மானமிகு போர்வீரம் ஒன்றே புகழ்வீரம் - வீரம், தருமதீபிகை 806

நேரிசை வெண்பா

தானம் தயைகல்வி தன்னையுணர் ஞானமென
ஆனவகை வீரம் அமைவுறினும் - மானமிகு
போர்வீரம் ஒன்றே புகழ்வீரம்; அன்னதே
நேர்வீரம் ஆகும் நிலைத்து! 806

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான வீரம், தயா வீரம், கல்வி வீரம், ஞான வீரம் எனப் பலவகை வீரங்கள் உள. எனினும் மானம் மிகுந்த போர்வீரமே யாண்டும் புகழ் வீரமாய் உயர்ந்து நேரே நிலைத்து நிலவுகின்றது. இது, வியனான வீரத்தின் நயன் அறிய வந்தது

குண நீர்மைகள் வீரத்தால் மணமடைந்து வருகின்றன. வீரம் இல்லையானால் சிறந்த தன்மைகளும் சிதைந்து படுகின்றன. மரத்துக்கு ஆணிவேர் போல் மனிதனுக்கு வீரம் உறுதி பயந்துள்ளது. ஊக்கம் உறுதி திடம் திண்மை தைரியம் துணிவு என்பன வீரத்தின் கிளைகளாய் விரிந்து பரந்துள்ளன.

தான் உறுதியாய்க் கைக்கொண்ட நல்ல ஒழுக்கங்களை எவ்வழியும் செவ்வையாய்ப் பாதுகாத்து நிற்பவர் சிறந்த சீல வீரராய் உயர்ந்து திகழ்கின்றார். பிறர் மனை நோக்காமை பேராண்மை என்று வள்ளுவர் கூறியிருத்தலால் ஏக பத்தினி விரதம் அரிய பெரிய வீரம் என்பது தெரிய வந்தது. பேரின்ப சாதனங்களாய்ப் பெருமை பெற்றுள்ள தவம், யோகம், ஞானம், மோனம், வைராக்கியம் என்பன வீர நீர்மையின் சாரங்களாயுள்ளன.

தனது வண்மை நிலையில் யாண்டும் திண்மையாயிருந்து வந்தமையால் கன்னன் தானவீரன் என வானமும் வையமும் வாழ்த்த நின்றான். இவனுடைய கவச குண்டலங்களைக் கவர்ந்து கொள்ள விழைந்து மாயன் இந்திரனை ஏவினான். அவன் ஓர் முதிய வேதியனாய் மருவி வந்தான். வஞ்சமாய் வந்த அவனை இவன் நெஞ்சம் உவந்து உபசரித்து, பெரியீர்! யாது வேண்டும்?' என்றான். கருதி வேண்டியதைத் தர முடியுமா? என்.று அவன் கரவோடு கேட்டான், இவன் உறுதியாய்த் தருகிறேன் என்றான். இவனது உயிர்நிலையமாயிருந்த அந்த அணிகளையே அவன் கேட்டான்; உடனே கொடுத்தான்; அங்ஙனம் கொடுக்கும்போது ஆகாயவாணி தடுத்தது. வந்துள்ளவன் இந்திரன்; மாயன் வஞ்சமாய் ஏவியுள்ளான்; யாதும் கொடாதே' என்று வானம் ஒலித்துத் தடுத்தும் இவன் களித்துக் கொடுத்தான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற்
..றரிதுநீ யளித்தியோ வென்று,
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்துநீ
..மெய்யுயிர் விழைந்திரந் தாலுங்,
கருத்தி னோடுனக் களித்திலே னெனினெதிர்
..கறுத்தவர் கண்ணிணை சிவப்ப,
வுருத்த போரினிற் புறந்தரு நிருபர்போ
..யுறுபத முறுவனென் றுரைத்தான்! 301

வந்த வந்தணன் கவசகுண் டலங்களை
..வாங்கிநீ வழங்கெனக் கென்னத்
தந்த னன்பெறு கெனவவன் வழங்கவிண்
..டலத்திலோர் தனியச ரீரி
யிந்தி ரன்றனை விரகினான் மாயவ
..னேவினான் வழங்கனீ யெனவுஞ்
சிந்தை யின்கணோர் கலக்கமற் றளித்தனன்
..செஞ்சுடர்த் தினகரன் சிறுவன் 302 பாரதம், 17 ஆம் போர்ச்சருக்கம்

கன்னனது மனவுறுதியை இவை காட்டியுள்ளன. இவனுடைய கொடை, வீரம் அதிசய நிலையது. போர் வீரமும் நேர்மையோடு மேன்மையாய் மேவியுள்ளது. அருச்சுனன் மீது ஒரு பாணம்தான் தொடுக்க வேண்டுமென்று பெற்ற தாய் வந்து இவனிடம் வரம் வேண்டிய பொழுது இவன் உரைத்த மொழிகள் விழுமிய நிலைகளில் வீர ஒளிகளை வீசி வந்தன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

தெறுகணை யொன்று தொடுக்கவு முனைந்து
..செருச்செய்வோன் சென்னியோ டிருந்தான்,
மறுகணை தொடுப்ப தாண்மையோ வலியோ
..மானமோ மன்னவர்க் கறமோ,
வுறுகணை யொன்றே பார்த்தன்மேற் றொடுப்ப
..னொழிந்துளோ ருய்வரென் றுரைத்தான்,
தறுகண ரலர்க்குந் தறுகணா னவர்க்குந்
..தண்ணளி நிறைந்தசெங் கண்ணான் 319 பாரதம் 17 ஆம் போர்ச்சருக்கம்

கன்னனது தான வீரமும், மான வீரமும், போர் வீரமும் யாரும் வியந்து புகழ வியனான நிலையில் பொலிந்து விளங்குகின்றன.

உற்ற இயல்புகள் வீரத்தால் ஒளி மிகுந்து வருகின்றன. தன் கவியில் குற்றம் கூறியதாக இறைவன் நேரே வந்து நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டி வெருட்டிய போதும் நக்கீரர் யாதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று 'சுவாமி! நெற்றியில் மட்டும் அல்லாமல் உடம்பு முழுவதும் கண்களாய்க் காட்டினாலும் உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது; அந்தக் குற்றம் எப்படியும் குற்றமே என்று வெற்றி வீறோடு கூறினமையால் கல்வி வீரர் என அவர் நல்லிசை பெற்றுப் பல்லோரும் போற்ற நின்றார்.

சீவ கோடிகளுக்கு இரங்கி எவ்வழியும் தயை புரிந்து வந்தமையால் தயா வீரன் எனப் புத்தர் உயர் பேர் பெற்றார். சிறந்த அரச பதவியைத் துறந்து இளமையிலேயே உயர்ந்த போக சுகங்களையெல்லாம் ஒருங்கே வெறுத்து ஞானதீரனாய்ச் சென்ற இவரது சரிதம் அரிய பல வீரங்களோடு மருவி மிளிர்கின்றது.

அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து
முடிதயங்(கு) அமரர் முறைமுறை இரப்பத
துடித லோகம் ஒழியத் தோன்றிப்
10 போதி மூலம் பொருந்தி இருந்து
மாரனை வென்று வீரன் ஆகிக்
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை. 30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை, மணிமேகலை

புத்தரைக் குறித்து வந்துள்ள இது இங்கு உய்த்து உணரத்தக்கன. மாரனை வென்ற வீரன் என்றது இவரது ஞான தீரத்தை நன்கு விளக்கி வீரத்தின் பான்மையைத் துலக்கி நின்றது.

தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க்
காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாம்கொல்? - வீர சோழியம்

பேரழகுடைய பெண்களை ஏவிப் புத்தரது ஞான நிலையைக் குலைத்தற்கு மன்மதன் பலமுறை முயன்றான். முடியாமல் ஒழிந்தான்; எல்லாரிடமும் கண்ணோடிக் கருணை புரிகிற புண்ணிய மூர்த்தி காமனிடம் இரங்காமல் வென்று தொலைத்தார் என இவரது நேம நெறியின் தீரத்தை இது விநயமாய் உணர்த்தியுளது. ஞானம், தானம், கல்வி முதலிய விழுமிய நிலைகள் பலவும் வீரத்தால் ஒளி பெற்று வருவது இங்கே தெளிவுற்று நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-21, 9:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே