உற்ற பிறவிக்கு உரியபயன் ஒண்புகழே - புகழ், தருமதீபிகை 731
நேரிசை வெண்பா
உற்ற பிறவிக்(கு) உரியபயன் ஒண்புகழே;
பெற்றவனே எவ்வழியும் பேறுடையான் - மற்றவன்
மானுடனாய் வந்தாலும் மாண்பிழந்து போனமையால்
ஊனுடம்பே இல்லை உயிர். 731
- புகழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அரிய மனிதப் பிறவிக்கு உரியபயன் இனிய புகழே; அதனைப் பெற்றவனே சிறந்த நிலையில் பிறந்தவன் ஆகின்றான்; அங்ஙனம் பெறாதவன் பிறந்திருந்தும் பிறவாதவனாய் இழிந்து போகின்றான்; இழிபழி தெளிந்து உயர்ந்து கொள்க என்பதாம்.
பிறவிகளுள் மனிதப்பிறப்பு உயர்ந்தது. மிருகம் பறவை முதலியன சிறந்த அறிவுநலம் அமையப் பெறாதன. ஆதலால் அவை இழிந்தனவாய் நின்றன. நன்மை தீமைகளை நாடியறிந்து உண்மை தெளிந்து உறுதியான உயர்நிலைகளை அடையவுரிய தகுதி வாய்ந்துள்ளமையால் மனித மரபு வேறு பிராணி வகைகளினும் மேன்மையான மதிப்பு மிகுந்து நின்றது. சீவ கோடிகளுடைய செயல் இயல்கள் அதிசய விசித்திரங்களுடையன. யூகித்து உணர்வதில் உயர்ச்சிகள் வேகித்து விளைந்துள்ளன.
யூக விவேகங்களும் இனிய பண்பாடுகளும் மனித சாதியை மகிமைப்படுத்தி வருகின்றன. அரிய கருமங்கள் உரிய பயன்களோடு மருவி வரும்பொழுது அவை பெரிய கருமங்களாய்ப் பெருகி நின்று யாண்டும் பேர் பெற்று நீண்டு நிலவுகின்றன.
ஒரு மனிதனை உலகம் புகழ்ந்து போற்ற வேண்டுமானால் அவனிடம் சிறக்க தன்மைகள் அமைந்திருக்க வேண்டும், உயர்ந்த நீர்மையாளரை எவரும் வியந்து போற்ற நேர்கின்றனர். அரிய நீர்மைகளைக் கொண்டே தெய்வங்களையும் மனிதர் பெருமையாய்ப் பேசி வருகின்றனர். புகழால் உயர்ந்த தெய்வங்களை ஆசையோடு பூசனைகள் புரிந்து வழிபடுகின்றனர். கீர்த்திகள் வார்த்தைகளால் துதிக்கப்படுதலால் அவை கீர்த்தனைகள் என வந்தன. புண்ணிய நீர்மைகளை எவரும் கண்ணியமாய் எண்ணி இன்புறுகின்றனர். புகழ் மணம் கமழ்ந்து வருதலால் அவை உயரொளி வீசி எவ்வழியும் திவ்வியமாய் உலாவி வருகின்றன.
மன்னுயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையைநின் புகழொடும் பொலிந்தே;
நின்ஒக்கும் புகழ் நிழலவை
பொன்ஒக்கும் உடையவை
எண்ணிறந்த புகழவை எழில் மார்பினவை. - பரிபாடல்
திருமால் இவ்வாறு புகழப்பட்டுள்ளார்; அளவிடலரிய புகழையுடையவர்; புகழாகிய நிழலிலே பொலிந்து விளங்குபவர் என்றதனால் புகழ் எவ்வளவு உயர்வுடையது; எத்துணை மகிமை வாய்ந்தது! என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். தேவதேவனும் புகழால் சீவஒளி மேவித் திவ்வியமாய் விளங்குகின்றான். பரமனுக்கும் புகழ் பரிசு தந்து வரிசை செய்துள்ளது.
இத்தகைய புகழை மனிதன் ஓரளவாவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும். வித்திலிருந்து விளைவு தோன்றுதல் போல் நல்ல குணங்களிலிருந்தே புகழ் தோன்றுகின்றன. புகழை விளைக்கத்தக்க இனிய நீர்மைகளை எவ்வளவுக்கு எவ்வளவு மனிதன் மருவி வருகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் புனிதமான மகிமையுடையவனாய் உயர்ந்து திகழ்கிறான். பெற்ற புகழின் அளவைக் கொண்டே ஒருவன் பிறந்த பிறப்பு மதிக்கப்படுகிறது. எவன் புகழ் பெறவில்லையோ அவன் பிறப்பு பழிபட்டதாய் இழிந்து எவ்வழியும் பாழ்படுகின்றது.
தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 236 புகழ்
மனிதன் என்று ஒருவன் பிறந்தால் புகழுக்கு உரிய குணங்களோடு அவன் பிறக்க வேண்டும்; அங்ஙனம் இல்லையானால் அவன் பிறப்பதை விடப் பிறவாமல் ஒழிந்து போவதே நல்லது என வள்ளுவர் இங்ஙனம் வரைந்து கூறியிருக்கிறார். உரையில் மருவியுள்ள பரிவும் வேகமும் ஊன்றி உணரவுரியன. மனிதன் புகழுடையவனாக வேண்டும் என்னும் ஆவல் வள்ளுவர் உள்ளத்தில் ஊடுருவியுள்ளதை உரைகள் உணர்த்துகின்றன.
அருமையான சிறந்த மனிதப் பிறப்பில் பிறந்தும் அதற்கு உரிமையான புகழை அடைந்து கொள்ளாமல் வறிதே ஒருவன் நெடிது வளர்ந்திருப்பது பெரிய பழியாம்; பழியான அவன் மனித உருவில் மருவியிருப்பது அதற்கு ஓர் இழிவாம்; ஆகவே அவனது இருப்பு வெறுப்பாயது; உயிரின் பயனில்லாத அவன் இருப்பதினும் இல்லாமல் மறைந்து விரைந்து ஒழிந்து போவதே நல்லது என்பார் ’தோன்றாமை நன்று’ என்றார்.
இழிந்த ஆடு மாடுகளாய்ப் பிறந்திருப்பின் அவை புகழடையவில்லை என்று யாரும் இகழ்ந்து சொல்லார்; உயர்ந்த அறிவுடைய மனிதனாய்ப் பிறந்திருந்தும். அதற்குத் தகுந்த பயனை அடையானாயின் அவன் வாழ்வு மிகவும் கடையாம்.
மனிதப் பிறப்புக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமையை மேலே வந்துள்ள அருமைத் திருக்குறளால் நன்கு உணர்ந்து கொள்கிறோம். புகழை உரிமையாகப் பெறுவதே பிறவிப்பயனாம்.
பிறந்த பிள்ளை சிறந்த குணமுடையதாயின் பெற்றோர்க்கு மகிழ்ச்சி, அந்தக் குடிக்கும் பெருமையாம்; உலகில் தோன்றிய மனிதன் ஆன்ற புகழுடையனாயின் மனித சமுதாயம் இனிது மகிழும்; அந்த நாட்டுக்கும் ஏற்றமான நன்மையாம்.
ஒருவனுடைய குணமும் செயலும் இனியனவாயின் பிறர்க்கு அவை மகிழ்ச்சியைத் தருவதால் உள்ளம் உவந்து அவர் அவனைப் புகழ்ந்து பேசுகின்றார். அவ்வாறு புகழ் மொழிகளால் ஒளி பெற்று விளைந்து வந்தது எதுவோ அது புகழ் வந்தது.
புகழை எவரும் எளிதில் அடைய முடியாது; அரியன செய்பவரே அதனை அடைய நேர்கின்றார். நல்ல பலனைப் பெற விரும்பினவர் அல்லலுக்கு அஞ்சாமல் ஆண்மையோடு முயன்ற போதுதான் யாண்டும் உயர்ந்த மேன்மை யுறுகின்றார்.
The heart that is soonest awake to the flowers Is always the first to be touch’d by the thorns. - Thomas Moore
இனிய மலர்களை விரைந்து பெற விரும்பினவன் முதலில் முட்களால் தாக்கப்படுகின்றான்” என்னும் இது இங்கே நோக்கவுரியது.
பெரும் பிரயாசையால் அடைதலினாலேதான் புகழ் அருமையும் பெருமையும் இனிமையும் உடையதாய் யாண்டும் மருவியுள்ளது. வேண்டி அடைந்தது வியன் சுவை நீண்டது.
Sweet is pleasure after pain. - Dryden
’உற்ற வருத்தத்திற்கு பின்பு தான் பெற்ற சுகம் பெரிதும் இனிமையாயிருக்கிறது’ என ட்ரைடன் என்னும் ஆங்கில அறிஞர் உழைப்பின் சுவைநுகர்ச்சியை இங்ஙனம் குறித்திருக்கிறார்.
No pains, no gains.
’உழைப்பு இன்றேல் ஊதியம் இல்லை’ என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது.
உடலுக்கு ஊதியம் ஆன பொருளை அடைவதினும், உயிருக்கு ஊதியமான புகழை அடைவது மிகவும் அருமையாம். அரிய ஆண்மையுடைய விழுமிய மேன்மையினரே புகழை அடைய நேர்கின்றார். புகழ் பெறுவது வித்தகத் திறலாய் விளங்கியுளது.
உண்மையான புகழைப் பெற முடியாதவரும் வெறும் புகழ்மொழியால் உள்ளம் உவந்து கொள்ளுகின்றார். புகழ்ச்சியான சொல் எந்த மனிதனுக்கும் மகிழ்ச்சியை விளைத்து விடுகின்றது. இகழ்ச்சியாளனும் அதற்கு ஏங்கி நிற்கின்றான்.
“Praise enough to fill the ambition of a private man.” [Cowper]
"ஒரு மனிதனுடைய அந்தரங்க ஆசையைப் பூர்த்தி செய்யப் புகழ்ச்சிமொழி ஒன்றே போதும்” எனக் கவுப்பர் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் ஆய்ந்து கூறியிருக்கிறார்.
ஆன்ம தாகத்தை அடக்கி ஆனந்தம் புரிந்து வருதலால் புகழில் ஏதோ ஒரு தனியான இனிமை மருமமாய் மருவியுள்ளது என அனுபவ நிலையில் நுணுகி இனிதுணர்ந்து கொள்கிறோம்.
Fame is the spur that the clear spirit doth raise. (Milton)
புகழ்ச்சி மனிதனுக்கு எழுச்சியை ஊட்டும் கருவியாயுள்ளது” என மில்ட்டன் இவ்வாறு குறித்திருக்கிறார். ஒருவனைப் புகழ்ந்து கூறின் அவன் விரைந்து காரியம் செய்ய நேர்கின்றான்.
தன் தகுதிக்கு மிஞ்சிய காரியத்தையும் புகழின் நசையால் மனிதன் செய்யத் துணிகின்றான். புகழ்மொழி கூறித் தூண்டிய பொழுது பேடியும் வீரன் போல் போரில் மூண்டு பாய்ந்து மாண்டுபட நேர்கின்றான். அதில் ஒரு மாய மோகம் மருவியுளது.
“Folly loves the martyrdom of Fame.” (Вyron)
"புகழ் மருவிய மரணத்தை மடையனும் அடைய விரும்புகிறான்’ என ஆங்கிலக் கவிஞராகிய பைரன் இங்ஙனம் பாடியிருக்கிறார். இசையின் நசையால் இனிய உயிரையும் விடுகிறான்.
மனித சமுதாயத்துக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமையும், அதன்பால் அது கொண்டுள்ள ஆவலும் மோகமும் செயல் இயல்களால் பலவகைகளிலும் தெரிய வந்துள்ளன.
தன்னை உரிமையாக உடையவனை மண்ணுலகமும் விண்ணுலகமும் பெருமையாக எண்ணித் துதிக்கும்படி செய்தருளுதலால் புகழ் எவ்வளவு மகிமையுடையது' என்பதை எளிதே உணர்ந்து கொள்ளலாம். சிறந்த பிறவிப் பேறாகவும், உயர்ந்த உயிர் ஊதியமாகவும் புகழ் உவந்து போற்றப்பட்டுள்ளது. அதனை அடைந்து கொள்வதில் அரிய பல பொருள்களையும் இனிய உயர் நிலைகளையும் பெரியோர் துறந்து விடுகின்றனர்.
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்' (புறம்) என விழுமிய மேலோரது நிலைமையைக் குறித்து இளம்பெருவழுதி என்னும் பழம்பெரும் புலவர்.இவ்வாறு விளம்பியிருக்கிறார்.
இத்தகைய புகழைப் பெற்றவர் எத்தகையோரும் வியந்து போற்ற யாண்டும் வித்தகராய் விளங்கி நிற்கின்றனர். அரிய புகழ் பெரிய மாட்சியாய் ஆட்சி புரிகிறது.
’புகழ்ச்சியான் போற்றாதார் போற்றப்படும்' (நான்மணிக்கடிகை)
புகழுடையானைப் பகைவரும் போற்றுவர் எனயிது புகழ்ந்திருக்கிறது. பொன்னினும் புகழ் வலியுடையதாய் மன்னியுளது.
இன்னவாறு புகழ் மனிதனுக்கு அதிசய மகிமையாய் அமைந்திருத்தலால் அதனை எவரும் உரிமையோடு மருவிக் கொள்ளவேண்டும். ஒருவனுடைய உருவத் தோற்றத்துக்கு இட்டபெயர் புகழோடு ஒட்டிய பொழுது அது உயர்வாய் ஒளி வீசுகின்றது. பேர் சீரோடு சேரின் பாரோடு படர்கின்றது.
ஊரும் நாடும் உலகமும் புகழநேரின் அந்தப் பேர் பெருங்கீர்த்தியாய் விளங்க நேரும். நாடு புகழ ஒருவன் பீடு பெறாது போயினும் தோன்றிய ஊரளவாவது புகழ் பெற வேண்டும். அது கூடப் பெறானாயின் அவன் தோற்றம் ஏற்றம் இழந்து தூற்றப்படும். உயிர்ப் பயன் இழந்தது துயர்ப்பட நேர்ந்தது.
’ஊன் உடம்பே உயிரில்லை’ என்றது புகழில்லாத புலையைப் புலப்படுத்தி நின்றது. புகழ் பெறவில்லையானால் அந்த மானுடன் வாழ்வு ஈனமாயிழிந்து கழிகின்றது. உயிரின் ஒளியான புகழை அடையாத போது அந்த மனிதன் உருவோடு உலாவித் திரிந்தாலும் ஒரு நடைப் பிணமேயாவான். புகழ் பெறாதவன் பழிபடிந்து பாழடைந்தான்.
உன் பிறப்பின் பெருமையை இழந்து சிறுமையாய்ப் போகாதே; சிறப்பான புகழை விரைந்து அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.