே என்றும் இயல்பாக அவாவியுள்ள மனிதன் அதற்குரிய மூலகாரணங்களை எவ்வழியும் மறவாமல் செவ்வையாய்ச் செய்து வரவேண்டும்.
துன்பங்கள் யாவும் தீவினைகளிலிருந்து விளைந்து வருகின்றன. வித்தும் விளைவும் நன்கு உய்த்து உணர வுரியன.
இன்பங்கள் எல்லாம் நல்வினைகளிலிருந்து உளவாகின்றன. தாம் செய்த வினைப்பயன்கள் தம்பால் வந்து சேருதலால் மக்கள் அந்த வினைப்பயன்களை அனுபவிக்க நேர்ந்துள்ளனர்.
இந்த உண்மையை, உணர்ந்து கொள்வதே மனிதனுக்கு முதன்மையான நன்மையாம். ஆகவே மெய்யறிவாளனான.அவன் வெய்ய துயரங்களை நீங்கிச் செய்யனாய் உய்தி பெறுகின்றான்.
மனிதனுடைய வாழ்வும், அவன் அடைகிற சுகதுக்கங்களும் அவன் செய்த வினைகளின் வழியே வந்துள்ளன. வேறு எந்த வகையிலிருந்தும் அவை வரவில்லை. தன் சொந்த விளைவையே துய்க்க உரியவனாய் எந்த மனிதனும் இங்கு வந்திருக்கிறான்.
நல்ல சுகபோகங்களை நல்வினையே நல்கி வருதலால் அதனைச் செய்தவன் சிறந்த பாக்கியவானாய் உயர்ந்து இன்ப நலங்களை நுகர்ந்து வருகிறான். விதைத்தவன் அதன் விளைவுகளை அடைகிறான்.
நேரிசை வெண்பா
நல்வினைப்பின் அல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பின் ஆயினும் - நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுதும் இல். 76 அறநெறிச்சாரம்
செல்வத்தின் அதி தேவதையான இலட்சுமி நல்வினையாளரையே நயந்து நிற்பாள்; அவர் பின்னேயே எப்பொழுதும் தொடர்ந்து செல்வாள்; பிறரைத் திரும்பியும் பார்க்க மாட்டாள்; இவ்வாறு திருவை வசப்படுத்தியுள்ள நல்வினைதான் யாதெனின், உண்மையறிவும், ஒழுக்கமும், உபகாரமுமேயாம் என இது உணர்த்தியுள்ளது. தூலம், சூக்குமம், காரணம் என மனிதனுக்கு மூன்று சரீரங்கள் அமைந்திருத்தல் போல் உபகாரம் முதலிய மூன்றும் நல்வினைக்கு உருவங்களாம்; ஆகவே அந்த உண்மை ஈண்டு நுண்மையாக உணர வந்தது.
செல்வம் முதலிய பல்வகை நலங்களையும் உதவி நல்வினை இன்பங்களை ஊட்டும்; வறுமை முதலிய சிறுமைகளைத் தந்து தீவினை துன்பங்களைக் கூட்டுமாதலால் அல்லலான பாவத்தை மனிதன் யாதும் அணுகலாகாது. அணுகின் அவலமேயாம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
நல்வினை அடைந்த காலை
..நனிநலம் திளைப்பர் நன்மை;
அல்வினை அடைந்த காலை
..அல்லலில் துளைவர், எல்லாம்
தொல்வினை வழிய தாகும்,
..தோன்றனு பவங்கள் தந்தம்
புல்வினை யாலென்(று) எண்ணல்
..புலமையோ ரிடத்தின் றாமால். - குசேலர்
தான் செய்த நல்வினையினால் ஒருவன் இன்பம் அடைகிறான்; அல்வினையால் அல்லலுறுகிறான் என வினையின் விளைவுகளை விழிதெரிய விளக்கி இது தெளிவாக உணர்த்தியுளது.
தான் சுகமாய் இனிது வாழவேண்டும் என்று விரும்புகிறவன் அவமான காரியங்களைச் செய்யலாகாது. செய்தால் வெய்ய துயரங்கள் தொடர்ந்து வருத்தும்; அப்பொழுது ஐயோ! என்று அழுது பதைப்பதால் யாதும் பயன் இல்லை; முன்னதாகத் தீதுசெய்யாமல் ஒதுங்கி வாழ்வதே இனிய உய்தியாகும்.
பாவம் என்னும் சொல் பயங்கரமானது; கொடிய துயரங்களைத் தருவது என்னும் குறிப்பினையுடையது. மனிதன் செய்கிற தீய செயல்களே பாவமாய்ப் பழுத்து வருவதால் அது நோய்களை விளைத்து நொந்து தவிக்கச் செய்கிறது.
தீவினை மறமே செடியே அகமே
துரிதம் கலுடம் பாவம் ஆமே. - பிங்கலம்
பாவத்தின் பெயர்கள் இங்ஙனம் குறிக்கப்பட்டுள்ளன.
கொடிய தீமைகளின் பிண்டமே பாவம் என நின்றது. பிறர் அஞ்சி வருந்தத்தக்க துன்பங்களைச் செய்பவர் பாவிகளாய் வருதலால் அவர் யாவராலும் வெறுக்கப்பட்டு அடுநரகங்களை அடைந்து படுதுயரங்களையே உறுகின்றார்.
பொல்லாத பாவத்தோடு ஒருவன் பழக நேர்ந்தபோதே நல்ல இயல்புகள் எல்லாம் அவனை விட்டு விலகி விடுவதால் விடத்தினும் கொடியனாய் விரிந்து எத்திறத்தும் துயர் விளைத்து இழிந்து படுகிறான்.
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
அறத்தைத் தின்றருங் கருணையைப் பருகிவே(று) அமைந்த
மறத்தைப் பூண்டுவெம் பாவத்தை மணம்புணர் மணாளர்,
நிறத்துக் காரன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாய்
புறத்துப் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார். - 6
- மூலபல வதைப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்
மூல பலத்தில் சேர்ந்துள்ள அரக்கர் சிலரை இது குறித்து வந்துள்ளது. அருள், அறம் யாதும் அறியாதவர்; கோபத்தோடு கொலைகளே புரிபவர்; பாவத்திலேயே புரண்டு களிப்பவர் எனக் கவி அவரை இவ்வாறு விளக்கியிருக்கிறார். ’பாவத்தை மணம் புணர் மணாளர்’ என்று குறித்திருக்கும் குறிப்பு கலைச்சுவை தோய்ந்து உவப்பு வாய்ந்து வியப்பை விளைத்துள்ளது.
பாவம் கொடிய துயரங்களை விளைத்து உயிரைப் பாழ்படுத்தும்; அதனோடு சிறிதும் பழகலாகாது; இனிய நீர்மைகளையே பழகிப் புனிதனாய் உயர்ந்து தனிமகிமைகளை உரிமையாய் அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.