பூவிழிக் கதவைத் திறந்து வைத்து

பூவிழிக் கதவைத் திறந்துவைத்துப்
புன்னகை அதிலும் தவழவிட்டுக்
காவலாய் யிமைகள் காத்திருக்கக்
காதலை அங்கே மறைத்துவைத்துத்
தாவிடு மெண்ண வலைகளிலே
தாமரை யாக மிதந்தபடி
தூவிய மழையி லுளம்சிலிர்க்கத்
தூயவன் வரவைப் பார்த்திருந்தாள்!
மாயவன் கண்ணன் வருவானோ
மங்கையி னுள்ள மறியானோ
ஆயனின் குறும்பை நினைத்தபடி
ஆயிழை மனப்பால் குடிக்கின்றாள்!
வாயினிற் சொற்கள் வரவில்லை
வாடிய முகத்தில் ஒளியில்லை
தேயினும் வளர்வாள் மதிபோலே
தேவனைக் கண்டால் மலர்வாளே!!
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 10:32 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 22

மேலே