கூட்டாஞ்சோறு

ராவேட்டை யாடும்
மியாவ்குட்டியும் வெட்கும்
எங்கள் பதுங்கலை கண்டால் .....

கொத்தித்தின்று இரைப்பையில்  சேர்க்கும் கோழிகளும் தோற்கும்
எங்கள் பதுக்கலை கண்டால் .....

விடுமுறை தினமென்றாலும்
வீதிகள் களையிழக்கும் .....

கட்டம்போட்ட சாயம்போன
மேல்சட்டைப்பையில் அரிசி ...
அதற்கடியில் கையிலகப்பட்ட
ஏதோவொரு பருப்புவகை .....

கிழிஞ்சலுடன் ஒட்டுபோட்ட  கால்சட்டைப்பையில்
கொத்துப்புளி ஒருபுறம் .....
அள்ளித்திணித்ததில் நசுங்கி
காலில் சாறுவழிந்து
காட்டிக்கொடுக்கும்
இருதக்காளி ஒருபுறம் .....

ஒன்றும்தெரியாதது போல்
கையில் கொத்தமல்லிதளை கொஞ்சம் ...
இதனால் பயமில்லை ..
கேட்டால் சமாளித்துக் கொள்ளலாம் ....

இதற்கே இப்படியென்றால்
தீப்பெட்டி திருடுபவன் நிலை ....
சோத்துச்சட்டி
பொறுப்பேற்றவன் நிலை ....
அதைப்பற்றி நமக்கென்ன ....

வீடுதாண்டும்வரை
விறுவிறுப்பான நடை ....
வீதிதாண்டியதும்
வீராப்பு நடை ....

தெருமுக்கில்
ஒன்றிணையும் இடமாய்
ஒரு மின்கம்பம் ....
திட்டப்படி அனைவரும்
திரட்டிவந்த பொருளுடன்
கருவேலங்காடு நோக்கி ஓட்டம் .....

கல்லடுக்கி தீமூட்டி
நட்சத்திரவிடுதி சமையல்காரரும்
வியக்கும் தோரணையில்
ஆரம்பமாகும் அந்தவிழா .....

அவனவன் ஆயிரம் வழிமுறைசொல்ல
அனைத்தும் அரைகுறைதான் .....
கரண்டிகொண்டு வரமறந்தவன்
கடுப்பாகி நான்செய்கிறேன் என்க

ஆரம்பமான கொஞ்சநேரத்தில்
ஓரங்கட்டப்படுவான் கரண்டியில்லாமை
கண்டுபிடிக்கப்பட்டு .....

பிறகு என்ன செய்ய ??
கெட்டியான மரப்பட்டையே
உருமாறும் கரண்டியென .....

அவனுக்கு சாப்பாட்டு அளவு
கொஞ்சம் குறைவு
அதுவே தண்டனை  ......

இன்னும் சிலநாட்களில்
தாம்கொண்டு வந்த பொருளதை
தாமே உணவில் சேர்க்கும்
சமரச ஓப்பந்தமும் உண்டு .....

ஆக்கப்பொறுத்து ஆக்கிவிட்டு
அரசயிலை விருந்து முடித்துவிட்டு
ஆனந்தமாய் வீடு திரும்பினால்

ஆரம்பமாகும் வீடுதனில்
அடிபூசை ....

எவ்வளவு கவனமாயிருந்தும்
எவரோவொருவர் பார்த்து
என் அப்பனிடம் வத்திவைக்க

கூட்டாளிகள் அனைவரும்
கூண்டோடு மாட்டுவோம் ....

தீப்பெட்டி திருடனுக்கு
கூடுதல் கவனிப்பு இருந்திருக்கும் .....
மறுநாள் அவன்
பெருமிதப்பேச்சில்
கண்டுபிடிப்போம் .....

அடுத்த திட்டமிடல் தொடங்கும்வரை
அடுக்கடுக்காய் பேசுவோம்
அந்தருசி பற்றி .....

சமைத்த உணவு
என்னவோ சுமார்தான் .....

ஆனாலதன்
நினைவலைகளோ இன்றுவரை
அதீத சுவையே ......

இளவட்டமான பின்
வாழைக்காரர் அறியாமல்
நண்டுபிடித்து வறுத்து உண்டு,

தோப்புக்காரர் அறியாமல்
இளநீர் பறித்து குடித்த
நிகழ்வுகள் அதனினும் சுவையே .....

எழுதியவர் : என்.கே.ராஜ் (10-Apr-21, 2:06 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 130

மேலே