பேராதெனிய பூங்கா வரலாறு-களுத்துறை என் ஜெயரட்னம்

களுத்துறை என் ஜெயரட்னம்.

இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய தேசிய பூங்காவான பேராதனை தாவரவியல் பூங்கா (Royal Botanical Garden) கண்டி நகரில் இருந்து மேற்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில் மகாவலி கங்கைக் கரையை அண்மித்த பேராதனை நகருக்கும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கும் வெகு அண்மையில் கடல் மட்டத்திலிருந்து 460 மீட்டர் உயரத்தில் 147 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது. 1750ஆம் ஆண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இத் தாவரவியல் பூங்கா இலங்கையின் காணப்படும் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
14ஆம் நூற்றாண்டின் இறுதிக் கலப் பகுதியில் அதாவது 1371இல் கண்டியை ஆண்டு வந்த மூன்றாம் விக்கிரமபாகு மன்னரின் அரச சபை மற்றும் நீதிமன்றம் இங்கு அமைந்து இருந்ததாகவும் விமலதர்ம மன்னர் விகாரை ஒன்றை நிறுவினார் எனவும் பிற்காலத்தில் அது பிரித்தானியர்களால் உடைத்து அழிக்கப் பட்டதாகவுப்ம் 1747 முதல் 1780 வரையிலான காலப் பகுதியில் அசன் ஸ்ரீ இராஜாதி இராஜசிங்கனின் தற்காலிக இருப்பிடமாகவும் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்னர் கண்டியின் இறுதி அரசனான விக்கிரம ராஜசிங்கன் சில காலம் போர், சிங்கள மொழி மற்றும் அரச நிர்வாக பயிற்சிகளைப் பெற்று வந்ததாகவும் வரலாற்று கதைகள் கூறுகின்றன. அதன் பின்னர் 1796இல் ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய பிரித்தானியர் 1810இல் கொழும்பு கொம்பனி தெருவிலும் 1813இல் களுத்துறை பகுதியிலும் தாவரத் தோட்டஙகளை அமைத்து பொருளாதார நோக்கில் கோப்பி, இறப்பர, கருவா மற்றும் வாசனைத் திரவிய பயிர்களுக்கு நாற்று மேடைகள் உருவாக்கி பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து 1814ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த தாவரவியல் நிபுணரான எலக்ஸ்சாண்டர் மூன்(Alexander Moon) என்பவர் முயற்சியால் 1815இல் பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர் 1821இல் இப் பேராதனை பூங்கா உருவாக்கப்பட்டு அங்கும் பெருந் தோட்ட பயிர்ச்செய்கை பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிகாரிகளான ஜோர்ஜ் கார்டினர்(George Gardner.1844) ஜோர்ஜ் ஹென்றி கெண்ட்ரிக் தவைட்ஸ்(George Henry Kendrick Thwaites.1849) ஹென்றி ட்ரிமென்(Henry Trimen.1879 - 1895) என்பவர்களின் கண்காணிப்பிலேயே மேலும் விஸ்தரிக்கபட்டு பல்வேறு வகையான தாவரங்கள் உள்வாங்கப்பட்டு ஓய்வு நேர பொழுது போக்கு பிரதேசமாக மேம்படுத்தப்பட்டது.

மேற்படி பூங்கா 1912இல் முதல் முதலாக விவசாய திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தேசிய பூங்கா பராமரிப்பு பிரிவினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது இங்கு தற்போது ஏறத்தாழ 4000 வகையான உள்ளூர் மற்றும் வெளியூர் தாவரங்கள் காணப்படுகின்றன. ஓக்கிட், எந்தூரியம் வளர்ப்பில் புகழ்பெற்ற இப் பூங்காவில் காணப்படும் அரிய வகை மூலிகை மரங்களும் வாசனைத் திரவிய தாவரத் தோட்டமும் கற்றாழை வகைகளும் சிறப்பம்சங்கள் ஆகும். மேலும் மகாவலி கங்கையை அண்டி வளரும் விசேட மூங்கில் மரங்கள், இலங்கை தேசத்தை பிரதிபலிக்கும் சிறிய குளம் மற்றும் மகாவலி கங்கையின் குறுக்கே அமைந்துள்ள தொங்கு பாலம் இப் பூங்காவுக்கு மென்மேலும் மெருகூட்டுகின்றன எனலாம். இலங்கையில் இதனைத் தவிர நூவரெலியா, ஹக்கல(1861) தாவரவியல் பூங்கா, கம்பஹா, ஹேனரத்கொடை(1876) தாவரவியல் பூங்கா, அம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில(2013) உலர் வலய தாவரவியல் பூங்கா, அவிசாவளை, சீத்தாவக்க(2014) ஈரவலய தாவரவியல் பூங்கா என்பவற்றுடன் மீகல்லாவ பசுமை பயிற்சி பூங்கா மற்றும் கனேவத்தை மூலிகை பூங்காவும் காணப்படுகின்றன.

இலங்கையின் மிக முக்கிய தேசிய வருமானமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது எனலாம் இதன் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 2397347 உள்நாட்டு சுற்றுலா உல்லாச பயணிகளும் 440207 வெளிநாட்டு சுற்றுலா உல்லாச பயணிகளும் மொத்தம் 2837554 பேர் மேற்படி ஐந்து தாவரவியல் பூந் தோட்டங்களை பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் நுழைவுச்சீட்டு கட்டணமாக 753 மில்லியன் ரூபாவும், தாவர விற்பனை மற்றும் ஏனைய வருமானமாக 96 மில்லியன் ரூபாவையும் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை விவசாய திணைக்களம் வருமானமாக பெற்றுள்ளது. அதேவேளை பேராதனை தாவரவியல் பூங்காவை மட்டும் இதே வருடத்தில் 1112496 உள்நாட்டு உல்லாச பயணிகளும் 412660 வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் மொத்தம் 1525156 பேர் பார்வையிட்டு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ❤

எழுதியவர் : களுத்துறை. என் ஜெயரட்னம் (24-Apr-21, 12:36 pm)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
பார்வை : 194

மேலே