பள்ளிகூடப் பறவைகள்

இருபதாண்டுகளுக்கு முன்
இதே வகுப்பறையில்தான்
இதயங்களைத் தொலைத்தோம்
இன்றதைத் தேடிக் கண்டிடவே
இங்கே கூடியிருக்கின்றோம்

வெள்ளைக் காக்கி உடைகளோடு
வெள்ளந்தியாய் உள்ளே வந்தோம்
தொல்லைகள் பல இருந்தபோதும்
துள்ளி விளையாடி மகிழ்ந்திருந்தோம்

தக்காளி, தயிர் சாதங்களைப்
பகிர்ந்து உண்டோம்
உணவோடு சேர்த்து உணர்வுகளையும்
பரிமாறிக்கொண்டோம்

புத்தகங்களைத் திறந்து
படித்ததும் இல்லை
அதே சமயத்தில்
தேர்வுகளை நினைத்து
பயந்ததும் இல்லை

ஆறு பாடங்களையும்
அளவாகவே படித்தோம்
அன்பை மட்டும்தான்
ஆழமாகப் படித்தோம்

அம்பிகாபதியின் பொய்களைக் கேட்டு
அடங்காமல் சிரித்தோம்
அனாவசியமான கவலைகளை
ஆனந்தத்தீயில் எரித்தோம்

சின்குமாரின் தண்டனைகள்
சிரிப்பான கடலலைகள்
சிந்தித்துப் பார்த்தால் - எல்லாமே
சிறப்பான நினைவலைகள்

கடவுள் வாழ்த்துப் பாடலோ
கணக்குப் பதிவியலோ
எத்தனை முறை படித்தாலும்
எண்ணத்தில் நின்றதில்லை

எனதருமை தோழர்களே
உமது பெயர்களும் முகங்களுமே- என்
அடி மனதின் ஆழத்தில்
குடி கொண்டு வாழ்கிறது

வெவ்வேறு கூடுகளில்
வசித்தாலும், வாழ்ந்தாலும்
ஒரு வானத்தில் சிறகடிக்க - இந்த
வேடந்தாங்கலில் வந்தமர்ந்த
பள்ளிக்கூட பறவைகளுக்கு - என்
நெஞ்சார்ந்த நன்றிகள்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (21-Mar-21, 9:30 pm)
பார்வை : 289

சிறந்த கவிதைகள்

மேலே