இலட்சியமும் யதார்த்தமும்

இலட்சியமும் யதார்த்தமும்
ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரிலும், கதாநாயகன், நாயகி இருவர் உட்பட அனைவரையும் விட அந்த லைட்பாய் கவனத்தை கவர்ந்தான். சில நேரங்களில் நாயகியின் பார்வை அந்த பையனை நோக்கி செல்வதை கதாநாயகனாக நடிப்பவர் பொறாமையாக பார்த்தார். டைரக்டரை கூப்பிட்டு ஏதோ சொன்னார் அவர் அந்த பையனை கூப்பிட்டு ஏதோ சொல்ல அவன் சரிங்கசார் என்று தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.கதாநாயகன் முகத்தில் இப்பொழுது பளிச்...
ஒரு சில கதாநாயகர்கள், இவனின் முககளையை பார்த்து டைரக்டரிடம் இந்த பையனுக்கு சான்ஸ் கொடுக்க சொல்லி சொல்லுவார்கள். அவரும் பார்க்கலாம் என்று சொல்லுவார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரைக்கும் பையனுக்கு வாய்ப்பு கிடைக்காது. கதாநாயகனும் அதை பற்றி கவலைப்படவும் மாட்டார்.
இதை பற்றி எல்லாம் அந்த லைட்மேன் பாபு ஒரு காலத்தில் கவலைப்பட்டிருக்கிறான். இந்த சினிமா உலகத்துக்கு வந்தபின் அவனுக்கு நெளிவு சுழிவு தெரிந்துவிட்டது. எந்த பழக்கமும் படப்பிடிப்பு முடியும் வரைதான், அதற்கப்புறம் அவரவர் வேலை அவரவர்க்கு. மேற்கொண்டு வாய்ப்பு வேண்டும் என்று போராடினால் கிடைக்கிற வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும். ஏற்கனவே ஆள் கொஞ்சம் கலராகவும் லட்சணமாகவும் இருப்பதால் இந்த லைட்மேன் வேலை கொடுப்பதற்கே யோசிக்கிறார்கள். இந்த வேலைக்கு நுழைவதற்கே அவன் பதினெட்டு வயதிலிருந்து போராடி இருபதுக்கு மேல் தான் நுழைந்திருக்கிறான். இதற்காக ஒவ்வொரு ஆட்களிடமும் கெஞ்சி கூத்தாடி ஒவ்வொரு படப்பிடிப்பிலும் யாரையாவது பிடித்து தொத்தி அப்பப்பா அவனை நம்பி இந்த லைட்மேன் வேலை கிடைத்ததே பெரிசு.
மதியம் அசிஸ்டெண்ட் டைரக்டர் கதிர் இவனிடம் பாபு இன்னைக்கு கதாநாயகியோட பாரவை எல்லாம் உன்மேலதான் போ இவனை உசுப்பினான். பாஸ் போட்டு வாங்காதீங்க பாஸ் சிரித்துக்கொண்டே சொன்னான் பாபு.
ஏதோ என்வண்டி ஓடி கிட்டிருக்கறதையும் கெடுத்திடாதீங்க. அந்த ஹீரோ நம்மளை ரொம்ப நம்பறாரு. அடுத்த ஷூட்டிங்கிலயும் உன்னை கண்டிப்பா கூப்பிட்டுக்குவேன்னு சொல்லிகிட்டு இருக்கறாரு. இப்ப இதைய அவர் காதுபட பேசினீங்க நான் காலி. சிரித்துக் கொண்டே சொன்னவனை கதிர் பார்த்துவிட்டு பாபு எனக்கு எப்பவாச்சும் படம் எடுக்க சான்ஸ் வந்தா கண்டிப்பா உன்னையத்தான் ஹீரோவா புக் பண்ணுவேன்.
பாபு சிரித்துக் கொண்டே சொன்னான், உனக்கு அந்த வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். ஆனா வந்த வாய்ப்பையும் என்னைய புக் பண்ணறேன்னு கெடுத்துக்காதே. இப்படி உன்னைய தாழ்வா பேசிகிட்டு இருந்தா எப்பத்தான் முன்னுக்கு வருவியோ அலுத்துகொண்டான் கதிர்.
காலங்கள் ஓடியது இரண்டு மூன்று வருடங்களில் எப்படியோ கதிர் ஒரு தயாரிப்பாளரை பிடித்து அவரிடம் தான் வைத்திருந்த கதையை சொன்னான். அவரும் பெரிய மனது பண்ணி படம் பண்ண சம்மதித்து விட்டார். கதிருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, நேராக பாபுவைத்தான் பார்க்க வந்தான். பாபு எப்படியோ ஒரு வாய்ப்பை பிடிச்சிட்டேன். என்னுடைய லட்சியமே இந்த கதையை பிரமாதமா கொடுக்கணும்னுதான். அது மட்டுமல்ல அவார்டு வரைக்கும் இதைய கொண்டு போகணும்னு ஆசைப்படறேன்.
ரொம்ப சந்தோசம் பாஸ், என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்க டீமுல என்னைய லைட்பாயா எடுத்துக்குவீங்கல்ல?.
முறைத்து பார்த்த கதிர் என்ன விளையடறியா? அன்னைக்கு என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா.
என்ன சொன்னீங்க யோசிப்பதுபோல நின்றான் பாபு.
நான் படம் எடுத்தா உன்னையத்தான் கதாநாயகனா போட்டு எடுப்பேன்னு சொன்னேனில்லை.
பக பக வென சிரித்த பாபு “பாஸ் வேற வேலை இருந்தா பாருங்க பாஸ், வீணா கஷ்டப்பட்டு கிடைச்ச வாய்ப்பை கோட்டை விட்டுடாதீங்க.
கதிர் கண்டிப்புடன் சொன்னான் இங்க பாருபாபு என்னோட இந்தபடத்துல நீதான் கதாநாயகன்,
இதுல எந்த விதமான மாற்றமும் கிடையாது. நாளைக்கு தயாராய் இரு, உன்னைய தயாரிப்பா:ளர் கிட்ட கூட்டிட்டு போகப் போறேன்.
நான் சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க விருப்பம், பாப்போம்
நாளைக்கு தயாராய் இரு மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டு சென்றுவிட்டான் கதிர்.
மறுநாள் மதியம் வரை காத்திருந்தான் பாபு, கதிர் வரவே இல்லை, அவனுடைய செல்லுக்கு கூப்பிட்டான். ஸ்விட்ச் ஆப் என்று பதில் வந்தது. தெலுங்கு படஷூட்டிங்க் இருக்கிறது பாபு “லைட்பாய்” வேலைக்கு கிளம்பினான். அரைநாள் விடுமுறைக்கு டைரக்டர் திட்டுவாரே என்று கவலைப்பட்டான்.
இரண்டு நாட்களில் தடல் புடலாக பூஜை போடப்பட்டு கதிர் டைரக்சனில் படம் தயாராவதாகவும், கதாநாயகனாக நடிப்பவர் நான்கு படம் சில்வர்ஜூப்ளி கொடுத்தவர். அவர்தான் இந்த படத்தில் நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்தது. இதில் அந்த கதாநாயகன், கதிரை பற்றி ஆஹாஓஹொ என புகழ்ந்திருந்தார். அவரின் கதை பிடித்து விட்டதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே தான் இவர் படத்தில் நடித்து கொடுக்க சம்மதிததாகவும் பேட்டியில் சொல்லியிருந்தார்.
கதிர் டைரக்சன் செய்யும் படத்தில் லைட்பாய் வேலைகூட கிடைக்கவில்லை பாபுவுக்கு.
படம் சுமாராகத்தான் ஓடியிருந்தது. எதிர்பாராமல் பாபுவை சந்தித்து விட்ட கதிர் என்னைய மன்னிச்சிடு பாபு, தயாரிப்பாளர் அந்த கதாநாயகன் நடிச்சாத்தான் நல்லா இருக்கும் அப்படீன்னு சொல்லிட்டாரு.
பாபு சிரித்துக் கொண்டே “பாஸ்” இலட்சியம் மனசுக்குள்ள மட்டும்தான் இருக்கணும், யாதார்த்தம் மட்டுமே வெளியே காட்டணும், அப்புறம் யதார்த்தம் ஜெயிச்சிடுச்சுன்னா அதையவே என்னுடைய இலட்சியமா இருந்துச்சு அப்படீன்னு மக்கள்கிட்ட சொல்லிடணும் .அவன் வார்த்தைகள் சினிமா உலகின் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-May-21, 11:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 90

மேலே