இசைப்பாடல்
இசைப்பாடல்
***************
பல்லவி
*********
உன்னையன்றி யார்தருவார் உரைப்பாய் கந்தா - என்
உள்ளமெனும் கோயிலிலே ஒளிர்வாய் கந்தா !
அனுபல்லவி
**************
நின்பதமே கதியென்று நெஞ்சுருகு மெளியேனின்
முன்வினைகள் களைந்துவிட்டு முத்தமிழால் அரவணைப்பாய்! ( உனையன்றி)
சரணம்
********
மின்னுமாறி ரண்டுகண்கள் வேலாவுன் எழில்கூட்டும்
பொன்னொளிரும் புன்னகையும் பூமுகத்திற் கருள்சேர்க்கும்
குன்றமர்ந்த குமராவுன் குருகுகொடி நலம்காக்கும்
சென்றவிட மெங்குமுன்றன் செவ்வேலே துணைநிற்கும்! ( உன்னையன்றி)
போதுமென்ற மனத்தோடு பூமியிலே வாழ்ந்திருந்தேன்
மோதுகின்ற கவலைகட்கு முடிவின்றித் தவிக்கின்றேன்
ஏதுசெய்ய வெனநீயே எனக்குரைத்தால் அகமலர்வேன்
யாதுமாக நெஞ்சத்தில் இருப்பவனும் நீதானே!
( உன்னையன்றி)
சியாமளா ராஜசேகர்