யால விலங்கியல் சரணாலயம் களுத்துறை என் ஜெயரட்னம்

களுத்துறை என் ஜெயரட்னம்.

பல இலட்ச கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகளின் ஏகோபித்த சொர்க்கபுரியாக கருதப்படும் (யால தேசிய பூங்கா) யால தேசிய வன விலங்கு சரணாலயம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தையும் ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்தையும் இணைத்த 980 சதுர கிலோமீட்டர் (380 சதுர மைல்) பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து இருந்து 30 மீட்டர் (90அடி) உயரத்தில் புனித கதிர்காமம் நகரை அண்மித்த திஸ்ஸமாரகமயில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேசிய வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் இலங்கையில் இரண்டாவது மிகப் பெரிய தேசிய வனமாக இது காணப்படுகின்றது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மிருகங்களை வேட்டையாடுதலுக்காக பயன்படுத்தி வந்த இவ் வனப் பகுதி 1900/03/23 ஆம் திகதி வன விலங்கு சரணாலயங்களாகவும் 1938/02/25 ஆம் திகதி தேசிய வனமாகவும் பிரகடனம் படுத்தப்பட்டது. வறண்ட (குறை வறள்) வலயத்தில் காணப்படும் இப் பிரதேசத்துக்கு வட கீழ் பருவப் பெயர்ச்சி மழையின் மூலமும் (500 மில்லிமீட்டர் முதல் 700 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி) மானிக்க கங்கை மற்றும் கும்புக்கன் கங்கை, நீர் ஓடைகள், குளங்கள், மற்றும் நீர் ஊற்றுகள் என்பவற்றின் மூலம் நன்னீர் வளத்தை பெற்று வருகிறது. கடலை மிகவும் அண்மித்து காணப்படுவதால் உவர் நீர் வளமும் உண்டு.

இலங்கை அரசு வெளிநாட்டு உல்லாச பயணத் துறையின் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை வருமானமாக ஈட்டி வருவதுடன் இத் துறையை மென்மேலும் ஊக்குவிக்கும் முகமாக இப் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்த உல்லாச பயணத் துறையின் மூலம் பல்லாயிரக் கணக்கான பிரதேச வாசிகள் நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.இதன் அடிப்படையில் உல்லாச பயணிகளின் வசதிக்காக காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான காலப் பகுதியில் இப் பூங்கா திறந்து வைப்பது வழக்கம் ஆகும். வறட்சி நிலவும் அதாவது செப்டம்பர் முதலாம் திகதி முதல் அக்டோபர் மாதம் 15 திகதி வரையிலான காலப்பகுதியில் உல்லாச பயணிகளினதும் உயிரினங்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூங்காவை பார்வையிட உல்லாச பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் வாழ்ந்து வந்த தலைமை நீதிபதி சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் 1806 ஆம் ஆண்டில் திருக்கோணமலையில் இருந்து அம்பாந்தோட்டை பகுதிக்கு மேற்கொண்ட பயணக் குறிப்பில் யால வனப் பகுதியின் பௌதீக வளங்கள் பற்றி மிகவும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இங்கு வறண்ட வலயத்திற்கே உரித்தான கற்றாழை, காரை, ஆவரை, கள்ளி, குகுல்கடு போன்ற தாவரங்களும், முட் புதர் (பற்றை) காடுகளும், மேச்சல் புல் நிலங்களும், தேக்கு, வேம்பு, முதிரை, நொச்சி, பாலை, வீரை மற்றும் கருங்காலி போன்ற விலைமதிப்பற்ற மர வகைகளையும் காணலாம். மேலும் இவ் வனப் பகுதியில் நாற்பத்து நான்குக்கும்(44) மேற்பட்ட முலையூட்டி விலங்கினங்கள் காணப்படுகின்றன அவற்றில் யானைகள், புலிகள்,கொடு புலிகள், காட்டுப் பூனைகள், மர நாய்கள் போன்ற சில அரிய வகை விலங்கினங்கள் அழிந்து வருவதுடன் முதலை, ஆமை போன்ற நாற்பத்து ஏழு(47) வகையான ஊர்வன வகையிலா உயிர் இனங்களும் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் புடையன், பறக்கும் பாம்பு போன்ற சில வகையான உயிரினங்கள் இலங்கைக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பானவை ஆகும். அதேபோல் நீர் கோழி, நீர் காகம், நாரை, கொக்கு, அன்னம் பெருஞ் சொண்டு பறவைகள் உள்ளிட்ட 215க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் உயிர் வாழும் பறவை இனங்களையும் நாம் இங்கு காணலாம். மேலும் 21 வகையான மீனினங்களும் இங்கு காணப்படுவதாகவும் அவற்றில் சில வகையான மீனினங்கள் இலங்கைக்கு மட்டுமே உரித்துடைய தனிச் சிறப்பான இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இயற்கை அன்னையின் மூலம் எமது தாய் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற அருங் கொடையான இவ் வளங்களை பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். ❤

எழுதியவர் : களுத்துறை. என் ஜெயரட்னம் (24-Apr-21, 12:32 pm)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
பார்வை : 97

மேலே