தேர்தல்

தேர்தல்
🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
தேர்தல் திருநாளின் சாம்பு ஒலி சலசலக்க
தினம் ஒருகட்சிக்கு கூடும் அதே பணக்கூட்டம்

அன்றாடம் பிரச்சாரம் கன்றாவிப் பெருங்கூத்து
ஞெகிழம் கட்டிய கால்கலென்ன நிற்காதே ஓரிடத்தில்

பதவி என்ற ஏடை மனதில் வெறித்தனமாய் தோன்றிவிட
பகலிரவை மறந்து தினம் சேவலெனக் கூவுகிறான்

வாக்குறுதி வழங்கும்போது வாய்மீது கைவைப்போம்
வென்றதும் சென்றுபார் வெட்டுப்பட்ட வேரல் தோற்றம்

ஆல்போல் இலட்சத்தில் அத்தனை பணக்கத்தை
அழித்தே சேர்க்குதுபார் கட்சிகள் தினம் கூட்டத்தை

வென்றதும் அன்றாடத் தேவைக்கு மண்றாடிச் சென்றுபார்
பாம்பு போல் தூம்புக்குள் பதுங்கியே ஒதுங்கிடுவர்

அறிந்தும்தான் நடக்குதுபார் அப்படியே பலதேர்தல்
தறுகண் என்னவென்றால் தப்பாமல் வாக்களிப்பு

துறைகளை போழ்வு செய்து துண்டுகளாய் அறுத்தெடுத்து
பெருந்தலைகள் பங்கு போட்டு பிரித்துக்கொள்ளும் வெட்கக்கேடு

பார் முழுக்க தேடினாலும் பணம் ஈட்டும் பெருந்தொழிலாய்
சென்னியாய் நிற்பதுவோ சீர்கெட்ட அரசியலே

மூதுவர் இதையறியா முட்டாளாய் எண்ணித்தான்
முடியாட்சி அழித்து இங்கே குடியாட்சி வைத்தனரே

கடியறையில் வாழ்த்துக்காக காத்திருக்கும் மணமக்களாய்
ஓட்டுக்காக நாட்டுக்குள் ஓடி ஓடி தேடும் பாசம்

சழக்குகளைப் பார்த்துப் பார்த்து பழக்கமாக மாறிடுச்சு
முழுக்க முழுக்க நனைந்தபிறகு முக்காடும் நமக்கெதுக்கு........

எழுதியவர் : க.செல்வராசு (24-Feb-21, 3:19 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 52

மேலே