ஈதலுறு கையே இறைகோல் இனிதேந்தி ஓதநீர் சூழுலகை ஓம்பும் - கொடை, தருமதீபிகை 815

நேரிசை வெண்பா

ஈதலுறு கையே இறைகோல் இனிதேந்தி
ஓதநீர் சூழுலகை ஓம்புமால் - ஈதலிலா
வன்கை மிடிவாய் மடிந்து தொழுதேற்றுப்
புன்கையாய்த் தேய்ந்திழிந்து போம்! 815

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஈகை புரிந்து வந்த கை செங்கோலை ஏந்தித் தலைமையாய் நின்று அலைசூழ் உலகை நலமாய்க் காத்து வரும், ஈயாத வன்கை இழிந்த வறுமையில் அழுந்தி எவரையும் தொழுது இரந்து எவ்வழியும் தாழ்வாய்க் கழிந்து ஒழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயர்ந்த இன்ப நிலையும், இழிந்த துன்ப வகையும் மன்பதையை மருவி வருகின்றன; அவ் வரவுக்கு உரிய உறவை இது உணர்த்தியுள்ளது. உயர்வு, இழிவுகள் அவரவர் வினைகளின் வழியே விளைந்து யாண்டும் தவறாமல் தொடர்ந்து வருகின்றன.

மனிதன் புண்ணியத்தால் உயர்ந்த வருகிறான்; பாவத்தால் தாழ்ந்து போகிறான். புனித நினைவுகளும் இனிய செயல்களும் தருமமாய் வருதலால் அவற்றையுடையவன் பெருமை பெறுகிறான்; அவ்வாறு இல்லாதவன் எவ்வாறேனும் சிறுமையுறுகிறான்.

ஒத்த மனிதருள் சிலர் செல்வம், கல்வி முதலிய வசதிகள் வாய்ந்து சுகமாய் வாழ்வதையும், பலர் வறுமை, மடமை முதலிய சிறுமைகள் தோய்ந்து துக்கமாய் அலமந்து உழல்வதையும் உலகத்தில் நேரே காணுகின்றோம். இதற்குக் காரணம் என்ன? முன்னே நல்ல வினைகளைச் செய்தவர் நலமாய் வாழுகின்றார்; அங்ஙனம் செய்யாதவர் எங்கும் அவலமாய்த் தாழுகின்றார்.

நல்ல கருமங்களுள் கொடை உயர்ந்த தருமமாய் விளைந்து வருகிறது. பிறவுயிர்கள் இன்புற அது இதம் புரிந்து வருதலால் அதனைச் செய்தவன் எவ்வழியும் இன்பங்களை அனுபவிக்க நேர்கி:ன்றான். செய்த பலன் செய்தார்க்கு என்பது பழமொழி. கருமத்தின் விளைவுகளை இது உரிமையோடு மருமமாய்க் காட்டியுள்ளது.

பாத்துாண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது! 227 ஈகை

தனக்குக் கிடைத்த உணவை அயலார்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் இயல்புடையானைப் பசி என்னும் தீய நோய் யாதும் அணுகாது எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பிறர் பசியை நீக்குபவன் பெரிய பாக்கியவானாய் என்றும் பசியின்றி யாண்டும் இன்ப வாழ்வு வாழ நேர்ந்தான்.

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்(கு) என்நா நிமிராது
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய்! - மணிமேகலை

ஏழைகளின் பசியைத் தீர்ப்பவனுடைய கீர்த்தி அளவிடலரியது; உண்டி கொடுப்பவன் உயிரைக் கொடுத்தவனாகிறான்; ஆகவே அவனது உதவி உயிர்க் கொடையாய் ஒளிபெற்று உயர்ந்துள்ளது என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது.

அற்றார் அழிபசி தீர்ப்பதே ஒருவன் அருமையாய்ப் பெற்ற பொருளைப் பத்திரமாய் வைத்தற்குத் தக்க இடம் என அழியாத ஒரு நிதி நிலையத்தை விழி தெரிய நாயனார் விளக்கியுள்ளார். அழியும் பொருளை அழியாமல் பாதுகாத்தற்கு வழிகாட்டியிருப்பது விழுமிய காட்சியாய் வெளியறிய நின்றது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நரம்பொலி பரந்த கோயி னன்னுதன் மகளிர் தூவும்
பெரும்பலிச் சோற்றி னீதல் பெரிதரி தாகு மேனுஞ்
சுரும்பொலி கோதை யார்தம் மனைவயிற் றூண்டோ றூட்டும்
அரும்பலி யனைத்து மீயின் அதுபொருட் குன்று கண்டீர். 328

- முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

அதிகம் கொடுப்பது அரிது; ஆயினும் சிறிது உணவு எவரும் கொடுக்கலாம்; அவ்வாறு கொடுக்கும் சிறுசோறு பெரிய மேரு மலையாய் அரிய மகிமைகளை அருளும் என இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர வேண்டும். பொருட் குன்று - பொன்மலை. ஈகை மகாமேரு போல் மகிமை புரிகிறது.

பிறவுயிர்கள் இன்புற முன்பு ஈந்து வந்தவன் பின்பு தன் உயிர் மாண்புற வேந்தனாய் விளங்கி வருகின்றான்; அதனால் கொடை பிறவிக் குணமாய் அவனிடம் மருவியிருக்கிறது. தன் பிறப்பின் சிறப்பான கடமையாக அரசன் கொடையைப் பேணி வருதலால் இறைமாட்சியுள் அது உயர்வாய் இடம் பெற்று நின்றது. கோலும் குடையும் கொடையால் உயர்கின்றன.

கொடையளி செங்கோல் குடிஒம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்(கு) ஒளி! 390 இறைமாட்சி

ஈகை, இரக்கம், நேர்மையான நீதிமுறை, குடிகளைப் பேணுதல் ஆகிய இந்நான்கு நீர்மைகளும் சீர்மையாக உடையவன் உலக வேந்தர்கள் எவரினும் உயர்ந்த மன்னனாய் ஒளி மிகுந்து விளங்குவான் என இது உணர்த்தியுள்ளது. இதில் கொடையைத் தலைமையாக வைத்திருத்தலால் அதனோடு அரசனுக்கு உள்ள தொடர்பும் உரிமையும் தெரியலாகும். குலக் கடமையாய்க் கோனுக்குக் கொடை அமைந்துள்ளமையால் கொடைக் கடன் என அவனுடைய உண்மை நிலையை அது உணர்த்த நேர்ந்தது.

படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக்
கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகிக்
குறைவில் செல்வமொடு குமார காலம்
45 நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ
ஏமஞ் சான்ற இந்நில வரைப்பின்
காமன் இவனெனக் கண்டோர் காமுற! 5. நரவண காண்டம்; 8 மதனமஞ்சிகை வதுவை, பெருங்கதை

நரவாண தத்தன் என்னும் மன்னனைக் குறித்து வந்துள்ள இது ஈண்டு உன்னியுணரவுரியது. ’கொடைக்கடம் பூண்ட கொள்கையன்’ எனக் குறித்திருத்தலால் அவனது ஈகையின் இயல்பு இனிது தெரிய வந்தது.

ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் – இராமாயணம்; தசரதன் ஈந்து வந்த நிலையை இது உணர்த்தியுள்ளது.

மங்குலின் எழுமடங்கு உதவும் வண்கையான் – நைடதம்; நள மன்னனுடைய கொடையை இது குறித்திருக்கிறது.

எமர்க்கும், பிறர்க்கும், யாவர் ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்,
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன்உயிர் அழிய, யாண்டுபல மாறி,
தண்இயல் எழிலி தலையா(து) ஆயினும், 25
வயிறு பசிகூர ஈயலன்;
வயிறுமா சிலீயர், அவனீன்ற தாயே! 20 பதிற்றுப்பத்து

சேரலாதன் என்னும் மன்னனது ஈதல் இயல்பைக் குறித்து வந்துள்ள குறிப்பு கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ’கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்’ என்றதனால் கொடையைத் தனது உரிமையான கடமையாக அவன் கருதி வந்துள்ளமை காண வந்தது. இன்னவாறு கொடுத்து வந்தமையால் குல மன்னர் நிலையான புகழோடு உலகின் தலைமையில் நிலைத்து நின்றனர்.

ஈந்தவர் உயர்ந்த வேந்தராய் ஒளி மிகுந்து விளங்குகின்றார். ஈயாதவர் யாண்டும் இழிந்தவராய்த் தாழ்ந்து உழலுகின்றார்

கலித்துறை
(தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய்)

மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளி
னூசித் துன்ன மூசிய வாடை யுடையாகப்
பேசிப் பாவாய் பிச்சையெ னக்கை யகலேந்திக்
கூசிக் கூசி நிற்பார்கொ டுத்துண் டறியாதார்! 331 முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

அழுக்கு நிறைந்த கந்தையை அரையில் உடுத்திக் கையிலே ஓட்டை ஏந்தி ’அம்மா! பிச்சை என்று தெருவில் நின்று அலமருகின்றவர் யார் கெரியுமா? முன்பிறப்பில் பிறர்க்கு அன்னம் கொடாதவரே இன்னவாறு ஈனமாய் இன்னலடைய நேர்ந்தார் என இது குறித்துள்ளது. உதவிநிலை. ஒழியவே பதவிகள் ஒழிந்தன.

ஈகின்ற கை புண்ணியம் உடையதாய்க் கண்ணியம் பெறுகின்றது; ஈயாத கை இழிவுடையதாய் பழி அடைகின்றது.

நேரிசை வெண்பா

நற்றோ ரணவீதி நண்ணுவல்லைக் காளத்தி
கற்றோர் தமக்களிக்கும் கையே,கை - மற்றோர்கை
வேங்கை அலகைமுகை வேட்கை பலகைநகை
காங்கை அழுகைவிழு கை! - சொக்கநாதர்

ஈகையால் உயர்ந்த காளத்தி வள்ளலுடைய கையை உவந்து புகழ்ந்து ஈயாத உலோபிகள் கையை இது இகழ்ந்துளது.

கட்டளைக் கலித்துறை

நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்
பூசிக்கும் நின்கைப் பொருளே பொருள்மற்றைப் புல்ல(ர்)பொருள்
வேசிக்கும், சந்து நடப்பார்க்கும், வேசிக்கு வேலைசெய்யும்
தாசிக்கும் ஆகும்கண் டாய்,சீதக் காதி தயாநிதியே!
.
ஓர்தட்டி லேபொன்னும், ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்தி லே,தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டி னும்தட்டு வாராம லே,அன்ன தான(த்)துக்கு
மார்தட் டியதுரை, மால்சீதக் காதி வரோதயனே!
.
(‘ய்’ ஆசிடையிட்ட எதுகை)

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவி(ல்)பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்,சீதக் காதி இருகர(மு)மே! – படிக்காசுத் தம்பிரான்

சீதக்காதியின் ஈகை நிலையை உலகம் உணர்ந்து தெளிய இவ்வாறு உள்ளம் உவந்து படிக்காசுத் தம்பிரான் நன்கு விளக்கியிருக்கிறார்.

இரவ லாளரே பெருந்திரு வுறுக
அரவுமிழ் மணியும் அலைகடல் அமிர்தும்
திங்கட் குழவியும் சிங்கப் பறழும்
குதிரை மருப்பும் முதிர்சுவைச் சுரபியும்
ஈகென மொழியினும் இல்லென மொழியான்
சடையனை அயன்றைத் தலைவனை நீர்போய்
உடையது கேண்மின் உறுதியுள் ளோரே. - புகழேந்தி

சடைய வள்ளலின் கொடைத் திறத்தை இது குறித்திருக்கிறது. எதைக் கேட்டாலும் இல்லை என்னாமல் ஈய வல்லவன் என்னுமிதனால் அவரது வண்மையும் திண்மையும் வாய்மையும் உணர வந்தன. ஈகையாளன் இருமையும் இனிது ஆளுகிறான்.

கொடுத்து வருகிற கொடை புண்ணியத்தைக் கொடுத்தருளுகிறது; ஆகவே அதனையுடையவன் உயர்நிலையை அடைந்து கொள்கிறான்; கொடாதவன் யாதொரு பலனும் இலனாய் இழிந்து போதலால் உயிரின் ஊதியத்தை முழுதும்.அவன் இழந்தவனாகிறான்.

உயிர்களுக்கு உதவி புரியின் உயிர்க்கு உயிரான பரமன் உவகையுறுகிறான்; ஆதலால் ஈகையாளன் ஈசனருளை அடைந்து கொள்கிறான், ஈயாதவன் அதனை இழந்து இழிகிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

இரப்பவர்க் கீய வைத்தார்
..ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
..கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப்
..படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
..ஐயனை யாற னாரே! 10 - 038 திருவையாறு, நான்காம் திருமுறை, தேவாரம்

ஈகின்றவர் தெய்வத் திருவருளையடைந்து பேரின்ப நிலைக்குச் செல்கின்றார், ஈயாதவர் இழி நிலைக்குப் போகின்றார் என அப்பர் இப்படிக் குறித்திருக்கிறார். கரப்பவர்க்கு நரகம் என்றதனால் உலோபத்தின் விளைவும் உலோபியின் துயரமும் அறிய வந்தன.

சீவ இதம் தேவ பதமாய்த் திகழ்கிறது. பிறவுயிர்களுக்கு உபகாரம் செய்து வருகிறவன் உயர் கதியாய் உய்தி பெறுகிறான். பகுத்தறிவுடைய மனிதப் பிறவிக்குப் பயன் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி எவ்வழியும் நல்லவனாய் வாழுவதேயாம்.

God divided man into men, that they might help each other - Seneca

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளவே மனிதருக்குள் மனிதனைக் கடவுள் வகுத்தருளினார் என்னும் இது இங்கே அறியவுரியது. பிறவுயிர்களிடம் இதம் புரிவது உயர் அறமாய் ஒளிமிகுந்து உறுதி நலங்கள் சுரந்து உய்தி புரிந்து வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-21, 7:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே