ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம் பேருலகம் மகிழ்ந்தேத்தும் - வீரம், தருமதீபிகை 805

நேரிசை வெண்பா

ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம்
ஏண்மை யுடனொருவன் எய்திநின்றால் – மாண்மைமிகப்
பெற்றிந்தப் பேருலகம் பேணி மகிழ்ந்தேத்த
உற்றுத் திகழ்வன் உயர்ந்து! 805

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயர்ந்த.ஆண்மை வழியே சிறந்த வீரம் பிறந்து வந்துள்ளது: அந்த அதிசய தீரத்தை யுடையவன் உலகம் முழுவதும் உவந்து வியந்து புகழ்ந்து போற்ற உயர்ந்து திகழ்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறந்த மக்கள் எல்லாரும் உலகில் சிறந்த புகழுடையராய் உயர்ந்து விளங்குவதில்லை; அரிய நீர்மைகளோடு பெரிய செயல்களைச் செய்தவரே பெரும் புகழாளராய் விளங்கி வருகின்றார்; உயர்ந்த நிலைகளைக் கண்டபோது மாந்தர் உள்ளம் உவந்து புகழ்ந்து பேசுகின்றார்; அவ்வுரை வழிமுறையே புகழ் ஒளியாய் நிலவுகின்றது; வீரம், கொடை, நீதிகளால் விளைந்துவரும் புகழ் யாண்டும் வியனான நிலையில் துலங்கி வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தமிழ் நாட்டில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுடைய தந்தை போரில் மாண்டு போனான்; மூன்று ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் நாட்டில் போர் மூண்டது; தன் அரசனுக்கு உதவியாகத் தனது கணவன் போருக்குப் போனான், அங்கே அருந்திறலோடு அடலாண்மை புரிந்தான்; எதிரிகள் பலரை வென்றான்; முடிவில் இறந்து விழுந்தான். பெற்ற தந்தையும் கொண்ட கணவனும் -உற்ற நாட்டின் உரிமைக்காக உயிர் துறந்தனர் என்று பெருமிதமாய் அவள் உறுதி பூண்டிருந்தாள்; மறுபடியும் போர் நேர்ந்தது; அக்கிழவிக்கு ஒரே ஒரு மகன்தான் இருந்தான்; அவனுக்கு இப்பொழுது வயது இருபத்தொன்று நடந்து கொண்டிருந்தது. போர்ப்பறை கேட்ட்தும் தன் அருமை மகனை உரிமையோடு போர்க்கோலம் செய்து போர்க்களத்துக்கு அனுப்பினாள். அவளுடைய மன நிலையையும் வீரப்பான்மையையும் வியந்து நாடும் நகரமும் புகழ்ந்து போற்றின. அயலே வரும் பாடலில் அவளது சரித நிலை மருவியுளது. கருதிக் காணுக.

நேரிசை ஆசிரியப்பா

கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
5 நெருத லுற்றசெரு விற்கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
10ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே! 279 புறநானூறு

இந்த வீரத்தாயின் மனநிலையை உணர்ந்து நாம் வியந்து நிற்கின்றோம். இனிய பெண்மையிடம் அரிய திண்மைகள் உள்ளன.

இத்தகைய உத்தமத் தாய்கள் உதித்திருந்தமையால் நாட்டில் சுத்த வீரர்கள் யாண்டும் தோன்றி நின்றனர். நிலத்தின் நிலையை விளைவு காட்டுதல் போல் குலத்தின் நிலையைக் குடிப்பிறந்தாரது குணமும் செயலும் மணமாய்க் காட்டுகின்றன.

சிறந்த வீரக் குடியில் பிறந்த ஒரு கிழவி யிருந்தாள். யாரிடமும் வீர வாழ்க்கையைக் குறித்து அவள் விரும்பிப் பேசுவது வழக்கம். ஒரு ஆடவன் பிறப்பு சிறப்படைய வேண்டுமானால் தன் நாட்டின் நன்மைக்காக அவன் இறப்படைய வேண்டுமென இன்னவாறு கூறி வருவாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான், அரசனுக்கு உதவியாகப் போருக்குப் போனான். வீர பராக்கிரமத்தோடு போராடினான்; மாற்றார் படை ஏற்றம் உற்றிருந்தமையால் ஆற்றல் புரிந்தும் ஈற்றில் இறந்து போனான். மகன் இறந்த செய்தியைச் சரியாகத் தெரியாமல் சிலர் மாறுபாடாக வந்து அத்தாயிடம் சொன்னார்: 'அம்மா! உன் மகன் போராட முடியாமல் புறங்காட்டி ஓடி உயிர் தப்பிப் பிழைத்தான்’ என்றுரைத்தார். அந்தச் சொல்லைக் கேட்டதும் அவள் உள்ளம் கொதித்தாள். என் மகன் பேடி போல் ஓடியிருக்க மாட்டான், நீங்கள் சொல்லுகிறபடி அவன் செய்திருந்தானானால் 'அவன் பால் உண்டு வளர்தற்கு ஏதுவாயிருந்த என் முலைகளை அறுத்து எறிவேன்’ என்று கூரிய ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடினாள்; நாடித் தேடினாள்; பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். துணிபட்டுக் கிடந்த தனது அருமை மகனது உடலைக் கண்டாள்; பிடித்திருந்த வாளை அயலே கடுத்து வீசினாள்; அந்த உடம்பை எடுத்து மார்பில் அணைத்து மகிழ்ந்தாள்; நீ பிறந்த குடியை மேன்மைப்படுத்திச் சிறந்த வீர சுவர்க்கத்தை அடைந்த ஒ என் அருமை மகனே! உன்னைப் பெற்ற பேற்றை இன்று நான் முற்றவும் பெற்றேன்' என்று உள்ளம் களித்து உரைத்தாள். இந்த வீரக் கிழவியின் தீரச் செயலை வியந்து நாடும் அரசும் நயந்து புகழ்ந்தன. புலவர் பாடும் புகழையும் அடைந்தாள். அயலே வருகிற கவியில் இவளது சரிதம் சுவையாக வந்துளது.

நேரிசை ஆசிரியப்பா

நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
5 முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே'- 278 புறநானூறு, காக்கைப் பாடினியார்

போர்க்களத்தில் இறந்த கிடந்த மகனைக் கண்டதும் அவனைப் பெற்ற பொழுது உண்டான மகிழ்ச்சியினும் அதிகமான உவகையைக் கொண்டாள் என்றதனால் இந்த வீரத்தாயின் உள்ளத் திண்மையையும் உறுதி நிலையையும் நினைந்து வியந்து நெஞ்சம் களிக்கின்றோம். தீரமான பெண்மையிலிருந்து வீரமான ஆண்மை மேன்மையாய் விளைந்து வந்துள்ளது.

பண்டைக் காலத்தில் அரச ஆட்சியோடு சிறந்து இந்நாடு பீடும் பெருமையும் பெற்றிருந்த மாட்சிகளை இவை காட்சியாய்க் காட்டி நிற்கின்றன. குடிசனங்கள் படை வீரர்களாய் நின்று வேந்தனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்; அவனும் அதிசய வீரனாய் நின்று யாவரையும் உரிமையோடு ஆதரித்து வந்துள்ளான். வீரர் குடி நாட்டுக்கு வெற்றி முடியைச் சூட்டியுள்ளது. அந்த வுண்மை இந்த வீரக் கிழவிகளின் விழுமிய சரித்திரங்களால் ஈண்டு நன்கு விளங்கி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-21, 6:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே