என் வசந்த மாளிகையில்

உன் ராஜசபையில்
நீ.. ராணி
எப்போதும் நான்..
விகடன்தான்

துக்ளக் சுல்தானாய்
நான் முரண்பட்டால்
நீ நெற்றிக்கண் திறக்கின்ற
எமகண்ட நேரத்தில்
என் உதடுகள் உளறி
தந்தியடிக்கும்

மன்னிக்கும் மனமில்லா
நக்கீரன் நீ

மங்கையர் மலரே
இந்து..
என் இந்திராணி

ஜன்னல் இடுக்கில்
எட்டிப்பார்த்து ஒளிர்ந்த
தினகரன்
மேற்கில் சரியும் நேரத்தில்
என் பயமும் சரிந்து
ஆசை முரசொலிக்கிறது
அருகே வா

உன்
குமுத விழி வலையில் சிக்கி
கல்கண்டு மொழி அலையில்
கரைந்து கரை சேர்கிறேன்

தின(ம்)மலரும்
மலர்கள் எத்தனை இருந்தாலும்
அந்த மாலை மலர்
மல்லிகை மட்டும்
உன் இருட்டுக்கூந்தலில்
ஏறியத் திமிரில்
என்னை மயக்கிச் சாய்க்கிறது
இப்படித்தான்
என் இதயம் பேசுகிறது

உன் நெற்றிக் கடலில்
குட்டித்தீவாய் மிதக்கும்
சிவப்புக் குங்குமம்
பச்சைக் கொடி காட்டுகிறது
பக்கத்தில் வா...

"அப்ப புதிய தலைமுறை
ஜூனியர் எல்லாம்  எப்ப வரும்?  "

"வரவேண்டிய நேரத்துல
கரெக்டா வரும் "

எழுதியவர் : ராஜசேகரன் (22-Feb-21, 8:15 am)
சேர்த்தது : இராசசேகரன்
பார்வை : 89

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே