பூங்காற்று புதிரானது
பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அந்த பூங்காற்று மட்டும் எந்த வித சலனங்களுக்கும் ஆட்படாமல் பூம்பாறையின் பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு சந்தியா கால வேளையில் மந்தகாசமாய் அந்த பூங்கிராமத்தை பார்த்து கொண்டு இருந்தது.
எத்தனை கோடி இன்பமும் துன்பமும் சூழ்ந்தாலும் பூக்களின் வாசத்தை மட்டும் அள்ளி எடுத்து வீசிடும் இந்த பூங்காற்று என்றும் புதிரானது தான். காடு மலைதனில் தவழ்ந்து வரும் பூங்காற்றுக்கு தான் மானுட நெஞ்சத்தின் வலிகள் புரிந்திடுமா என்ன?. ஊசி இலை காடுகளின் ஏகாந்த வாசத்தை நாசிகளில் துளைத்துக் கொண்டு செப்பனிட்டு அமர்ந்து இருந்தது அந்த பூங்காற்று. அன்று இரவு ஊரெல்லாம் இதே பேச்சு தான். பூமி சுழல மறுத்து தர்ணாவில் இறங்கியதை போல காட்சியளித்தது அந்த பச்சை மலை தொடர். தொழுவத்தில் இயேசு மட்டும் தன்னந்தனியாக தன் மழலை ஓசைகளை போதித்து கொண்டிருந்தார். கேட்க தான் ஆளில்லை. கைக்கு அடங்காத சாரய பாட்டில்களையும் ஒரு தூக்கு சட்டியையும் எடுத்துக் கொண்டு நெடுத் தெரு வழியே போவகவாய் ரோட்டை பிடித்து மேடறியவன் நடையில் வேகத்தை கூட்டினான். வழியெல்லாம் அந்த பேச்சு அவனை பின் தொடர்ந்தது.
'செயலலிதாவ தள்ளிவிட்டாய்களலாம்லடீ'
'அடுத்து யார் வாராகலாம்'
'எம்சிஆருக்கு இருந்த திறம திரானி யாருக்கும் வராதுப்பே'
'ஆத்தே கட்சிய உடச்சுப்புட்டாய்ங்க'
'அடுத்து சானகி அம்மா தான் வரப்போகுது'
வற்றி கிடந்த சுரப்பிகளின் பாதையில் எந்த துளி விழுந்திடுமோ என்று வீங்கி கிடந்த கண்களோடு அமர்ந்திருந்தவளை தரதரவென கைகளை பிடித்து கண்மூடித்தனமாக தள்ளி விட்டது ஒரு கூட்டம். பாலைவன ஊற்றில் துளிர்த்த நீரைப் போல பொல பொலவென கண்ணீர்க் கண்களுடன் ஒவ்வொரு ஆணையும் அவள் பார்த்த பார்வை அன்று பாரதியின் சபதத்தை பறைசாற்றி இருந்தது. அது பிற்காலத்தில் நிகழ்ந்தது சரித்திரத்தின் பேரதிர்ஷ்டம்.
'ஊரே அடங்கி போய் கிடக்கு'
'செயலலிதா வந்தா பொம்பளயாளுக்கு எதனா நல்லது செய்யும்'
'எம்.சி.ஆரு இல்லாதத நினச்சு பாக்கவே முடியலயேடீ'
'கடை கன்னியலாம் அடிச்சு உடைக்கிறாய்ங்கலாம்லடீ'
இவையெல்லாம் அவன் காதுகளில் விழுந்தது; அதை கேட்டுக் கொண்டே பொடி நடையாக மன்னவனூர் மேட்டை அடைந்தான் மூக்குறுஞ்சி. ஆம்! அவன் பெயர் மூக்குறுஞ்சி முக்கு உறிய தெரிந்த காலத்தில் இருந்து அவன் பெயர் அது தான். அவன் பாட்டன் முப்பாட்டன் பெயரை எல்லாம் தெரிந்து கொண்டு அவனுக்கு என்ன சொத்தையா எழுதி வைக்க போகிறோம்.
ரோட்டின் ஓர வளைவுகளிலே பதுசாக வேகமெடுத்து நளினத்துடன் நடந்தவன்; மன்னவனூர் ரோட்டை முட்டும் வளைவில் இருந்த மலைச் சரிவுகளிலுள்ள மேட்டின் இடுக்குகளில் புகுந்தான். அங்கு தவளைகளும் சாரைகளும் அந்தாச்சரி ஆடிக் கொண்டிருந்தன. புன்னை மர கிளையின் கீழ் தீ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. பூங்காற்றின் அசைவில் கொஞ்சம் மசமசவென்று எரிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி மூன்று ஆசாமிகள் குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.
ஆகாயம் மெள்ள நகர்ந்து வெண்ணிலவை அனைத்து கொண்டது. எந்த வித சஞ்சலமும் இல்லாமல் யாருக்கும் எவருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த ஆகாயம் வானில் நீக்கமற வியாபித்து இருப்பது போல மனித மனங்களும் இருந்துவிட்டால் நன்றாய் தான் இருக்கும். தோற்றமும் இல்லாத அழிவும் இல்லாத அந்த ஆகாயத்தை போல வாழத் தான் எல்லோருக்கும் ஆசை. துரதிர்ஷ்டவசமாக யாருக்கும் அது வாய்ப்பதில்லை அப்படி வாய்த்தாலும் அவர்கள் நிலைப்பதில்லை.
தீக்கு வாகாக விறகை எரித்து கொண்டிருப்பவன் தான் கருமுண்டம். பேருக்கு ஏத்தாற்போல நல்ல கருத்த முண்டம். முகமும் தான். அவனுக்கு சுள்ளி பொறுக்கிகொடுப்பவன் தான் கட்டியங்காரன் அய்யாவு. இருவரும் பால்ய சிநேகிதர்கள். தொழில் முறை கூத்துக் கலைஞர்கள். சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவிலில் அரங்கேற்றம் நடத்தி பத்து வருடங்களாக கூத்து கட்டி பிழைப்பு நடத்துகிறார்கள். கருமுண்டம் கூத்து பாட அதற்கு அய்யாவு கொட்டடிக்க என இந்த இரண்டு பேரு சேர்ந்து மட்டுமே கூத்துக்கட்டி இராமனுக்கும் முருகனுக்கும் சீதைக்கும் வள்ளிக்கும் அழகு சேர்ப்பார்கள். ஆனால் காலப்போக்கில் மனிதர்களின் கேளிக்கை விஸ்தாரமானதில் அவர்கள் மட்டும் சேர்ந்து கூத்து கட்டி மக்களை திருப்திப்படுத்த முடிவதில்லை. சாமன்ய மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் திருப்திபடுத்திவிட முடியுமா என்ன?. அதுபோக கருமுண்டம் வேசங்கட்ட போவதில்லை என சொல்லி சபதம் செய்த கதையையே இன்னும் ஊரு முழுக்க பேசியாகவில்லை. பற்றாக்குறைக்கு டூரிங் டாக்கீஸ்கள் தியேட்டர்களாக உருமாறிக் கொண்டிருந்தது. நாடக கலைஞர்களின் அன்றாட காட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தெருக்கூத்தை பற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். மன இறுக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள தாஸ்தோவ்ஸ்கியின் கதையை படித்து ஆறுதலடைய கூட தெரியாத வாஞ்சையான வெள்ளந்தி கூட்டம்.
"டேய் கருமுண்டம்! நாளைக்கு தேனி கூத்தாம்ல சொல்லவே இல்ல" எரிகின்ற சுள்ளியில் இன்னும் இரண்டை எடுத்து போட்டான் பரலோகம். பரலோகம் ஒயிலாட்டத்தில் வித்தைக்காரன் அவன் போடும் ஒயிலுக்கு பல கண்ணிகைகள் அவன் மீது கிரக்கம் கொண்டு திரிந்தார்கள். அது அவன் ஆட்டத்துக்காகவா என்று தான் இன்று வரை புரியாத புதிராக அந்த பூம்பாறையை சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.
"ஆமாபா! அதுக்கு தான் உன்னய இங்க வரச்சொன்னேன்" என்றான் கருமுண்டம்.
பஞ்சபூதங்களிலே நெருப்புக்கு தான் எத்தனை சிறப்புகள். தன்னுடன் சேரும் அத்தனையும் தனதாக்கிக் கொள்ளும். எந்த நிலையிலும் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளாத ஓர் புனிதம். அந்த தீயை மெள்ள அசைத்தபடி கிழக்கு நோக்கி பயணித்த பூங்காற்று வேலப்பன் கோயில் தெருவை அடைந்தது. பூங்காற்றில் கைக்குட்டைகள் அங்குமிங்கும் பறந்தன. மாடப்புறாக்கள் சிறகுகளை அடித்து இதமான காற்றில் தன் ஜோடிகளுடன் இணை சேர எத்தனித்து கொண்டிருந்தன.
"நாசமத்து போனவ அழகு பெத்த பிள்ளய விட்டுட்டு போய்டாளே எடுப்பட்ட சிறுக்கி" பஞ்சவர்ணம் பேசியதை அந்த பூங்காற்று மெள்ள பெத்தராசு காதில் கொண்டு வந்து சேர்த்தது.
"மா என்ன பேச்சு பேசுற பிள்ள முன்னாடி" தன் மகளின் நெற்றியை வருடியபடி சொன்னான் பெத்தராசு. நெருப்பின் அணைப்பு அவள் நெற்றியில் இருந்தாலும் அந்த சூடு அவன் உள்ளத்தை உலுக்கி எடுத்தது.
"இல்ல யா மனசு பொறுக்க முடியாம தான்...
பாரு புள்ள அம்மா அம்மானு ராத்திரி ஆனா ஆத்தால நெனச்சு தூக்கத்துல அனத்துது..."
"ஒன்னுல்ல...
நீ அமைதியா படு நான் மேட்டுத் தெரு வரைக்கும் போய்ட்டு வரேன்" சொல்லிக் கொண்டே வெண்ணிலாவை பார்த்தான் பெத்தராசு. வானில் ஒன்று இருந்தது உடைந்த மரக்கட்டிலில் ஒன்று கிடந்தது.
போகிறவனை அழைத்து இன்னும் இரண்டு சொற்களை எடுத்து போட்டாள்.
"ஏன்யா கஞ்சி காய்ச்சக் கூட வீட்ல எதும் இல்லைய்யா" மறுமொழி பேச எதுவும் வார்த்தை இல்லை தலையசக்க கூட கழுத்தோடு ஒற்றிக் கொண்ட பிண்டத்துக்கு வக்கில்லை.
மூச்சு வாங்க நடந்து வந்தும் பெத்தராசு முகத்தில் எந்த களைப்பும் இல்லை. வரவேற்பு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. "வாடா" என்ற சொல் மட்டும் கருமுண்டம் வாயில் இருந்து வந்தது. அது கூட மற்றவர்கள் வாயில் இருந்து வரவில்லை அதை அவன் கண்டு கொள்ளவும் இல்லை. அழையா விருந்தாளிக்கு என்ன உபசரிப்பு வேண்டி கிடக்கிறது என்று நினைத்தானோ என்னவோ.
"என்னடா இந்தப்பக்கம்...
ஆன்...
இங்கலாம் வரமாட்டியே நீ!" சாராய பாட்டிலை திறந்தபடி கேட்டான் கருமுண்டம்.
"அண்ணே.." பெத்தராசு இழுவைக்கு 'உம்' கொட்டினான் கருமுண்டம் .
"அண்ணே ஒரு நூரூவா கடனா தான்னே..
அடுத்த மாசம் திருப்பி தந்துரேன்" தயங்கி தயங்கி கேட்டான் பெத்தராசு.
"நூறு ரூவாயா...
எதுக்குடா " கண்ணாடி டம்ளரில் நிரம்பி கொண்டிருந்தது. அதை கவனித்து விட்டு கேட்டான் கருமுண்டம்.
அய்யாவு அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உரையாடலுக்குள் எந்த வித இடயூறையும் விளைவிக்காமல் அமைதி காத்தான் பரலோகம். அவனிடம் ஜாடை பேசியபடி இருந்தான் மூக்குறுஞ்சி.
பெத்தராசுவுக்கு கைக்கொடுக்க மூக்குறுஞ்சி ஒரு வார்த்தையை அள்ளி போட்டான்.
"பிள்ளைக்கு உடம்பு சரியில்லை அண்ணே.." என்றான் மூக்குறுஞ்சி.
"கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டி போவேண்டி தான" என்றான் கருமுண்டம்.
"உடம்புக்கு ஒன்னு இல்லணே...
வீட்ல கஞ்சி காச்சக் கூட எதுவும் இல்ல அண்ணே" கெஞ்சிக் கொண்டே கேட்டான் பெத்தராசு.
ஒருக்கட்டத்தில் அமைதி காத்தவன் பொறுமை இழந்தான் அந்த மதிகெட்டான் சோலையில்.
"ஆஹா செவலை பட்டைனா செவல பட்ட தான்
என்னமா பதமா காய்ச்சிருக்கான் பய வெல்லம், தண்ணீ, பழம், வேலாம் பட்டைனு அளவ கனகச்சிதமா போட்டுருகான்
ச்ச கொன்னுட்டான் மனுசன்" என்று பரலோகம் சிலாகிப்பதை கண்டு மூக்குறுஞ்சி வாயெடுத்தான்.
"ஏன்னே பேசாம ஆட்டத்த விட்டுட்டு நம்மலும்..." மூக்குறுஞ்சி முடிக்கும் முன்பே பரலோகம் சொன்னான்.
"டேய் இதென்ன சாமனியமானா வேலயா
கலவைக்கும், ஊறலுக்கும் மட்டுமே கணக்கு தெரிய மூனு மாசம் ஆவும்
அப்பறம் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பொறுமையா காத்துக் கிடக்கனும்" என்று பரலோகம் எதோ கம்பசூத்திரத்தை கற்றவனைப் போல விவரித்ததைக் கண்டு கருமுண்டம் சொன்னான்.
"அதுவும் வாஸ்தவம் தான்"
அந்த வாஸ்தவத்தையும் மீறி தழுதழுத்த குரலில் பெத்தராசு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.
"அண்ணே..."
"டேய்... நீ இன்னும் போலியா"
"அண்ணே கொஞ்சம் தயவு பண்ணுணே" எனக் கரகரத்த குரலில் கேட்டான்.
"ராசு!
புரியுதுடா!
ஆனா நானே இப்ப காசில்லாம தானடா இருக்கேன்" கருமுன்டம் ஒரே மூச்சில் குடித்து விட்டு சொன்னான். எந்தவித சங்கடமும் இல்லாமல் கருமுண்டம் சொல்லிவிட்டான். வலியையும் கொடுமையையும் அனுபவிப்பவனுக்கு தானே தெரியும்.
"அண்ணே ஒரு வாரமா தொழில் எதுவும் நடகல...
கையில சல்லி பிசா இல்லனே
எதனா பார்த்து சொல்லுணே" என்றான் பெத்தராசு பரிதாபமாக.
"இல்லடா நானே கூத்து கட்ட ஆளில்லாம இருக்கேன்டா...
சமயம் பார்த்து மருதுவும் வரமாட்டேனுட்டான்
மணிவண்ணன் வேற என்ன பண்ண காத்திருக்கானோ...
நானே என்ன பன்றது தெரியாம நொம்பலத்துல இருக்கேன்
நாளிக்கு கூத்து கட்டுனா தான்டா காசே கண்ணுல பாக்க முடியும்" என்று தீர்க்கமாகவே சொன்னான் கருமுண்டம்.
"அண்ணே அப்ப நான் நாளைக்கு ஒரு ஷோவ போட்டுக்க வா" எனக் கெஞ்சிக் கேட்டான் பெத்தராசு. கெஞ்சுவதை தவிர மற்றொன்றையும் பெத்தராசு கற்று வைத்திருந்தான். அது அவன் அப்பன் பாட்டனிடம் கற்று கொண்ட வித்தை மாயவித்தை. ஆங்கிலேயர் காலத்தில் அவன் பூட்டன் ஆர்வத்தில் கற்றது இன்று அவனுக்கு குலத் தொழிலாகிப் போனது. கைக்குட்டையின் உள்ளே இரண்டு பூவையும் ஒரு புறாவையும் அடக்க தெரிந்த ஒரு நலிந்த மாயக்காரன்.
"எது அந்த புறாவையும் நாலு டவலையும் வச்சா
ஏப்பே கூத்துக்கு தான்டா காசு தருவாய்ங்க
அப்புறம் நீ ஓசி காட்சி தான்டா
காசுலா கிடைக்காது
சொல்லிட்டேன்" கருமுண்டம் கண்ணாடி டம்ளரை வாயில் வைத்து கொண்டு சொன்னான்.
சட்டென மூக்குறுஞ்சி யாரையோ பார்த்து கொண்டே பதறிப் போய் பதுங்க முற்பட்டான். "என்னடா என்ன ஆச்சு" என்று குழப்பத்துடன் கேட்டான் அய்யாவு.
"இல்லணே தண்டல்காரனு நினச்சு பயந்துட்டேன்" வெளிறிய முகத்தில் பீதியடைய சொன்னான் மூக்குறுஞ்சி.
"ஏலேய் அவன் நம்ம வெட்டியான் சுருளிடா..." சிரித்துக் கொண்டே சொன்னான் அய்யாவு.
"அவன் எதுக்கு சாமத்துல இந்த பக்கம் சுத்திக்கிட்டு இருக்கான்" என மூக்குறுஞ்சி சத்தமாக கேட்டான்.
"அவனுக்கும் தொழில் படுத்துறுச்சுல அதான் சாமக்கோடாங்கி வேசம் கட்டி கிழடு கட்டைகளுக்கு எளவ கூட்டலாமானு பாக்குறான்" என்றான் அய்யாவு.
"ஊருல சாவு இல்லன அவன் பொழப்பும் நம்ம பொழப்பு மாறி தான்" என்று கொஞ்சம் ஆதங்கபட்டான் கருமுண்டம். அதோடு கொஞ்சம் வசவுகளும் நீண்டது அதற்கு கொஞ்சம் கத்திரி போடவும் இங்கு வேண்டி உள்ளது.
"இந்த சர்க்காரும் கடவுளும் ஒன்னு இரண்டு பேரும் நம்மள வாழ விடமாட்டாய்ங்க...
இங்காரு ஒரு காலத்துல கூத்து கட்ட போறம்னாலே
ஒரு மண்டலம் கவுச்சி சரக்குனு எதுவும் தொடமாட்டேன் அவ்வளவு சுத்தபத்தமா இருப்பேன்
இன்னைக்கு அதலாம் விட்டு போச்சு
வயித்த கழுவுனா போதும் போயிட்டு கிடக்கு" கருமுண்டத்தின் புலம்பலில் இருந்து அவனுக்கு போதை ஏறி போனதை உணர்ந்தான் பெத்தராசு.
"அண்ணே என் விசயத்துக்கு வாணே"
"உன் விசயத்துக்கு எங்க வர
அதான் சொன்னேன்ல" என்று மூக்குறுஞ்சி கொண்டு வந்த தூக்கு சட்டியை திறந்து அதில் இருந்த ஒரு துண்டு உப்புகண்டத்தை எடுத்து கடித்தான் கருமுண்டம்.
"இருக்கட்டும் ணே வரவுக அஞ்சு பத்து கொடுத்தா கூட உபகாரமா இருக்கும்ல..
காசில்லாம கஸ்டமா இருகுணே" பெத்தராசு குரலில் அதற்கு மேல் இறக்கம் இல்லை.
"ம்ம்ம் சரி இவளோ தூரம் நீயே இறங்கி வந்துட்ட அப்பறம் நான் என்னத்த சொல்றது" என்று கடைசி மடக்கை குடித்து விட்டு வைத்தான் அதிரும்படி.
அதை கேட்ட மாத்திரத்தில் "காலைல அஞ்சு மணிக்கு கிளம்பனும் வெரசா வந்துரு" என்றான் அய்யாவு.
"டேய் பார்த்து டா ஊரே அடங்கி போய் கிடக்கு...
எதும் சலம்பலாகிறாமா..." என கருமுண்டம் கூற 'ஒன்றும் ஆகாது' என்ற ஆறுதல் மொழியை தவிர வேறு எதை அய்யாவுவால் கூறிவிட முடியும்.
"சரிணே" என்று சொல்லி எழ முற்பட்டவனை ஒரு சொல் வந்து அவன் மார்பில் சொருகியது. சக்கரத்தை பிடித்து மல்லுக்கட்டும் கர்ணன் மீது எய்த அம்பை போல. அது வேறு எங்கிருந்தும் விழவில்லை பர லோகத்தில் இருந்து விழுந்தது.
"டேய் இவன் பொண்டாட்டி ஓடி போனாலும் நல்ல குத்து கல்லு மாரி தான்டா இருக்கான்...
நானா இருந்துருந்தேனா ஒக்காளி நாண்ட்டுட்டு செத்துருப்பேன் இல்லன அந்த கண்டார ஓலிய தேடி கண்டு புடிச்சு வெட்டிருப்பேன்"
முழுதாக பரலோகத்திற்கு போதை ஏறி போனதை உணர்ந்த பெத்தராசு எதுவும் பேசாமல் நகர்ந்தான். அதுமட்டுமல்லாமல் இந்த வார்த்தையை கேட்பது அவனுக்கு புதிதல்ல. இரண்டு வருடங்களாக எத்தனையோ முறை கேட்டு சலித்து போன விஷயத்தை புளித்து போன மனது மரத்து போன செவியின் வழியே கேட்க மறுத்திருக்கலாம்.
"மூஞ்சில மையிரு வச்சவனெல்லாம் ஆம்பளயா ஆயிற முடியுமா" மறுபடியும் அம்பை சொருகினான் பரலோகம். இந்த முறை கருமுண்டம் பரலோகத்தின் போதை ஒயிலை கொஞ்சம் அடக்கி வைத்தான். குடி முழுவதும் ஆட்கொண்ட பிறகு குடியை கெடுக்காமல் விடாதல்லவா!. போதை உச்சிக்கு போனது நாக்குகளின் நரம்பு கொஞ்சம் வலுவிழந்து போனது. அப்படி இருந்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு வார்த்தை பரலோகம் வாயில் இருந்து வந்திருக்கும்.
"இன்னும் பத்து வருசம் தான் அடுத்து மவளயையும் கூட்டி கொடுப்பான் மானங் கெட்டபயன்" என சட்டென சொல்லை உதிர்த்துவிட்டான் பரலோகம்.
பெத்தராசுவின் பொறுமை எல்லையைத் தாண்டிய மறுகணம் பரலோகத்தின் சட்டையில் இருந்தது அவன் கைகள். இருவரும் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். கருமுண்டமும் அய்யாவுவும் எவ்வளவோ தங்கள் பலம் கொண்டு தடுத்தார்கள். மூக்குறுஞ்சியும் அந்த பணியில் இனைந்தான். ஆனால் மது தன் வேலையை காட்ட; அத்தனை பெரிய வெற்றியை அவர்களால் ஈட்ட முடியவில்லை. போதையில் நிதானத்தை இழந்த பரலோகத்தால் பெத்தராசுவின் கைப்பேச்சுக்கு பதில் மொழி கூறமுடியவில்லை. ஆனால் பரலோகம் கேட்ட கேள்விகளுக்கு பெத்தராசு தன் கை மொழி போதும் மட்டும் பதில் கூறி விட்டான். சிலசமயங்களில் சில கேள்விகளுக்கு கை மொழி தான் சிறந்த பதிலாக இருக்கக்கூடும்.
பூங்காற்றில் திளைத்திருந்த மண்ணில் உருண்டு புரண்ட பெத்தராசு ஒருவழியாக தன் பேச்சை முடித்துக் கொண்டான். சட்டையெல்லாம் கிழிந்து, தலை முடி கலைந்து, உதட்டில் இரத்தம் வழிய எழுந்தான். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர். காயம் கண்டு வலித்த கண்ணீர் வலி தீரும் போது அடங்கிவிடும் ஆனால் இது மனம் வலித்த கண்ணீர் அது வடுவாக மாறிய பின்னும் கண்ணீரையே தான் சுரக்கும்.
கண்ணீர் கரை கண்டது மண்ணுக்குள் புதைக்கொண்டது. பூங்காற்று அந்த கண்ணீர் மண் துகள்களை அவன் மேல் பரவி சென்றது. எப்போதோ தனக்குள் கேட்கப்பட்ட கேள்விகளை மீண்டும் தட்டி எழுப்பி சென்றது. ஆனால் விடைமட்டும் புதிராய் தான் உள்ளது. அந்த கேள்விகள் மறுபடியும் அவனை சூழ்ந்து கொண்டது. விடைகளை கேட்டு அவனை நச்சரித்தது. கேள்விகள் மட்டும் அவன் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. "எதுக்கு என்ன பார்த்தா, காதலிச்சா, முந்தி விரிச்சா, பிள்ளய பெத்தா, விட்டுட்டு போனா" இந்த கேள்விகளுக்கு இரண்டு பேருக்கு மட்டும் தான் பதில் தெரியும். ஒன்று அவள் மற்றொன்று அந்த பூங்காற்று.
கண்ணீர் வற்றியது ஆனால் உரையாடல் தந்த தருணங்கள் வற்றவில்லை. அவளை முதன் முதலில் பார்த்த அந்த தருணம் அவன் இதய கூட்டை விட்டு இன்னும் அகலவில்லை.
"என்னவாம் என்ன பார்த்துக்கிட்டே இருக்குறவ" முதன்முதலாக கூக்கால் திருவிழாவில் செவ்வரளியை பார்த்த போது பெத்தராசு இப்படி தான் கேட்டான்.
"ஆன் கண் இரண்டும் என் வுட்டு"
"என்னய கலியாணம் கட்டிகிறியா" பெத்தராசு கேட்டதற்கு இப்படி தான் பதில் சொன்னாள் செவ்வரளி.
"உன்ன கண்ணாலம் கட்டிக்கிட்டா என்ன தருவியாம்"
"சொத்தெல்லாம் எதுவும் இல்ல
என் உசுரவேன வச்சுக்க"
"உன் உசுரு எம்புட்டு பெரும்" அதை கேட்டது மட்டுமல்லாமல் அதை உருவி எடுத்து கொண்டும் சென்றுவிட்டாள் அந்த பாதகத்தி. மானம் தான் உயிராக அவன் உடம்பில் ஒட்டி கொண்டு இருந்தது அதுவும் இப்போது காற்றோடு கலந்துவிட்டது அந்த பூங்காற்றோடு.
கல்யாணம் ஆகி மூன்று வருடங்களாகியும் இந்த கேள்விகளை கேட்காவிட்டால் அவள் நல்ல ஒரு இல்லாள் ஆக இருந்திருக்க மாட்டாள். அதை தான் செவ்வரளியும் செய்தாள்.
"ஏயா இந்த வித்த காட்ற வேலைய விட்டுபுட்டு ஒரு நல்ல உத்தியோகத்த தேடுயா...
பிள்ள குட்டி ஆகி போச்சு...
துபாய் கிபாய்னு எங்கயாவது போய் காசு சேர்க்க பாருயா"
அதை கேட்டு ஒரு நல்ல குடும்ப தலைவனாக அவன் பேசியிருக்க வேண்டும். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்போதும் நேர்க்கோட்டில் பயனிப்பதில்லை அல்லவா!. காலம் தன் விளையாட்டை காட்டியது.
"என்ன!!
படுத்ததுக்கு வில பேசுறியா"
பிரிவுகளுக்கு எப்போதும் பெரிய காரணங்கள் தேவையில்லை. இராமன் சீதாபிராட்டியை பிரிய வால்மிகிக்கு ஒற்றை வார்த்தைப் போதுமானதாக இருந்தது. ஒத்தல்லோ டெசுடமெனாவிடம் இருந்து பிரிய ஷேக்ஸ்பியருக்கு ஒரு கைக்குட்டை போதுமானதாக இருந்தது. இவர்களை பிரிக்க ஒற்றை மௌனம் போதுமானதாக இருக்காது?.
ஐந்திணை ஐம்பதின் பொறையனாரின் மானைப் போல வாழும் கணவன் மனைவியை இப்போது பார்ப்பது மிகவும் அரிது. மாதவியின் மேல் பித்து கொண்டு அலைந்த கோவலனுக்காக எதையும் எரிக்க இந்த காலத்து கண்ணகிகள் துணிவதில்லை. ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லி வாதி பிரதிவாதியாகி வாய்தா வாங்குவதைத் தான் இன்றைய சமூகம் வாடிக்கையாக்கி கொண்டுள்ளது.
மனைமாட்சி இல்லா மனைவியை கட்டி விட்டு வாழ்க்கையில் எத்துனை வெற்றிகளை பெற்றாலும் அவன் தோற்றவன் தான் என்று வள்ளுவனே வரையறுத்துவிட்டான். மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என பொட்டில் அறைந்தார் போல் ஏழு வார்த்தைகளை சொல்லிவைத்தவன்; கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என இரண்டு வரியில் சொல்லாமலா போவான். அது என்னவோ மனுதர்மம் பெண்களுக்கு மட்டும் தான் என எவனோ காற்று வாக்கில் சொல்லி விட்டு போய்விட்டான்.
மாற்றான் மனைவியின் விருப்பமில்லாமல் தொட மாட்டேன் என்ற இராவணனை இன்று வரை நாம் மன்னிக்க தயங்குகிறோம் ஆனால் மாற்றான் மனைவியை விருப்பமில்லாமல் புணர்ந்த இந்திரனை பூஜித்து கொண்டாடுகிறோம் .தேவனாக வாழ்வதும் அசுரனாக வாழ்வதும் குணத்தால் இல்லை என்பதை இதை விட பட்ட பரிவர்த்தணமாக காட்ட முடியாது. அவன் தேவனோ அசுரனோ இல்லை தேவசுரனோ அவனவன் கர்மாக்கள் அவனவனை ஆட்டி வைக்கிறது. அதேபோல அவள் பதிவிரதையோ அல்லது பரத்தையோ அவள் கர்மா அவளை எங்கோ கொண்டு போய் தள்ளி விட்டது.
சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினியை போல அந்த பூங்காற்றுக்கு கட்டளையிட்டு சென்றாளோ என்னவோ அவன் வாழ்வில் மட்டும் அந்த பூங்காற்று வீச மறுத்துவிட்டது.
ஏகபத்தினி விரதன் எனப்படும் இராமனின் மனைவி சீதையும் பஞ்சகண்ணிகை தான் அவளை கவர்ந்து சென்ற மாற்றான் இராவணனின் மனைவியும் பஞ்சகண்ணிகை தான். ஐராவதனிடம் கலங்கமுற்ற நளாயினியும் பஞ்சகண்ணிகை தான். ஐவரை மனந்த பாஞ்சாலியும் பஞ்சகண்ணிகை தான் இவளையும் அவர்களோடு ஆறாக சேர்க்கலாம் தான் ஆனால் சேர்த்தால் மட்டும் தான் அவள் ஆறங்கண்ணிகையா என்ன சேர்க்காவிட்டாலும் அவள் கண்ணிகை தான்.
எல்லோரும் சேர்ந்து இன்னும் குடித்தபாடில்லை. பரபரப்பு கொஞ்சம் தனிந்து இருந்தது. பெத்தராசு சென்று வெகு நேரம் ஆகியிருந்தபடியால் பரலோகம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு இருந்தான். பேச்செல்லாம் கூத்தை பற்றி தான். உரையாடல் கூத்து கட்டி கொண்டிருக்கையில்"ஏன்பா பரலோகம்...
அசலூரு நாடகத்துலலாம் வேசம் கட்டுற
நம்ம கூத்துக்கு கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணுப்பா" என்று அதட்டலாக சொன்னான் அய்யாவு.
முகத்தில் இரத்தம் வழிய "ஏலே உன் கூத்தும் என் நாடகமும் ஒன்னா" என்று கோப்பை மதுவை குடித்து விட்டு முரண்டுபிடித்தான் பரலோகம்.
நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. எல்லோரும் போதையின் வாசலில் விழுந்து கிடந்தனர். வெஞ்சுடர் வருகைக்கு பெரிய நாழிகை எதுவும் இல்லை. அய்யாவுவுக்கு ஒரு வழியாக முழிப்பு கண்டது. கருமுண்டத்தையும் பரலோகத்தையும் எழுப்பி விட்டு மூக்குறுஞ்சியின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.
"எல்லோரும் வெரசா கிளம்புங்க மதிய சாப்பாட்டுக்கு அங்க இருக்கனும்" என்றான் கருமுண்டம் சோம்பலை முறித்து கொண்டே.
"எப்படி போ போறோம்...
ஊரே காப்ராவா இருக்கு...
பஸ்ஸு எதுவும் ஓடல
முதல அங்க திருவிழா இருக்கா கூத்து நடக்குமா" என்றான் அய்யாவு. போதைக்கு முன்பு கேட்கவேண்டியதை தெளிந்த பிறகாவது கேட்டானே.
"அதலாம் நடக்கும்
நீ ஆக வேண்டிய வேலய பாரு நான் வேற ஏற்பாடு செய்றேன்" என்றான் கருமுண்டம்.
"சரிபா சந்தோசமா போய்ட்டு வாங்க" என்றான் பரலோகம்.
"ஏய் பேசாம வாப்பா" என்றான் கருமுண்டம் அதட்டலோடு. அதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் பீடியை பற்ற வைத்தான். தலை மட்டும் மெல்ல அசைந்தது.
ஊரே துக்கத்தில் இருந்ததால் அமைதியாகி கிடந்தது. கலவரமாகி போய் விடும் என்று லாரி ஓட்டுபவர்களும் கூட வர மறுத்து விட்டனர். இப்போது அவர்கள் முன்னே இருந்தது நடைபயணம் மட்டும் தான். மெள்ள பூம்பாறையிலிருந்து கொடைக்கானல் பண்ணைக்காடு வழியே தேவதானப்பட்டியை அடைந்து அங்கிருந்து சிரிரங்கபுரம் செல்வது தான் ஒரே வழி ஆனால் அப்படி செய்தால் பொழுது சாய்ந்து விடும். அதனால் அகமலைக்குள் புகுந்து அல்லிநகரம் வந்து சிரிரங்கபுரத்தை அடைந்து விடலாம் என முடிவு செய்தார்கள். சொல்வதென்பது எளிது ஆனால் அகமலையின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்து வெளியே வருவது கொஞ்சம் விசனமான விசயம் தான்.
எல்லோரும் பெட்டிகளை கட்டிக் கொண்டு அரிதாரம் பூச ஆயத்தமானார்கள் . வெகு நேரம் காத்திருந்தும் பெத்தராசுவை கண் காணவில்லை. பரலோகம் பொறுக்காமல் வேகப்படுத்த; சரியாக காலை ஆறு மணிக்கு அகமலையின் ஒற்றையடி பாதையை தேர்வு செய்து நடக்க தொடங்கினார்கள். கருமுண்டம், அய்யாவு முன் நகர பரலோகமும் மூக்குறுஞ்சியும் பின் அசைந்தார்கள். சிறிது நேரத்தில் தூரமாக பெத்தராசு வருவதை கண்டு பரலோகம் தவிர்த்து எல்லோரும் நின்றார்கள். பெத்தராசு அவர்களை பின் தொடர்ந்து மெதுவாக நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை. பேசுவதாக உத்தேசமும் இல்லை அப்படியே பேசினாலும் வார்த்தைகள் குளிரில் கம்பளி போர்த்தி தொண்டைக் குழியில் படுத்து கொண்டது.
மலைப் பயணம் இவர்களுக்கு புதிதில்லை ஆனால் இந்த முறை எதோ ஒரு பதட்டம் இவர்களை தொற்றிக் கொண்டது. அதை பயம் என்றும் சொல்லிவிட முடியாது. அருநெல்லி, நரிவேங்கை, மயிர் மாணிக்கம் என எண்ணில் அடங்கா மரங்களும் தாவரங்களும் அவர்களுக்கு காணக்கிடைத்தன. அது இன்னதுதானா என்று அவர்களுக்கு தெரிந்திட வாய்ப்பில்லை அதை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு பெரிதாக விருப்பமில்லை.
மெள்ள நகர்ந்தவர்கள் ஊரடி காப்பி தோட்டத்தை நெருங்கினார்கள். காப்பி கொட்டைகளின் வாசத்தை என்னவென்று சொல்வது. எல்லோரும் உச்சி முகர்ந்து மெய் சிலிர்க்க மயக்கத்துடன் நடக்கலானார்கள். அரசவால் ஈப்பிடிப்பானும் ஊதாத் தேன்சிட்டும் அவர்களை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததன. அவர்கள் நால்வருக்கும் யாரோ தங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தது. பின்னாடி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான் பெத்தராசு. கால்கள் நோகாமல் போகும் பாதையில் கவனம் செலுத்திச் சென்றார்கள். சட்டென ஒரு சத்தம். எல்லோரும் திடுக்கிட்டு நின்றார்கள். அங்கும் இங்குமாக எல்லோரும் பார்த்து கொண்டு இருந்தார்கள். 'ஒன்னுல்ல நடங்க டேய்' கருமுண்டத்தின் அந்த வார்த்தை ஆறுதலாக இல்லை. நொச்சி இலைகளும் பட்டிலுப்பைகளும் அவர்கள் கால்களில் மிதிப்பட்டன. அதைக்கண்டு பூங்காற்று சினங் கொண்டதோ என்னவோ சட்டென வேகமெடுத்து அவர்கள் முகத்தில் பட்டென்று வீசியது. பெத்தராசுவுக்கு என்னவோ போல் இருந்தது. திரும்பிய வண்ணமே இருந்தான். எங்கும் மரங்களும் மலைப்பாறைகளும் தான் கண்ணில்பட்டன. மறுபடியும் அதே சத்தம் இந்த முறை 'பா' என்று கேட்டது. தூரத்தில் உள்ள மரப் பொந்தின் இடையில் இருந்து தான் வந்திருக்க கூடும். சூரியன் உதித்த பிறகும் வெண்ணிலவுக்கு என்ன வேலை என்பதைப் போல பூங்காற்றின் அசைவினால் விழுந்த மரக்கிளையில் இடறி விழுந்திருந்தாள் வெண்ணிலா. பெத்தராசுவின் வெண்ணிலா. வானத்து வெண்ணிலாவுக்கு உண்டான அத்துனை சிறப்புகளும் இந்த வெண்ணிலாவுக்கும் உண்டு. அவளை பார்த்த கணமே நிலா என்று ஓடி சென்றான் பெத்தராசு.
"ஆமா இவ எங்கடா இங்க வந்தா" கருமுண்டத்தின் வாயை பிடுங்க அய்யாவு கேட்டான்.
"ஏன்டா உங்கூடதான வாரேன் அப்புறம் ஏன் கிட்ட கேக்குற" என்று அலட்டிக் கொண்டான் கருமுண்டம்.
"இந்த பிள்ள தான் நம்ம பின்னாடியே வந்துட்டு இருந்துருக்கு...
அப்பன பிரிஞ்சு இரண்டு நாள் கூட பொறுக்க முடியாம வந்துருக்கு...
பாரேன்
அந்த கிழவி இந்நேரம் எளவ கூட்டிருக்கும்" என்று சிரித்தான் மூக்குறுஞ்சி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த பாறை முகட்டில் அமர்ந்து வேட்டியை விலக்கி டவுசரில் இருந்த பீடியை எடுத்து இழுக்க தொடங்கினான் பரலோகம்.
வேகமாக மூச்சிரைக்க ஓடிய பெத்தராசு வெண்ணிலாவிடம் போய் நின்றான். அவள் முகத்தில் அசடு வழிந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவளை வசவு பாட அவனால் எப்படி முடியும்.
"ஏன்டா மா இப்படி வந்த"
"நானும் உன் கூட வாரேன் பா" என்றாள் வெண்ணிலா.
"ஏலேய் உங்க அப்பன் மவ பாசத்த கொஞ்சம் அடக்கி வைங்கடா தாங்க முடில" அய்யாவு கொஞ்சம் அலுத்துக் கொண்டான்.
"டேய் வெரசா நடங்க டா காட்டெருமை சுத்துர இடம்" எச்சரித்துக் கொண்டே முன் சென்றான் கருமுண்டம்.
பீடியை மொத்தமாக வழித்த பிறகும் எழ மனமில்லாமல் முன்னே சென்ற அவர்களை பார்த்துக் கொண்டே எழுந்தான் பரலோகம்.
"டேய் அடுத்த வாரம் புதன் கிழம வக்கம்பட்டி முனுசாமிக்கு பதினாறாம் நாளு...
மறந்துறாத..." மூச்சிறைக்க முன்னே நடந்து கொண்டு சொன்னான் அய்யாவு
"ஆமாப்பா
அதுக்கு என்னத்த கட்ட" என்று குழப்பத்துடன் கேட்டான் கருமுண்டம்.
"இன்னைக்கு கட்றதயே கட்டிற வேண்டி தான்" என்றான் அய்யாவு.
நீண்ட நெடும் பயணத்தின் முடிவாக அல்லிநகரத்தை அடைந்தார்கள். சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு என்று எழுதியிருந்த பெட்டியை கீழே வைத்து விட்டு மூக்குறுஞ்சி வியர்த்து கொட்டிய முகத்தை துடைத்து எடுத்தான்.
"ஒரு வழியா ஊரு வந்து சேர்ந்தாச்சு" என்று பெருமூச்சுவிட்டான் அய்யாவு.
"ஏலேய் இன்னும் போனும் டா...
இங்க காலைல டிபன சாப்டுட்டு கிளம்புவோம்...
போற வழில மணிவண்ணனையும் கொட்டுக்காரங்களையும் கூட்டிகிட்டு போனும்" என்றான் கருமுண்டம்.
கைகழுவி வாயைத் தொடைத்து எடுத்து கொண்டு இருக்கும் போது. மொக்கை வேகமாக ஓடி வருவது தெரிந்தது. பூங்காற்றின் இருப்பிடத்தை சிதைத்துகொண்டு அவன் வந்ததில் பூங்காற்று அவனுக்கு விலகி வழி விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மூச்சை இறைத்து கருமுண்டத்தின் முகத்தில் விட்டான். அவனை பார்த்துக் கொண்டே கடவாயில் சிக்கிய கருத்த வேப்பிலையை எடுக்க முற்பட்டான். அவனோ நிறுத்தி நிதானமாகவே சொன்னான்.
"டேய் கருமுண்டம்!!
உங்களுக்கு தான்டா ரொம்ப நேரமா காத்துக் கிடக்கேன்
நம்ம இராஜபாட்டை மணிவண்ணன் இருக்கான்ல
அவன் மருந்த குடிச்சுடான்டா"
கடவாயில் சிக்கியது இப்போது நெஞ்சம் வரை இறங்கியது. எதுவும் பேசாமல் அப்படியே நகர்ந்து சென்று உட்கார்ந்தான் கருமுண்டம். மணிவண்ணனை கூத்து கட்ட அழைத்து சென்று விடலாம் என்று கொஞ்சம் பேராசையுடன் இருந்தான் கருமுண்டம். அய்யாவு முகத்திலும் கொஞ்சம் பதட்டம் தொற்றிக் கொண்டது. மூக்குறுஞ்சி அவன் பெயருக்கு ஏற்ற வேலையை செய்து கொண்டிருந்தான். பரலோகம் பெரிதாக முகபாவங்களை உதிர்க்கவில்லை. பெத்தராசுவோ வெண்ணிலவை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான். வேறென்ன வேலை இருக்க போகிறது அவனுக்கு. மெள்ள நகர்ந்தான் கருமுண்டம். சிரிரங்கபுரம் பட்டாளம்மன் கோவில் வரும் வரை அவன் முகத்தில் ஈயும் ஆடவில்லை சொல்லும் ஆடவில்லை. அல்லிநகரம் மணிவண்ணன் தான் கொஞ்ச நாட்களாக சிங்கார தெருக்கூத்து கலைக்குழுவுக்கு அதரவளித்து வந்தான். மன்னாதி மன்னனின் பெயரை சூட்டியதில் இருந்தே அந்த இராஜபாட்டை மருதூர் கோபாலனின் மீது பித்து கொண்டு அலைந்தவன். அதனால் அவன் மீது பழியை போட்டு என்ன பயன்.
"பரலோகம் நீதாம்ன்டா ஆட்டக்காரனா வேசம் கட்டனும்" என்று அய்யாவு சொல்லி முடிப்பதற்குள் பரலோகம் சொன்னான்.
"எது...
போங்கடா போக்கத்தவய்ங்களா வேசம் கட்டனுமாம்ல வேசம்
நான் இப்பலாம் ஒயில தவிர வேற எதையும் தொடுரதில்ல"
"நேத்து கேட்டப்ப மண்டைய மண்டைய ஆட்டுன
இப்ப என்னடானா இப்படி பேசுற
மனசில்லாதவன் அப்புறம் எதுக்குடா இவ்வளவு தூரம் வந்த" என்று அதட்டினான் கருமுண்டம்.
"நேத்து அப்படியா சொன்னேன்...
ஒக்காளி போதைய போட்டாலே இப்படி தான்"
"டேய் கொஞ்சம் மனசு வைடா" அய்யாவு கெஞ்சினான்.
பரலோகத்திற்கும் கொஞ்சம் வேசம் கட்ட வரும். கூத்தில் கிடைத்த வசூலை பார்த்து பரலோகமும் கூத்து கட்ட தொடங்கினான். கருமுண்டம் ஊரில் இல்லாத நாட்களில் கூத்து கட்ட கற்றிருந்தான். பீடியை இழுத்து கொண்டே மவுனத்தை படறவிட்டான். மறுப்பு சொல்லாத வரை சந்தோஷம் என்று அய்யாவு அவனை அரிதாரம் பூச அனுப்பி வைத்தான்.
"பரலோகம் ஒரு ஆட்டக்காரன் இன்னோரு ஆட்டக்காரன் வேணுமே..
இப்ப என்ன பண்ணப்போற
பேசமா நீ ஆடு கருமுண்டம்" அய்யாவு எவ்வளவோ கேட்டும் கருமுண்டம் வேசம் கட்ட மறுத்துவிட்டான். செய்த சபதம் அப்படி.
"இரு யோசிப்போம்"
"என்னத்த நீ யோசிச்சு
கூத்த நடத்தி
விடிஞ்சிறும்" என்று சலித்துக் கொண்டே படபடத்தான் அய்யாவு. .
"அண்ணே கூத்த முடிச்சுட்டு மதுரைக்கு போய் ஆத்தா மீனாட்சிய பார்த்துட்டு அப்படியே பனமரக் கடையில் பிரியாணி சாப்பிட்டு வருவோம்ணே" என்றான் மூக்குறுஞ்சி முப்பதும் தெரிய.
"த்தா கூத்தே நடக்குமானு தெரில..
பிரியாணியாம்...
போய் வேலைய பாருடா வெளக்கென்ன" என்றுக் கூறி மூக்குறுஞ்சி தலையை தட்டி விட்டு சென்றான் கருமுண்டம்.
பரலோகம் அரிதாரம் பூச தொடங்கி இருந்தான். மூக்குறுஞ்சி கொட்டாச்சிகளை தேடிக் கொண்டு இருந்தான். அய்யாவு வந்தனம் பாட எட்டுக் கட்டையுடன் காத்திருந்தான்.
பட்டாளம்மன் கோயில் திருவிழா கலைக்கட்ட தொடங்கி இருந்தது. திருவிழா என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. அந்த ஊர் பெரிய தலக்கட்டின் நேர்த்திக்கடன் தான் அப்போது திருவிழாவாக உருப்பெற்று இருந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுற்றும் முற்றும் பதினெட்டு பட்டி பெரிய கைகளும், பட்டாளம்மனின் வகையறாக்களும் வந்திருந்தனர். இவர்களுடன் அகமலையின் மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டு தப்பித்த அந்த பூங்காற்றும் வருகை தந்திருந்தது. வருசநாட்டு மைனர் நாகப்பனும் அவன் கூடவே இளங்குமரி ஒருத்தியும் அம்பாசிடர் காரில் வந்தார்கள். அவன் இறங்கும் இடத்தில் வழிமறித்து தன் சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. எதிர்பாராமல் மைனர் மீது மோத வெண்ணிலா பட்டென்று கீழே விழுந்தாள். அவளை இறுக பிடித்து தூக்கி நிறுத்தியவன் அவள் கன்னங்களை பலமாக கிள்ளினான். வலித்ததோ என்னவோ சட்டென நகர்ந்து தன் தந்தையை தேடி ஓடினாள் வெண்ணிலா. அதுவரை ஒய்யாரமாக காருக்குள்ளே உட்கார்ந்து இருந்த அந்த இளஙகுமரி அப்போது தான் வெளியே வந்தாள்.
மைனர் என்ற பேருக்கு ஏற்றாற் போல் நல்ல வடிவுடன் தான் இருந்தான். அவன் பெயருக்கு பின்னால் ஒட்டுன்னி போல ஒன்று தொற்றிக் கொண்டு வரும் அது எதற்கு நமக்கு. நாகப்பன் என்பது கொள்ளு பாட்டனின் பெயர். அதை வேண்டா வெறுப்பாக சுமந்துக் கொண்டாலும் அது அவனுக்கு தகுந்த பெயர் தான். பெண்களின் மேல் தீராத காதல் கொண்டவன் என்று தன்னை தானே சொல்லிக்கொள்வான். ஆனால் ஊரார் அவனை, நிற்க என் மொழியில் சொல்வதாயிருந்தால் 'வருசநாட்டு வீதிகளில் உலவும் பெண்களை தேர்ந்தெடுப்பவன்' என்று சொல்லலாம். அவர்களின் வட்டார மொழியில் சொல்லப்போனால்! அது எதற்கு இங்கே. அந்த பெயர் நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல முன்னூறு ஆண்டுகளாய் அவர்களோடு பிரியாமல் தாங்கி நிற்கும் எருமார்பட்டி ஜமீனின் குலப் பெயர். ஊருக்குள் வந்தவுடனே புரணிகள் எல்லோர் வாயிலும் அமர்ந்து இருந்தது. 'இது எவடி புதுசா..' 'அடுத்தவன் புருசன வழச்சு போடனும்னே வருவாளுக போல' 'இவ மைனரோட புது கூத்தியாளா' 'ஆள் நல்ல கிழங்கு மாதிரி தான் இருக்கா' இவையெல்லாம் அவள் காதுகள்படவே பேசப்பட்டன. ஆனால் இவற்றை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை அந்த வருசநாட்டுக்கு வாழ வந்தவள். பதினைந்து திங்களுக்கு முன் தான் அவள் அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்தாள். வந்தவுடனே வருசநாட்டு மைனர் வீட்டுக்கு வேலையாள் ஆக சேர்ந்து குப்பை கொட்ட தொடங்கிவிட்டாள். அப்போது இருந்து எங்கு சென்றாலும் அவளை அழைத்து போவது மைனரின் வழக்கம்.
பெத்தராசு வழக்கம்போல கருப்பு கோட் சூட்டுடன் தொப்பி அணிந்து கைக்குட்டைகளையும் புறாக்களையும் வைத்துக் கொண்டு கற்ற வித்தையை பயிற்சி செய்து கொண்டிருந்தான்.அவனருகே பரலோகம் கிடா ஒட்டு மீசையும் நீண்டு வளர்த்த ஒட்டு தாடியையும் ஒட்டி கொண்டு கையில் கமண்டலும் வாயில் பீடியுமாக அமர்ந்திருந்தான். மூக்குறுஞ்சி சீலையின் மாராப்பை சரி செய்து கொண்டே பரலோகத்தின் குமட்டை இடித்துவிட்டு நகர்ந்தான். புகை நாலாப்புறமாக பரவியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வில்லை. ஆனால் எதுவுமே நடக்காததை போல ஒரு பாவனையை இருவரும் முகத்தில் ஒப்பனை செய்து வைத்திருந்தார்கள்.
வெரசாக தர்மகர்த்தா அங்கே வந்து அய்யாவு காதில் சில வார்த்தைகளை போட்டு விட்டு போனார் "ஏப்பா கூத்த கொஞ்சம் தள்ளி வச்சுகுறுங்க! பன்னண்டு மணி போல ஆரம்பிங்கனு சொல்றானப்பா" என்றான் அய்யாவு.
"ஏன்வாம்" கருமுண்டம் கேட்டான்.
"அந்த பசப்பி ஆட்டம் போட வந்துருக்காளாம்"
"எவடா"
"கம்பம் பூமாரிய தான் அண்ணே அப்படி சொல்லுது" மூக்குறுஞ்சி சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அந்த சிறுக்கியா!
நாசமா போச்சு...
அந்த அவ்சாரி வந்து ஆட்டம் போட்ட
மொத்த கூத்தும் ஆட்டம் கண்டுரும்....
இன்னைக்கு கூத்து நடந்த மாறி தான்"
"கட்டன் ரைட்டா சொல்லிரு பத்து மணிக்குலாம் கூத்து கட்டிருவோம்னு" கருமுண்டம் உறுதியாக சொன்னான்.
"ஏலேய் கூத்து கட்டிருவோம் கட்டிருவோம் சலம்புறியே எவன வச்சு கட்டுவ" அய்யாவு குரல் உசந்தது.
"நான் வேனா கூத்து ஆட வா
இல்லணே நீயும் ஆடமாட்டேனுட்ட
வேற ஆளும் இல்ல
அதான் நான் ஆடவானு கேட்டேன்" நடுவில் வார்த்தைகளால் கருமுண்டத்தின் சொல்லை வழிமறித்தான் பெத்தராசு. அந்த உரையாடலை பார்த்து கொண்டே இருந்த பெத்தராசு எந்த தயக்கமும் இன்றி நாசுக்காக கேட்டான். கொஞ்சம் காசுக்காகவும் தான்.
அய்யாவுக்கும் கருமுண்டத்துக்கும் சிரித்து முடிக்க மீநுண் விநாடிகள் கிடைக்கவில்லை. மூக்குறுஞ்சிக்கோ வெகு நேரமாகிவிட்டது. நல்ல வேளை அப்போது பரலோகம் அங்கில்லை அந்த வார்த்தைகளை கேட்க.
"ஏலேய் உனக்கு உன் வித்தையே ஒழுங்கா வராது
இதுல நீ கூத்து கட்ட போறியா
சும்மா இருப்பா"
"அண்ணே ஒரு வாய்ப்பு குடுணே
நான் நல்ல நடிப்பேன்ணே"
"ஆமா இவரு பெரிய இராஜபாட்டு கூத்து கட்டி கிழிப்பாரு
வருச கணக்கா நடிக்கிறவனுக்கே டவுசர் கிளியுது
வந்துட்டான்...
சொன்னா கேளு இதலாம் உனக்கு சரி வராது.
பேசாமா போ" என்றான் கருமுண்டம்
"இல்ல இல்ல இப்ப இது தான் சரியான முடிவு..." என்றான் அய்யாவு.
"என்னடா நீயும் இவன் கூட சேர்ந்து உளர்ற"
"உளறல எப்பே
இப்ப ஆள் இல்ல
அதுவும் இல்லாம இன்னும் ஒரு மணி நேரத்தில கூத்து கட்டியாகனும்...
இல்லனா நம்ம பகுமானம் பஞ்சா காத்துல பறந்துரும்" பதறிப் போய் சொன்னான் அய்யாவு.
"நீ என்னா யோசிச்சு இருக்க" அய்யாவு சட்டென கேட்டான்.
"இல்ல பரலோகத்த இரட்டை வேசம் போட சொல்லி..." என சொல்வதற்குள் அய்யாவு "அவன் ஒரு வேசத்துகே என் பாதி ஜீவன் போயிருச்சு இதுல இன்னொன்னா...
நீயே பார்த்தல்ல"
"இப்ப என்ன தான்டா பன்றது" கருமுண்டம் கேட்டதற்கு அய்யாவுவால் வேறு என்ன நல்ல முடிவை சொல்லி விடமுடியும்.
"வேற வழியே இல்ல ராசு தான் வேசம் கட்டியாகனும்"
"ஏலே மூக்குறுஞ்சி இவனுக்கு நல்ல அரிச்சந்திரன் வேசம் கட்டி கூட்டியாடா" என்று சொல்லி அய்யாவு பெத்தராசுவை வழியனுப்பி வைத்தான்.
ஒப்பனை அறைக்கு கூட்டி வந்து பூமாரியிடம் அறிமுகப்படுத்திவிட்டு. வெளியில் மைனரின் சத்தத்தை கேட்டு ஓடிவிட்டான் மூக்குறுஞ்சி.
"நீ தான் அரிச்சந்திரனா நடிக்க போறியா" என்றாள் பூமாரி.
"ஆமா" நெளிந்து கொண்டே சொன்னான் பெத்தராசு.
"இதுவரைக்கும் எத்தன கூத்து கட்டியிருக்க" மடிமீது கிடந்த தன் பிள்ளையின் வாயில் முலை காம்பை வைத்துவிட்டு கேட்டாள்.
"இது தான் மொத தடவ" தரையை பார்த்துக் கொண்டே சொன்னான் பெத்தராசு.
"ஹா ஹா ஹா" என்ற அவளின் நமட்டு சிரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது. குழந்தை வீறிட்டு அழுதது. விலகிய காம்பை மீண்டும் திணித்து விட்டு சிரித்தாள். இந்த உரையாடலை யாரோ கவனிப்பதை அவர்கள் இருவரும் அதுவரை உணரவில்லை. மைனருக்கு வெகு நாளாகவே பூமாரியின் மீது ஒரு கண் இல்லை இரண்டு கண். அவள் எங்கு ஆட்டம் போட சென்றாலும் ஆட்டம் பார்க்க 'உள்ளேன்' சொல்வது வழக்கம். பூக்கள் இருக்கும் இடத்தில் வண்டுக்கு வேலை இருக்க தானே செய்யும். பூமாரியும் இந்த மைனரை போல மேற்கே ஒரு மைனரின் ஆசை வார்த்தைகளை நம்பி வயிற்றில் வரத்தை வாங்கிக் கொண்டாள். அதை அவமான சின்னமாக நினைக்காமல் தன் திறமைக்கு ஆண்டவனின் பரிசு என ஏற்றுக் கொண்டு; ஏமாற்றம் அடைந்ததைக் கூட மனதில் புதைத்து கொண்டு வைராக்கியத்துடன் பிழைப்பு நடத்துகிறாள்.
அரிதாரத்தை அளவாக பூசி அரிச்சந்திரனுக்கு அழகு சேர்க்க ஆயத்தமானான் பெத்தராசு. அதற்குள் பூமாரியும் தன் மாராப்பை சரிசெய்து கொண்டாள். தந்தையின் புது அவதாரத்தை பார்த்து வாய் பிளந்து நின்றாள் வெண்ணிலா. பூமாரியின் குழந்தையை கண்டவுடன் வேகமாக அருகிலே சென்று அந்த பிஞ்சு கைகளை பிடித்து கொண்டாள் வெண்ணிலா. ராசுவின் ஒப்பனையில் கொஞ்சம் மனசாந்தி அடைந்திருந்தான் கருமுண்டம். தர்மாகர்த்தாவையும் ஒரு வழியாக தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டான் அய்யாவு. எல்லாம் சரியாக நடப்பதாக அங்கே ஒரு மாயை பின்னப்பட்டிருந்தது. அதை கண்டு அந்தகாரத்தில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. யார் கண்டா அது அந்த பட்டாளம்மனாக கூட இருக்கலாம்.
"ஏலேய் ராசு நீ நடிக்க போறது என்ன கத என்ன கதாபாத்திரம்னு தெரியுமா
அரிச்சந்திரன் கதைல அரிச்சந்திரனா நடிக்க போற"
பெத்தராசு முகத்தில் அத்துனை மகிழ்ச்சி.
"ஆமா...
அரிச்சந்திரன் கத தெரியும்ல" அய்யாவு கேட்டதற்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக சொன்னான் பெத்தராசு.
"தெரியும்னே எமன் கிட்ட மல்லுகட்டி நிக்க அவன் பொண்டாட்டி வந்து காப்பாத்துவாளே அதான"
"ம்ம் அதான்" பேச்சு வாக்கில் சொன்னான் அய்யாவு.
"அண்ணே" பதறினான் மூக்குறுஞ்சி.
"எது எமன் கிட்ட மல்லுக்கு நிப்பாளா" அய்யாவு பதற.
"கிழிஞ்சுது போ" தலையில் கைவைத்து சொன்னான் கருமுண்டம்.
"டேய் அரிச்சந்திரனாலே யாருனு தெரியாதா" அய்யாவு கேட்டான்.
"டேய் என்னடா இவன் நேரங் கெட்ட நேரத்துல தாலியறுக்குறான்" கருமுண்டம் கொஞ்சம் கலங்கினான்.
"டேய் அவனுக்கு அரிச்சந்திரன் கதயே தெரியாதுங்குறான்...
நீ வேசங் கட்ட சொல்லிட்ட" கருமுண்டம் அய்யாவுவை கோபித்துக் கொண்டான்.
"கத வேனா தெரியாம இருக்கலாம்...
ஆனா ஒரு பக்க வசனத்த மூச்சு விடாம பேசுவான்...
சுப்பராசு மவன் அதாலாம் பண்ணிருவான்...
நீ கொஞ்சம் காப்பி தண்ணிய குடிச்சிட்டு அமைதியா இரு" ஆறுதல் சொல்லி நகர்ந்தான்.
வளர்பிறையின் ஐந்தாம் திங்கள் கூத்தை காண வானில் வந்து நின்றது. இரவு பத்து என்பதே தெரியாமல் ஜனக்கூட்டம் கூடி இருந்தது. பலர் கம்பத்துக்காரியின் ஆட்டத்தை காண காத்திருந்தனர், சிலர் அம்மனின் உச்சி கால பூஜை முடியும் வரை பொறுத்திருந்தனர். ஓரிருவர் மட்டும் கட்டியங்காரனின் வருகையை எண்ணி திரைசீலையை கண் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
தேனி வட்டம் பின்பாட்டுகாரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். கருமுண்டம் ஆர்மோனியம் சகிதம் அவர்களோடு அமர்ந்து இருந்தான். மத்தளம், தாளம் மற்றும் முகவீனையும் இடம் பெற்று இருந்தது. களரி கட்டுதல் ஆரம்பாமாகி இருந்ததை உறுதிப்படுத்த கட்டியங்காரனாக அய்யாவு மக்கள் முன் தோன்றி இருந்தான்.
"அதாகப்பட்டது...
அன்பார்ந்த சிரிரங்கபுர கிராம பொதுமக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டம்...
கொடைக்கானல் தாலுக்கா...
பூம்பாறை கிராமம்...
சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு சார்பாக நடத்தக் கூடிய சம்பூர்ண அரிசந்திரா என்ற காவியத்தை காண வருகை தந்திருக்கும் அனைவருக்கும் சிங்காரம் தெருக்கூத்து கலைக்குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு
இனிதே இந்த தெருக்கூத்தினை தொடங்குகிறோம்...
நன்றி வணக்கம்..." என்று சொல்லி முடிக்கும் போது திடிரென மின் விளக்குகள் அனைந்தன. இருள் மெள்ள அந்த இடத்தை கைப்பற்றி கொண்டது. நீண்ட நேரமாகியும் இருள் விலகுவதற்கான அறிகுறி தெரியவில்லை. சிறிது நேரத்தில் சலசலப்புகள் எழுந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தார்கள். சட்டென ஒரு அலறல் எல்லோரும் திடுகிட்டார்கள். எல்லோர் வாயும் 'என்னாச்சு' என்ற வார்த்தையால் நிரம்பி இருந்தது.
இருள் விலகிய போது, பெத்தராசுவும், பரலோகமும் முகத்தில் இரத்தம் வழிய தேனி போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து இருந்தார்கள். இருவரும் கம்பிக்கு பின் அமர்ந்து இருக்க கம்பி முன் இருந்த சுவற்றின் மணிக்காட்டியில் இரண்டு முள்ளும் ஒன்றை ஒன்று தழுவி மேல் நோக்கி இருந்தது. கம்பிகளுக்கு அருகே மிக சமீபத்தில் கருமுண்டம், பரலோகம் மற்றும் மூக்குறுஞ்சியும் உட்கார்ந்து இருந்தார்கள்.
"டேய் என்னங்கடா...
எத்தன நாளா திட்டம் போட்டீங்க மைனர போட்டு தள்ள" என்று கேட்டார் அங்கிருந்த ரைட்டர்.
"ஐயா நீங்க வேற ஒண்ணு கணக்கா ஒண்ணு சொல்லி சோளிய முடிச்சுபுடாதீங்க" என்றான் கருமுண்டம்.
"ஆமாங்கயா தயவு பண்ணி எங்கள விட்டீங்கனா உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்" அய்யாவு இடையில் கட்டியங் கட்ட நினைத்தான்.
"தெய்வமே என்ன டவுசரோட அனுப்புனீங்கனா கூட சந்தோசம்னு ஊரு பக்கம் போயிருவேன்" தன் பங்குக்கு மூக்குறுஞ்சியும் ஒரு சொல்லை போட்டு விட்டு மாராப்பை இழுத்துக் கொண்டான்.
கம்பிகளுக்கு பின்னே பரலோகம் தலைக்கு கையை வைத்து ஒருகணித்தான். பெத்தராசு நிலவை தொலைத்த ஆகாயத்தை போல பிரம்மை கொண்டு இருந்தான்.
"சார் நைட்டு டிபன் எதும் வாங்கி தர்ற உத்தேசம் இருக்கா" தயங்கி தயங்கி கேட்டான் மூக்குறுஞ்சி
"ஏன்டா"
"இல்ல அப்படி எதுவும் இருந்தா பொரட்டா இல்லனா பிரியாணி வாங்கி யாற சொல்லுங்க சார்..."
"எகத்தாளம் தான்டா
டேய் எல்லோரும் ஒழுங்கு மரியாதையா பேசாம இருங்கடா...
இன்ஸ்பெக்டர் ஐயா வர்ற நேரம் ஆச்சு
இன்னைக்கு உங்களுக்கு இங்க தாண்டி கச்சேரி..." என சப் இன்ஸ்பெக்டர் அவர்களை அடக்கி வைத்துவிட்டு ரேடியோவை சரி செய்து கொண்டு இருந்தான்.
"டேய் இப்படி மச மசனு உட்கார்ந்து கிடந்தீங்கனா ஒரு வருசம் ஆனாலும் இங்க இருந்து போய்கிற மாட்டீங்க...
காசு கீச கொடுத்து தாஜா பண்ணுங்கடா" மெல்ல அய்யாவு காதில் ஓதினார் அருகே இருந்த ரைட்டர்.
"ம்ம் எம்புட்டுங்கயா" என்றான் பரிதாபமாக அய்யாவு.
"ஆன் ஒரு இரண்டாயிரத்த கொடுத்துட்டு போங்கடா"
"ஆத்தி...
ஏன் மொத்த கூத்து காசே அவ்வளவு வராதே" என்று கருமுண்டம் புலம்பினான்
"அப்புறம் உங்க இஷ்டம நான் ஒன்னும் சொல்லறதுகில்ல"
அன்று இரவு நடந்த சம்பவத்தில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை. தன் தந்தை வயது இருக்கும் ஒரு ஆண் இப்படி செய்வாரா? என்ற கேள்வி மட்டும் அவள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. பூமாரியின் அழகினை பார்த்து சபலபட்டவனுக்கு எதை கண்டு வெண்ணிலவின் மேல் சபலம் வந்ததோ தெரியவில்லை. அன்று பரலோகமும் பெத்தராசுவும் கூத்து கட்ட செல்லும் போது ஒப்பனை அறையில் ஒரு சிறிய சலசலப்பு வந்து கொண்டு இருந்தது. என்னவென்று போய் பார்க்கும் போது ஐந்தடி சர்ப்பம் ஒன்று வெண்ணிலவை தீண்ட எத்தனித்து கொண்டிருந்தது. பூமாரி எவ்வளவு தடுத்தும் அது தீண்ட துடித்தது. இதைக்கண்டு தந்தையாக பெத்தராசு துடித்ததை விட பரலோகத்தின் இரத்தம் கொதித்தது. நாவும் மனதும் வேறு வேறு தான் என பரலோகம் நினைத்தானோ என்னவோ. சர்ப்பம் தீண்டுவதைக் கண்டு ஒரே பாய்ச்சலாக தாவினான். அவனுக்கு பின்னே பெத்தராசுவும் பாய்ந்தான். மூவரும் ஒருவரை ஒருவர் கட்டி உருண்டு இருக்க சட்டென அந்தகாரம் சூழ்ந்தது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த சர்ப்பம் மீண்டும் வெண்ணிலவிடம் சென்றது. திடிரென ஒரு அலறல் இரத்த வெள்ளத்தில் அந்த சர்ப்பம் மண்ணில் வீழ்ந்து கிடந்தது. அந்த அலறலின் மறுமுனையில் 'இச்' என்ற முத்தச் சத்தமும் கேட்டது அதற்கு 'மா' என்ற மறுமொழியும் கொடுத்தது அந்த வெண்ணிலா.
அவன் வருகையை எண்ணி காத்திருந்த அந்த வெண்ணிலாவுக்கு மேகத்தினுள் மறைய ஆசையில்லை. கோயிலின் அருகே இருந்த அந்த அரசமரத்தின் நிழலில் பூமாரியின் துணையுடன் அவள் காத்திருந்தாள். புண்டரீகம் மலரும் ஓசை கேட்கும் அளவுக்கு நிசப்தம் குடிக்கொண்டிருந்தது. கைகளில் ரேகைகளையும் உதட்டில் புன்னகையையும் வாஞ்சையுடன் சுமந்து கொண்டு வரும் தன் தந்தையை எண்ணி காத்திருந்தாள். எத்தனையோ ஆசைகளோடு அங்கு வந்தவளுக்கு அத்தனையும் பொய்யாய் போனதற்கு அந்த பூங்காற்று வந்து பதில் சொல்லிட போவதில்லை.
அந்த இருட்டறையில் கம்பிகளுக்கு பின்னே அமர்ந்திருந்த பெத்தராசுவின் மேல் மேவிய பூங்காற்று அவனை பல ஞாபக சூழலுக்குள் மூழ்கடித்தது. ஒவ்வொரு முறையும் வேலைக்காக ஊர் திரும்பி வரும் போது அவள் ஆசையாக கேட்டதை வாங்கிக் கொண்டு வர முடியாத வக்கத்த தந்தையாக தான் நடைப்போட்டு உள்ளே வருவான். வெறுங்கையை வீசி கொண்டு வந்தவனின் கையை ஒரு தாமதம் பார்த்திருந்தாலும் அங்கேயே செத்திருப்பான் ஆனால் அவள் ஒருபோதும் அவன் கைகளை கவனிப்பதில்லை. தூரதேச போர் களத்தை வென்று வரும் ஒரு இராஜகுமாரனாக தான் அவள் முன் எப்போதும் தோன்றுவான்.
"டேய் கண்ணுல தண்ணி வருதா...
கழுத அத எதுக்கு புடிச்சு நிறுத்திகிட்டு இருக்க
அந்த கருமத்த வெளிய விடு போய் தொலையட்டும்
அது என்ன பாவம் பண்ணுச்சு" என்று தூக்கம் கலைந்த பரலோகம் சொல்லும் போதே அந்த பூங்காற்று கண்ணதாசனின் வரிகளில் மலையாள வாடையில் வீசி கொண்டிருந்தது. அந்த பாடலை மென் புன்னகையுடன் முனுமுனுத்து கொண்டிருந்தவனை பூங்காற்று நினைவுகளின் ஊடே வெண்ணிலவை அவனருகே வந்து அவன் மடியில் அமரவைத்தது. சட்டென தன் சட்டை பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து காற்றில் அசைத்து ஒரு வெண்புறாவை பறக்க செய்தான் பெத்தராசு. அதை பார்த்துக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்து தன் முகத்தை புதைத்து எப்பொழுதும் கேட்கும் அந்த ஒற்றை கேள்வியை இப்படி கேட்டாள் வெண்ணிலா "ஏன்பா உன் மேஜிக்ல நான் இராஜகுமாரியா வருவேனாப்பா?"
அதற்கு தன் பதிலாக அவன் மவுனத்தை உதிர்க்கும் போது, அந்த பூங்காற்று இதை அவன் காதுகளிள் உதிர்த்து விட்டு போனது.
"வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..வருகின்ற காற்றும் சிறுபிள்ளை ஆகும்.!
மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!
பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!
பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது..
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!
பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது.."
போன பூங்காற்று என்ன நினைத்ததோ மீண்டும் அவனை நோக்கி வந்தது. அவன் முகத்தில் மெள்ள படர்ந்து அவன் மார்பு கூட்டுக்குள் தன்னை தானே அவனுக்கு சிறையாக்கி கொண்டது அந்த பூங்காற்று.
- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி