மலரும் நினைவுகள்
மலர்ந்திருக்கும் பேரழகு
மறைத்திருக்கும் தாவணி
காத்திருக்குமென் விழிகள்
காற்றுவீசும் தருணங்கள்
ஆற்றங்கரை அரசமரம்
அசராமல் சாமரம்
கழுத்தளவுத் தண்ணீர்
கச்சேரித் தவளைகள்
சங்கீதக் கொலுசுகள்
செவ்வாழைக் கால்கள்
விலகிவிடு என்றபோதும்
விலகாத என்விழிகள்
அதிராத இளம்நடை
அசைந்தாடும் கொடியிடை
குடம்நீரைச் சுமக்கும்
என்மனமோ கனக்கும்
புத்தம்புது தாவணியில்
அவளழகோ இருமடங்கு;
மெத்தனவு நடையாலே
மிளிர்கிறது பன்மடங்கு
முத்துப்பல் வரிசை
முத்தங்கள் சீர்வரிசை
சிற்றின்பம் இதுவென்றால்
பேரின்பம் எதுவென்பேன்
பார்வையால் பருகிவிட்டு
பறக்கின்ற தேன்சிட்டு
ஒருசொல் உதிர்க்கக்கேட்டு
உருகுகிறேன் உள்ளங்கெட்டு.