அது இது எது

"அது" எச்சரிக்கை விடுத்தது

ஆனால் "அவன்" "அதனை" புறக்கணித்து விட்டான்

கோபத்தில் "அதன்" கண் சிவந்தது

"அவன்" கண்டுகொள்ளவே இல்லை

துச்சமாய் "அதனை" புறந்தள்ளினான்

சில நிமிட இடைவெளியில் மீண்டும் "அது" எச்சரித்துப் பார்த்தது

"அவனோ" தன் போக்கில் இருந்து சிறிதளவும் மாறவே இல்லை

"அதன்" செயலுக்குக் கட்டுப்படுவோரை எல்லாம் ஏளனமாய் பார்த்து எள்ளி நகையாடினான்

கடமை உணர்வோடு கூடிய "அதன்" அக்கறையைக் காலில் போட்டு மிதித்துவிட்டுப் போனான்

"அதன்" அன்புக் கட்டளைக்குக் கீழ்ப்படியாததாலேயே பலரின் வெறுப்புக்கு ஆளானான்

எத்தனை இடங்களில் "அது" கண்டித்துப் பார்த்தாலும் தனது போக்கில் "அவன்" தொய்வடையவே இல்லை

ஆனால்...

அடுத்த சில மணித்துளிகளில் சம்பவம் ஒன்று நடந்தது, நல்ல தரமான சம்பவம்.

"அவனது" பயணத்தை சீர்குலைப்பதுபோல் "இது" அப்போது குறுக்கிட ஆரம்பித்து விட்டது

தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆசுவாசமாய் "இது" கடந்து போனது

உண்ட களைப்பில் உற்சாக மிடுக்கில் "இது" தனது அன்புக்கு உரியவர்களுடன் எதிரே தட்டுப்பட, "இதனை" சிறிதும் எதிர்பார்க்காத "அவன்", நிலைகுலைந்து போனான்

சங்கப் பரிவாரங்களுடன் சமீபித்த "இதன்" திடீர் வருகை, சற்று முன்னர் "அது" கொடுத்த கனிவான எச்சரிக்கைக்கு சற்றும் பொருத்தமற்ற வகையில் அமைந்து, "அவனது" குதூகலப் பயணத்தைக் குலைக்க ஆரம்பித்தது

"இதன்" வரவை தடுக்க முயன்று... தவிர்க்க முயன்று... புறக்கணிக்க முயன்று... புறந்தள்ள முயன்று தோற்றுப் போன "அவன்", "இதன்" காலில் மிதிபட்டுக் கதறிக்கொண்டிருக்கும் போதுதான் உணரத் தொடங்கினான், உண்மையான அக்கறையோடு கூடிய "அதன்" எச்சரிக்கையை சிறிதளவும் மதிக்காமல் நடந்துகொண்டதை...!

ஆம்.

"அது" ஒரு டிராஃபிக் சிக்னல்,

"அவன்" ஒரு பைக் பிரியன்,

"இது" ஒரு எருமை மாடு.

(சம்பவம் புரியாவிட்டால் மீண்டும் படிக்கவும்)


எழுதியவர் : தனசேகர் (10-Feb-21, 10:05 pm)
சேர்த்தது : Dhanasekar
Tanglish : athu ithu ethu
பார்வை : 103

மேலே