தான்விழைந்த வண்ணம் புரியினோ வெய்யதுயர் உண்ண உளையும் உயிர் - அரசு, தருமதீபிகை 757

நேரிசை வெண்பா

வான்வழங்கி வந்தாலும் மண்விளைந்து தந்தாலும்
கோன்விளங்கி நீதிமுறை கோலாமல் - தான்விழைந்த
வண்ணம் புரியினோ வையமெலாம் வெய்யதுயர்
உண்ண உளையும் உயிர். 757

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வானம் பருவ மழையைப் பொழிந்தாலும், மாநிலம் மிகுதியான விளைவுகளைத் தந்தாலும் அரசன் இங்கே நெறியோடு அமர்ந்து நீதிமுறை புரியாமல் பொறி வெறியனாய்க் கோது படிந்திருப்பின் மக்கள் யாவரும் மிக்க துயரங்களை அடைந்து வருந்துவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் நீதிக் காப்பின் நிலைமையை உணர்த்துகின்றது.

உலகில் நிலவும் உயிரினங்கள் பசித்துயரோடு பிறந்திருக்கின்றன. அந்தப் பசி தீர உணவு தேவை; அவ்வுணவு பயிர்களிலிருந்து விளைந்து வருகின்றன. அவ் விளைபயிர்கள் மழையினால் உயர்ந்து மலர்ந்து பலன் தருகின்றன. ஆகவே, வான மழையும் மண்ணின் விளைவும் மன்னுயிர்க்கு இன்னமிர்தங்களாய் ஈண்டு எண்ண நேர்ந்தன.

உயிராதாரமான இந்த மழையும் விளைவும் வளமாக வாய்ந்திருந்தாலும் அரசன் நெறியோடு தோய்ந்து நீதி புரியானாயின் அந்நாடு பீடையாப்ப் பெருந்துயரங்களையே அடையும். நெல் இருந்தாலும் நீரிருந்தாலும் பொன் இருந்தாலும் பொருள் இருந்தாலும் அரசன் இருந்து முறையாய் ஆளவில்லையானால் யாரும் அங்கே அமைதியாய் வாழமுடியாதாதலால் அவனது ஆட்சியும் நாட்டின் காட்சியும் இங்கு நன்கு காண வந்தன.

வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோனோக்கி வாழும் குடி. 542 செங்கோன்மை

உலகம் மழையால் வாழும்: குடிகள் அரசனது நீதியால் வாழுமென வள்ளுவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். பொது வாழ்வும் சிறப்பு வாழ்வும் ஒருங்கே குறிக்கப்பட்டன. கோல் - செங்கோல். யாண்டும் கோடாமல் எவ்வழியும் செம்மையான நேர்மையோடு நீதி புரிவேன் என்பதற்கு அடையாளமாகவே செவ்விய ஒரு கோலை மன்னன் கையில் மாண்பாய் ஏந்தியிருக்கிறான்.

அரசனது உள்ளம் செம்மையாய் ஆட்சி புரியின் அவன் செங்கோலன் ஆகிறான். அவ்வாறாயின் அதிசய மேன்மைகள் அவனிடம் பெருகி வருகின்றன. தரும தேவதை உரிமையாய் உதவி புரிகின்றது. கருதியபடி காரியங்கள் கைகூடுகின்றன.

வேலன்று வென்றி தருவது; மன்னவன்
கோலதூஉம் கோடா(து) எனின். 546 செங்கோன்மை

அரசன் நீதி கோடாமல் செங்கோலனாயிருந்தால் வெற்றி, புகழ், திரு முதலிய யாவும் அவன்பால் திரண்டு வரும் என்பது இதனால் தெரிய வந்தது. நீதி முறையால் அரிய பல மகிமைகள் விளைகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மழைவளம் சுரக்கு மாறும், வயல்நிலம் விளையு மாறும்,
விழையறம் வளரு மாறும், வேதநூல் விளங்கு மாறும்,
தழைபொருள் ஈட்டு மாறும், சமரிடை வெல்லு மாறும்,
பிழைதப வாழு மாறும், பிறழ்தராக் கோலின் ஆகும். - விநாயக புராணம்

செங்கோலால் விளையும் விளைவுகளை இது நன்கு விளக்கியுளது.

எங்கும் எவ்வுயிர்க்கும் யாதும் பங்கம் நேராமல் எவ்வழியும் செவ்வையாய் நீதி செலுத்துவேன் என்பதற்கு அறிகுறியாகத் தன் கையில் செங்கோல் தாங்கியுள்ள மன்னன் நிலைதவறிப் பிழை செய்ய நேர்ந்தால் உலகம் பல வகையிலும் அல்லலுழந்து அலமரலடைந்து யாண்டும் அவலமுற நேரும்.

‘துயர் உண்ண உயிர் உளையும்’ என்றது துன்பங்கள் சூழ்ந்து தின்ன மக்கள் துடித்து வருந்துவர் என அவரது வாழ்வின் பரிதாபநிலை தெரிய வந்தது. வேந்தன் வெய்யனாயின் வைய மாந்தர் ஐயோ என்று அலமர லுறுதலால் இருவர் நிலைமையும் ஒருமுகமாயுணர நேர்ந்தது.

அரசன் முறையோடு காவானாயின் வேலியிழந்த பயிர் போல் குடிகள் நிலைகுலைந்து துறைதோறும் துயரங்களையே அடைவர். தன் கடமையை உணர்ந்து முறைபுரிந்து அரசன் நாடு காத்து வந்தால் தாய் கைப்பிள்ளை போல் மக்கள் யாண்டும் மகிழ்ந்து வாழ்வார்; அவன் மடமையாய் மாறுபட்டிருப்பின் பேய்வாய்ப் பிள்ளை போல் அச்சமும் திகிலும் மண்டி எவ்வழியும் மாந்தர் வெவ்விய துயரங்களோடு வெருவி உழலுவர். இனிய ஆதாரமாயுள்ளவன் கொடியனாகவே நெடிய துன்பங்கள் நீண்டு நின்றன.

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நிறத்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வாழ் 1உயிர்க்கிடர் எல்லை யுண்டோ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வையம் அரும்படர் உழக்கும் அன்றே. 24

மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுந் தாமிக வெதும்பு மன்றே. 25

தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே. 26

மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய். 27 மந்திரசாலைச் சருக்கம், சூளாமணி

அரசன் சரியானபடி முறை செய்யவில்லையானால் நாடு எப்படியிருக்கும்? மக்கள் எவ்வாறு மறுகி வருந்துவார்? என்பதை இவை நன்கு வரைந்து காட்டியுள்ளன. பாசுரங்களைக் கருத்தூன்றிப் படித்துப் பொருள்களின் நயங்களை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். மன்னன் காப்பால் மாநிலம் மகிழ்ந்தது.

கடல் காய்ந்து வெதும்பினால் அதில் வாழும் மீன்கள் என்னபாடு படுமோ அன்னவாறே இனியனாய் இதம் புரிய வுரிய மன்னன் கொடியனாயின் அந்நாட்டு மக்கள் இன்னலுழந்து இடர்மிகுந்து தவிப்பர் என்று குறித்திருக்கிறார், உவமைக் குறிப்பு ஆய்ந்து சிந்தித்து யாவும் தேர்ந்து கொள்ளவுரியன.

ஒரு வீட்டுத் தலைவன் நெறிகேடனானால் கேடு அந்த வீட்டோடு நிற்கும்; நாட்டுத் தலைவன் நிலை திரிந்தால் நாடு முழுவதும் புலைக் கேடுகள் புகுந்து பொல்லாங்கு மிகுந்து விடும்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும்மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே. 2 - முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை, திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

நாளும் மன்னன் நாடி ஆராய்ந்து ஆளுகை புரியானாயின் அந்த நாடு விரைந்து கெடும்; மூடங்கள் விரிந்து யாண்டும் பீடைகள் பெருகும்; உரிய திருவையிழந்து அவனும் இழிந்து அழிந்து போவான் என திருமூலர் இவ்வாறு மொழிந்திருக்கிறார்.

தானும் கெட்டு, நாட்டையும் கெடுத்து அரசன் நாசம் அடையாமல் தேசுடையனாய் நின்று செங்கோல் புரிய வேண்டும். கடமை புரியும் அளவு தலைமை தழைத்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-21, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே