சீரும் சிறப்பும் செயலியல்கள் ஆகிவரின் பேரும் புகழும் பெருகும் - புகழ், தருமதீபிகை 732
நேரிசை வெண்பா
சீரும் சிறப்பும் செயலியல்கள் ஆகிவரின்
பேரும் புகழும் பெருகியே - யாரும்
உவந்து புகழ உலகம் முழுதும்
நிவந்து நிலவும் நிலைத்து. 732
- புகழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தன்னுடைய குணம் செயல்கள் சீரும் சிறப்பும் அமைந்துவரின் அவனிடம் பேரும் புகழும் பெருகி வரும்; அதனால் உலகம் புகழ்ந்து மகிழ அவன் உயர்ந்து விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் புகழ் விளையும் புலன் உணர்த்துகிறது.
எண்ணம், சொல், செயல் என்னும் இந்த மூவகை நிலைகளாலேயே மனித சாதி இயங்கி வருகிறது. இம்மூன்றனுள்ளும் செயலே தலைமையாயுள்ளது. ஒருவனது நிலைமையை அளந்து அறிவதற்கு இது சிறந்த கருவியாய் எங்கும். விளங்கி நிற்கிறது.
ஒருவனிடம் இதமான இனிய செயல்கள் நிகழ்ந்துவரின் மனித இனத்துள் அவன் தனி நிலையில் உயர்ந்து திகழ்கிறான். உலகமும் அவனை உவந்து புகழ்ந்து வருகிறது. பயனும் பண்பும் உடைய மனிதனை எவரும் வியனாக வியந்து பேசி வருதலால் அவனது பேரும் புகழும் திசைகள் தோறும் விரைந்து பரவ நேர்கின்றன.
அயிந்தன் என்பவன் ஒரு சிறந்த அறிஞன்; பெருந்தன்மையாளன்: பேருபகாரி, ஆலஞ்சேரி என்னும் ஊரினன். நிறைந்த நிலபுலங்களையுடையவன்; இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவன். அந்நாளில் சங்கப் புலவர்களைப் பாண்டிய மன்னன் அன்போடு ஆதரித்து வருங்கால் நாட்டில் கொடிய பஞ்சம் தோன்றியது. அது நெடிது நீண்டு நின்றமையால் சங்கத்தார் அங்கங்கே பிரிந்து போக நேர்ந்தனர். அவருள் சிலர் இவனை வந்தடைந்தனர்; அந்தப் புலவர்களைக் கண்டதும் இவன் பெருமகிழ்ச்சி கொண்டு உரிமையோடு உவந்து உபசரித்தான்; தன்பால் இருந்தருளும்படி அன்பால் வேண்டினன். அவரும் அங்கு இசைந்திருந்தார். மதிநலமுடைய அவரை மிகவும் மரியாதையோடு இவன் பேணி வந்தான். பஞ்ச நிலையால் புலவர் பிரிந்து போனதை நினைந்து வழுதி வேந்தன் வருந்தித் தன்னிடம் வந்தருளும்படி தூதரை ஏவினான். அவர் பல இடங்களிலும் தேடி அலைந்து முடிவில் இவனிடம் வந்து அரசன் ஏவியதை உரைத்தார். காவலன் ஆணையை அறிந்ததும் பாவலரை இவன் ஆவலோடு தொழுது வணங்கிப் பரிசில் பல தந்து வரிசை செய்து அனுப்பினான். அவர் அரசனை வந்து கண்டார். அவரைக் கண்டதும் பாண்டியன் ஆர்வம் மீதூர்ந்து அளவளாவினான். இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? எவ்வாறு வாழ்ந்தீர்கள்? என்று அன்புரிமையோடு அவரது சேம நலங்களை விசாரித்தான். வேந்தன் அவ்வாறு வினவியபோது புலவர்கள் இந்த உபகாரியின் நிலைமையை உள்ளம் உவந்து உரைத்தார். பாவலராதலால் பாவால் மொழிந்தார். அது அயலே வருவது காண்க.
ஆசிரியப்பா
காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
வேலையும் குளனும் வெடிபடச் சுவறித்
தந்தை தாய்மக் கண்முகம் பாராமல்
வெந்த சாதமும் வெவ்வே றருந்திக்
குணமுடன் நாளும் கொடுத்து உறவாண்ட
கணவனை மகளிர் கண்பா ராமற்
பழுத்த வுடலம் பசையற வற்றி
விழித்த விழியெலாம் வேற்றது விழியா.(18)
அறவுரை யன்றி மறவுரை பெருகி
உறவற மொழிந்த ஊழி காலத்தில்
தாயி லார்க்குத் தாயே யாகியும்
தந்தை யிலார்க்குத் தந்தையே யாகியும்
இந்த மாநிலத் திடுக்கண் தீர
வந்து தோன்றிய மாநிதிக் கிழவன்
நீலஞ் சேரி நெடுமால் ஆனான்
ஆலஞ் சேரி அயிந்தன் என்பான்
தன்குறை சொல்லான் பிறர்பழி உரையான்
மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்றான்
இறந்து போகாது எம்மைக் காத்தான்
வருந்தல் வேண்டாம் வழுதி
20 இருந்தனம் இருந்தனம் இடர்கெடுத் தனனே. - சங்கப்புலவர்
அயிந்தனைக் குறித்துச் சங்கத்தார் இங்ஙனம் கூறியிருக்கின்றனர். மன்னனும் அவனை வியந்து மதித்து நயந்து மகிழ்ந்தான். நேர்ந்த பஞ்சத்தின் நிலையையும், அல்லலான அந்தக் காலத்தில் புலவர்களை அவன் உரிமையோடு போற்றி வந்துள்ள வகையையும், அவனுடைய குண நலங்களையும் இதனால் அறிந்து மகிழ்கிறோம்.
’மறந்தும் பொய்யான்; இறந்து போகாது எம்மைக் காத்தான்’ என்றது அவனது உத்தம நிலையையும், உபகார நீர்மையையும், அரிய பல சீர்மைகளையும் நன்கு உணர்த்தியுள்ளது.
ஈகை இயல்பும், இனிய பண்பாடும் மனிதனை அதிசய நிலையில் உயர்த்தியருளுகின்றன. அங்ஙனம் உயர்ந்தவனை உலகம் என்றும் உவந்து போற்றுகின்றது. அயிந்தன் மறைந்து பதினெட்டு நூற்றாண்டுகள் ஆயின. இன்றும் அவனை வியந்து புகழ்கின்றோம்; விழைந்து மகிழ்கின்றோம். புகழ்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிவரப் புனித நிலையில் அவன் பொலிந்து நிற்கின்றான். யாதும் நிலையில்லாத உலகில் புகழ் நிலைத்து நிலவுகின்றது.
சிறந்த புலவர்கள் உவந்து பாடும்படியான புகழை ஒருவன் அடைந்து கொள்வானாயின் அவன் என்றும் நித்திய சீவனாய் நிலைத்து வாழ்கின்றான். ஒருவனது பிறப்பின் தோற்றம் புகழால் சிறப்பாய் ஏற்றம் பெறுகிறது. அப்பேறு பெற்றவர் என்றும் அழியாத விழுமிய நிலையில் நன்றாக நின்று நிலவுகின்றார்.
உற்ற ஊனுடம்பு இடையே அழிந்து போகிறது; பெற்ற புகழ் எஞ்ஞான்றும்.அழியாமல் யாண்டும் மேன்மையாய் நீண்டு நிற்கிறது; ஆகவே அது அதிசயமாய்த் துதி செய்ய வந்தது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே. 204
- சீயவதைச் சருக்கம், சூளாமணி
உடல் அழிந்து போகும்; புகழ் அழியாது என இது உணர்த்தியுள்ளது. இத்தகைய விழுமிய புகழை மனிதன் அடைந்து கொள்ள வேண்டும். அது புனித போகமாய் இனிமை புரியும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.