கொடுத்துவந்த பேராளர் பெருமை மிகப்பெற்றுப் பாராளுவார் பதிந்து - கொடை, தருமதீபிகை 814
நேரிசை வெண்பா
கொடுத்து மகிழாக் குடிகேடர் பிச்சை
எடுத்து வருந்தி இழிவார் - கொடுத்துவந்த
பேராளர் எங்கும் பெருமை மிகப்பெற்றுப்
பாராளு வார்பின் பதிந்து. 814
- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பிறர்க்கு இதமாய்க் கொடுத்து மகிழாதவர் குடிகேடராயிழிந்து பிச்சை எடுத்து வருந்தி உழல நேர்கின்றார், கொடுத்து வந்தவர் உயர்ந்த கீர்த்தியை அடைந்து மிகுந்த இன்ப நலங்கள் நிறைந்து சிறந்த அரசராய் உலகத்தை ஆளுவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இன்பத்தையும் புகழையும் மனிதன் யாண்டும் ஆவலோடு விரும்புகிறான்; ஆனால் அவற்றை அடையவுரிய வழியை அறவே மறந்து விழிகண் குருடனாய் விலகி உழல்கின்றான். மாடு, ஆடு முதலிய இழிந்த பிறவிகளில் கழிந்து போகாமல் உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்திருந்தும் தகுந்த கடமைகளைச் செய்து மேலும் மேலான நிலைகளை அடையாமல் வீணே விளிந்து போவது வெய்ய மடமையாய் விரிந்து நிற்கிறது. தன் நிலைமையையும் தலைமையையும் ஊன்றி உணராமையால் மானுடன் ஈனமாயிழிந்து ஊனமாய் ஒழிந்து போகிறான்.
கருமமும் தருமமும் உடலும் உயிருமாய் மருவியுள்ளன. முன்னது பொருள் முதலிய நலங்களை வளர்த்து வெளியே பெருமைப் படுத்துகிறது; பின்னது அருள் நலங்களாய் மருவி உள்ளே உயிரை மகிமைப் படுத்துகிறது. ஈதல் அறம் என்றதனால் அதன் உரமும் உறுதியும் உணரலாகும். புண்ணியமே எண்ணிய யாவும் உதவி மனிதனைக் கண்ணிய நிலையில் உயர்த்துகிறது. அந்தப் புண்ணியம் கொடையிலிருந்து விளைந்து வருகிறது. ஆகவே அதனையுடையவன் உயர்ந்து உய்தி பெறுகிறான்.
நேரிசை வெண்பா
என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்! நாலடியார்
ஏதாவது ஒரு பொருள் கையில் கிடைத்தால் அதனை உடனே ஏழைகளுக்குக் கொடுத்து உதவுங்கள், அந்த உதவி எம பயத்தை நீக்கி உங்களை இன்ப வுலகத்தில் கொண்டு போய் இனிது சேர்க்கும் என மனித சமுதாயத்துக்கு ஒரு ஞான போதனையை முனிவர் ஒருவர் இவ்வாறு போதித்துள்ளார். கொடையால் விளையும் நலங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன.
பிறர்க்குச் சிறிது உபகாரம் செய்யும்போது அந்த மனிதன் தனக்கே பெரிய இன்பத்தைச் செய்தவனாகிறான். இயன்ற அளவு சமுதாயத்திற்கு இதம் செய்கிறவன் உயர்ந்து வருகிறான். அயலுவந்து வாழச் செயல்புரிந்து வருவது உயர்பெருந்தகைமையாய் ஒளிவிசி எவ்வழியும் இனிது மிளிர்கிறது.
ற னக்கென்
றொன்றா னுமுள்ளான் பிறர்க்கேயுறு திக்கு ழந்தான் - கடவுள் வாழ்த்து, குண்டலகேசி
இது கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது. சீவ கோடிகளுக்கு இதம் செய்வது தேவ நீர்மையாய்ச் சிறந்து திகழ்கிறது.
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் - மணிமேகலை, 5)
தனக்கென்(று) ஒன்றானும் உள்ளான்;
பிறர்க்கே உறுதி சூழ்ந்தான். - வீர சோழியம்
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை. (அகம் 54)
அரிய பெரிய உபகார சீலர்களைக் குறித்து வந்துள்ள இவை கூர்ந்து சிந்திக்கத் தக்கன. சன சமுதாயத்துக்கு உதவி புரிவது உயர்ந்த மனிதப் பண்பாடாய் ஒளிபுரிந்து சிறக்க சீர்மையோடு வந்துள்ளமையை இங்கே உணர்ந்து கொள்ளுகிறோம்.
Man was formed for society. - Blackstone
'சமுதாயத்துக்காகவே மனிதன் உருவாகியுள்ளான்' என்னுமிது ஈண்டு அறியவுரியது. குண நீர்மைகள் மனிதனை மணம் பெறச் செய்கின்றன. கருணையும் இதமும் ஈகையில் கலந்திருத்தலால் கொடையாளி உயர்நிலைகளை அடைய நேர்ந்தான். இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் எம்மையும் அவனுக்குத் தனி உரிமையாய் நின்றன.
கொடாத உலோபி பழியும் பாவமும் அடைந்து இருமையிலும் சிறுமையாய் இழிந்து போகிறான். தான் நல்ல சுகங்களை அனுபவியாமலும், பிறர்க்கு யாதும் உதவாமலும் பொருளை மருளோடு பற்றி மடிந்து போதலால் உலோபியின் வாழ்வு பாழாய்த் தாழ்ந்து பழிபடிந்து இழி துயரோடு ஒழிகின்றது.
O cursed lust of gold! When, for thy sake,
The fool throws up his interest in both worlds,
First starved in this, then damned in that to come. - Blair Robert
ஓ’ பொல்லாத பொன்னாசையே! உனக்காகத் தனது இருமை இன்பங்களையும் மூடன் இழந்து விடுகின்றான்; முதலில் இங்கே பட்டினி கிடக்கிறான்; பின்பு மறுமையில் இழிவுறுகிறான்’ என உலோபியின் பரிதாப நிலையைக் குறித்து ப்ளேர் என்பவர் இவ்வாறு அதிநளினமாய்க் கூறியிருக்கிறார்.
கையில் பெரும் பொருள் இருந்தாலும் உலோபி வறுமையாய்ச் சிறுமையடைகிறான். பழியும் பாவமும் எவ்வழியும் அவனைத் தொடர்ந்து படர்ந்து தோய்ந்து கொள்ளுகின்றன.
இராமன் சுவேலமலை மேல் நின்று இலங்காபுரியின் அழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரும்போது சோலைகளிடையே நீல மணிகளால் செய்திருந்த செய்குன்றுகளைப் பார்த்தான். நெடுமையாய் நிமிர்ந்து நின்ற அவற்றின் நிலைகளை நோக்கிய இராமன் இலக்குவனுக்கு இலக்கோடு சுட்டிக் காட்டினான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
காவலன் பயந்த வீரக்
..கார்முகக் களிறே! சுற்ற
தேவர்தம் தச்சன் நீலக்
..காசினால் திருந்தச் செய்த(து).
ஈவது தெரியா உள்ளத்(து)
..இராக்கதர் ஈட்டி வைத்த
பாவபண் டாரம் அன்ன,
..செய்குன்றம் பலவும், பாராய்! 45 இலங்கை காண் படலம், யுத்த காண்டம், இராமாயணம்
தன் அருமைத் தம்பியிடம் இராமன் உரிமையுடன் உரையாடியிருக்கும் அழகை ஊன்றி நோக்கி உவந்து நிற்கிறோம். அழகிய நீல இரத்தினங்களால் எழிலாகச் செய்து வைத்துள்ள குன்றுகள் ஒளி வீசி நின்றாலும் அவை பாவம் படிந்தனவாதலால் விரைந்து அழிந்துபடும் என மருமமாய் விளக்கியருளினான். ஈவது தெரியா வுள்ளத்து இராக்கதர் என்றது அரக்கரது இரக்கமின்மையையும் கொடுமையையும் கூர்ந்தணுர வந்தது. ஈவு இரக்கமில்லாதவர் என இழி தீமைகளை விழிதெரிய விரித்தான். ஈகையை இழந்தபோது மனிதன் எவ்வளவு இழிந்து படுகிறான் என்பது இங்கே செவ்வையாய்த் தெளிந்து கொள்ள நேர்ந்தது. .