எண்ணம் புனிதமாய் இதம்புரிந்து தண்ணளி செய்து தகையாள்க - புண்ணியம், தருமதீபிகை 747

நேரிசை வெண்பா

எண்ணம் புனிதமாய் யார்க்கும் இதம்புரிந்து
தண்ணளி செய்து தகையாள்க - கண்ணகன்ற
ஞாலமெலாம் உன்னை நயந்து தொழுதேத்த
மேலவனாய் நிற்பாய் மிகுந்து. 747

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எண்ணம் தூய்மையாய்க் தண்ணளி புரிந்து எவ்வுயிர்க்கும் இதம் செய்து வருக; அவ்வாறு வரின் நீ புண்ணியவான் ஆகி விரிந்து பரந்த உலகமெல்லாம் உவந்து தொழுது புகழ்ந்து வர நீ உயர்ந்து விளங்குவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் மேலோன் ஆகும் மூலம் கூறுகின்றது.

செல்வத்தில் சிறந்து பதவியில் உயர்ந்து நல்ல சுகபோகங்களை நுகர்ந்து யாவரும் புகழ்ந்து போற்ற இனிது வாழ வேண்டும் என்றே எல்லா மனிதரும் எண்ணுகின்றனர். அந்த எண்ணம் நன்கு நிறைவேற எந்த வண்ணம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை எவனும் சிந்தை செய்வதில்லை. உரிய கடமைகளைச் செய்யாமல் அரிய பெருமைகளையடைய அவாவுவது பெரிய மடமையாய்ப் பெருகியுள்ளது. வரவு நிலை தெரியாமல் கரவு வழிகளில் மனித சமுதாயம் மறுகி யுழலுகின்றது.

செய்த வினையளவே பலன் எய்த வருகிறது. நிலைமைகளுக்குத் தக்கபடியே கருமங்கள் பெருமை பெற்றுப் பெரும் பலன்களைத் தருகின்றன.

தான் உழைத்து ஈட்டிய பொருளைத் தன்னளவில் அடைத்து வைப்பவனும், தானாகவே உண்டு களிப்பவனும் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது. பிற உயிர்கள் இன்புற உதவி வருபவனே தன்னுயிர்க்கு இன்பத்தைச் செய்தவனாய் உயர்ந்து வருகிறான். இனிய இதம் அரிய அறம் ஆகிறது.

தன் கருமத்தால் தருமத்தை விளைத்து வருபவன் இருமையும் பெருமையாய் இன்புறுகிறான். அவ்வாறு செய்யாதவன் சிறுமையே அடைகின்றான். புண்ணியத்தைப் பேணி வருமளவே மனிதன் கண்ணியம் பெறுகின்றானாதலால் மண்ணியல் மாந்தர்க்கு விண்ணியல் அமிர்தமாய் அது விளங்கி நிற்கிறது.

அறம் படியாத வாழ்வு மறம் படிந்து எவ்வழியும் இழிந்து படுகிறது. தருமம் மருவியதே பெருமையாய்ப் பேரின்பமுறுகிறது.

இன்னிசை வெண்பா

நொறுங்குபெய்(து) ஆக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்;
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று. 168 அறநெறிச்சாரம்

சுயநலமே கருதித் தன் வயிற்றை மாத்திரம் வளர்த்து வருபவன் இளி வாழ்வுடையனாய் இழிந்து படுகிறான்; அவன் ஈனமான ஒரு காட்டு விலங்கே என இது வரைந்து காட்டியுளது.

பன்றியும் நாயும் கூட வயிறார உண்டு வாழ்கிறது; அது வாழ்வா? மனிதன் அந்த நிலையில் வாழலாமா? மதிநலமுடைய மனிதன் விதிமுறை தெரிந்து தன்னுயிர்க்கு இனிய உறுதிநலனை உரிமையோடு மருவிக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் கொள்ளாமல் உடம்பைக் கொழுக்க வளர்த்துக் களித்துத் திரியின் அவன் இழிந்த ஒரு மிருகமேயாவான்; அழிந்துபடும் அவலமே யுடையவன் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது.

அறம் புரியும் வாழ்வே வாழ்வு; அஃது இல்லாத வாழ்வு பாழே. வெறும் பெட்டியை ஒருவன் பூட்டி வைத்தான்; பின்பு திறந்து பார்த்தான்; உள்ளே ஒன்றும் இல்லை; ஏங்கி வருந்தினான்; இழிந்து ஒழிந்தான்; தருமம் புரியாதவனும் அவ்வாறே யாதும் இல்லாதவனாய் அல்லலுழந்து அலமந்து போகின்றான்.

தன் வாழ்க்கையில் புண்ணியம் புரிந்தவன் பொன்கட்டிகளை நிறைத்து வைத்தவனாகின்றான்; ஆகவே எண்ணிய இன்ப நலன்களையெல்லாம் எங்கும் பெற்றுப் பொங்கிய புகழோடு பொலிந்து விளங்குகிறான். அறம் அமர வாழ்வை அருளுகிறது.

’தண்ணளி செய்’ என்றது புண்ணிய விளைவை எண்ணி வந்தது. உள்ளம் உருகியருள உயர் பேரின்பம் பெருகி வருகிறது.

புண்ணியம் பொருளால் மாத்திரம் அன்று; அருளாலேயே பெரிதும் அது பெருகி விளைகிறது. உயிர்களுக்கு இரங்கி உதவுவது அருளியல்பாதலால் அது பெரிய புண்ணிய நிலையமாய்த் தலைமை எய்தியுள்ளது. அதனையுடையவர் அரிய பல மேன்மைகளை விரைந்து அடைந்து பெரிய இன்பங்களைப் பெறுகின்றார்.

விசாலன் என்பவன் இரக்கம் மிகவுடையவன்; வயனங்கோடு என்னும் ஊரில் வேதியர் சிலர் வேள்வி செய்தனர்; அதில் பலியிடும் பொருட்டு ஒரு பசுவைப் பிணித்து வைத்திருந்தார்; அதனை இவன் கண்டான்; அதன் நிலைமையை நோக்கி நெஞ்சம் இரங்கினான். ’ஐயோ! பசுவைப் படுகொலை செய்யப் போகிறார்களே!’ என்று பரிந்து வருந்திய இவன் இரவு வரவும் யாரும் அறியாமல் புகுந்து அதனை அவிழ்த்து வெளியேற்றி அயலே இதமாய்க் கொண்டு போய் விட்டான்.

அப்பதி தன்னுள்ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்
குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
30 வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்

கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்றுஆங்கு
அஞ்சிநின்று அழைக்கும் ஆத்துயர் கண்டு
நெஞ்சுநடுக்(கு) உற்று நெடுங்கணீர் உகுத்துக்
35 கள்ள வினையில் கடுந்துயர் பாழ்பட

நள்இருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்துஆங்கு ஒருபுடை ஒதுங்கி
அல்இடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன்.. 13.ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, மணிமேகலை, 13

அருள்புரிந்து இவன் பசுவைக் காத்துள்ள நிலையை இப்பாசுரம் உணர்த்தியுள்ளது. ஆவின் நிலையைக் கண்டபோது இவன் குலைதுடித்து மறுகியிருக்கிறான். ’நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீருகுத்து’ என்றதனால் இவனது இரக்கமும் உருக்கமும் உணரலாகும். சீவதயை ஆவிநிலையாய் மேவி மிளிர்கின்றது.

கொலை நிலையிலிருந்து நீக்கிப் பசுவை இவ்வாறு இவன் பாதுகாத்துக் கொண்டுபோய்க் காட்டில் ஓரிடத்தில் அதற்குப் புல்லை ஊட்டி நின்றான். ஆவைக் காணாமையால் வேதியர் வேதனையோடு தேடித் திரிந்தார்; இவனைக் கண்டு எள்ளி வைது அடித்தார்; அப்பொழுது அந்தப் பசு சீறிப் பாய்ந்து ஒரு பார்ப்பானை வயிற்றைக் கிழித்துக் குடலைச் சரித்துவிட்டு அடலோடு ஒடிப்போயது. கையில் அகப்பட்ட இவனை எல்லாரும் நையப் புடைத்தார். அடிகளைத் தாங்கிக் கொண்டு அம்மறையவர்களை நோக்கி இதமொழிகளை இனிது கூறினான். அன்று இவன் கூறிய அறிவுரைகள் சீரிய நீர்மைகள் தோய்ந்தன.

நோவன செய்யன்மின்! நொடிவன கேண்மின்!
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோ(டு) அருள்சுரந்(து) ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை?
முதுமறை அந்தணிர் முன்னிய(து) உரைமோ' - விசாலன்

‘தானாகக் காட்டில் முளைத்த புல்லை உண்டு, ஏரி குளங்களில் நீரைக் குடித்து, நாட்டிலுள்ள மக்களுக்கு யாண்டும் தரும சிந்தனையோடு பாலை ஊட்டியருளுகிற பசுவினிடம் நீங்கள் கொடுமை காட்டுகிறீர்கள், அதனைக் கொல்லவும் துணிகிறீர்கள்; யாகம் என்று வெளியே இனிய பேரை வைத்துக் கொண்டு உள்ளே கொடிய கொலைகளைச் செய்கிறீர்கள்; இது எவ்வளவு புலைத்தீமை! உங்களுக்கு அந்தணர் என்ற பெயர் யார் தந்தது? எதனால் வந்தது? அதனைக் கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்; விவேக சூனியமாய்த் தீவினைகளைச் செய்யாதீர்கள்; நீசமான அவை உங்களுக்கு நாசமேயாம்; தெளிந்து ஒழிந்து போங்கள்’’ என்று இவன் மொழிந்திருப்பது உணர்ந்து சிந்திக்கவுரியது. அருள் சுரந்த உரைகள் பொருள் நிறைந்துள்ளன.

குழந்தையாயிருந்த பொழுது ஒரு பசு பால் ஊட்டி இவனை வளர்த்தமையாலும், பசுவை அன்புரிமையோடு பாதுகாத்தமையாலும் இவன் ஆபுத்திரன் எனப்பட்டான். மிகுந்த சீவகாருணியம் உடையவனாய் யாண்டும் உயிர்களை இவன் இனிது பேணி வந்தான். குருடர், முடவர், வறியவர் முதலிய எவரைக் கண்டாலும் உள்ளம் உருகி இவன் உதவி புரிந்தான்.

காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருகயென் றிசைத்துடன் ஊட்டி
உண்டொழி மிச்சிலுண்(டு) ஓடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன்.. மணிமேகலை

என இவனது உபகார நிலையைக் குறித்துச் சாத்தனார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். தண்ணளியோடு உயிர்களை இவ்வண்ணம் பேணி வந்தமையால் பின்பு இவன் நாக நாட்டு மன்னனாய்ப் பிறந்தான். சிறந்த புண்ணியத்தால் பிறந்த இவன் அந்த வாசனையோடே தரும நீர்மைகள் நிறைந்திருந்தானாதலால் புண்ணிய ராசன் என்னும் பேரோடு பொலிந்து விளங்கினான். உலகம் இவனை உவந்து தொழுதது.

தன்னை ஈன்ற தாயினும் தருமம் ஒருவனுக்கு ஆன்ற துணையாம். தாய் உடலை உரிமையோடு பேணுவாள்; தருமம் உயிரை என்றும் அருமையாகப் பேணி அருளுகிறது. ஒரு பிறவியில் மருவிய தருமம் வருபிறவிகளிலும் உரிமையாய்ப் பெருமகிமை புரிகின்றது; பேரின்பங்களை அருளுகின்றதாதலால் அது சீவனுக்குத் தேவ அமுதமாய்ச் சிறந்து திகழ்கின்றது.

அன்றறிவாம் என்னா((து) அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 அறன் வலியுறுத்தல்

தருமத்தை விரைந்து செய்து கொள்ளுக; அது சிறந்த திரு, நீ இறந்து படுங்கால் அது இறவாத துணையாய் உனக்கு உடன் தொடர்ந்து உறுதி நலன்களைப் புரியும் என வள்ளுவர் இங்ஙனம் கருணையோடு தரும போதனையை உரிமையாய்ச் செய்திருக்கிறார்.

நேரிசை வெண்பா

ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32 நல்வழி

உலக மக்களே! உங்கள் வாழ்வு நிலையில்லாதது; பிற உயிர்களுக்கு இரங்கிச் சோறும், நீரும் கொடுங்கள்; அது தருமமாய் உங்களுயிர்க்கு இருமையும் இன்பம் தரும்; அதனை உரிமையாய்ப் பேணிக் கொள்ளுங்கள் என ஒளவையார் கூறியுள்ளார்.

நேரிசை வெண்பா

ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை. 14 அறநெறிச்சாரம்

நீ ஈட்டிய செல்வம் வீட்டோடு ஒழியும்; உன் சுற்றத்தார் சுடு காட்டளவில் விட்டு விலகுவர்; உடம்பு தீயில் எரிந்து தொலையும்; நீ செய்த தருமமே உனக்கு இனிய துணையாய் வருமென முனைப்பாடியார் இப்படி மனிதனுக்கு நினைப்பூட்டியிருக்கிறார்.

கட்டளைக் கலித்துறை

அத்தமும் வாழ்வும் அகத்துமட் டே!விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்,தலை மேல்வைத்(து) அழும்மைந் தரும்சுடு காடுமட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! - பட்டினத்தார்

உறவுரிமைகளாய் நண்ணியிருந்த எவையும் மனிதனுக்குத் துணையாகா, செய்த புண்ணியமே அவனைத் தொடர்ந்து சென்று எவ்வழியும் இன்பம்.அருளும் எனப் பட்டினத்தார் இவ்வண்ணம் சுட்டிக் காட்டி உயிர்க்கு ஊதியத்தை உணர்த்தியுள்ளார். அரிய இந்த உயிரமுதத்தை உனக்கு இனிமையாக உரிமை செய்து கொள்ளுக; இருமை நலனும் எதிரே எய்த வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-21, 8:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே