பாவ புண்ணியம்
மணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி , டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் , லட்ச லட்சமாய் சம்பாதித்தான். அவன் என்ன , அரசியல் வாதியா, கோடி கோடியாய் சம்பாதிக்க ?
இறுதியில் , எல்லரையும் போல் , அவனுக்கும் மரணம் வந்தது. இறப்பு யாரை விட்டு வைத்தது? இவனை விட்டு வைக்க !! சாவுக்கு முன் இறைவனை கெஞ்சினான்.. “ இறைவா ! எவ்வளவோ பாவம் பண்ணிட்டேன். அதுக்கு பிராயசித்தமா, எனக்கு அடுத்த பிறவியில் உன்னருகிலே இருக்க அருள் பண்ணு ! ஆண்டவா ! நீயே என் கதி ! ” அவனுக்கு மரணம் சம்பவித்தது.
***
பிரபு ஒரு அரசாங்க அதிகாரி. அற நில துறை. கொஞ்சம் நியாயமானவன். கிம்பளம் கிடைத்தும், அது எதுவும் எதிர்பார்க்காமல், தன் கடமையை ஆற்றியவன். யாருக்கும் எதுவும் தானம் தர்மம் செய்ய மாட்டான். மற்றவர் வம்புக்கும் போகமாட்டான்.
அவனுக்கும் ஒரு நாள் மரணம் வந்தது. பிறந்தவர் ஒரு நாள் இறப்பது நிச்சயம் தானே. ! கண்ணன் கீதையில் கூறுவது இதுதான் : பிறந்த ஒருவன் இறப்பது உறுதி; அதே போல இறந்த ஒருவன் பிறப்பதும் உறுதி . (2.27 )
சாவுக்கு முன் , பிரபு இறைவனை கெஞ்சினான்.. “ இறைவா ! அடுத்த ஜென்மத்திலேயாவது உன்னருகிலே இருக்க அருள் பண்ணு ! ஆண்டவா ! நீயே என் கதி ! ” அவனுக்கும் மரணம் சம்பவித்தது.
***
கோவிந்தன் ஒரு அரசாங்க அதிகாரி . தாசில்தார். மிகவும் நேர்மையானவன். அப்படி இருப்பது கடினம் தான் . இருந்தும் அப்படி இருந்தான். தானம் தர்மம், மற்றவருக்கு முடிந்த அளவு உதவி செய்வது, ஆற்றும் பணியில் உண்மையாக இருப்பது அவனது கோட்பாடு.
அவனுக்கும் ஒரு நாள் மரணம் . எவரையும் இடுகாடு ஒருநாள் அழைப்பது சர்வ நிச்சயம் தானே ! சாவுக்கு முன் இறைவனை கெஞ்சினான்.. “ இறைவா ! அடுத்த ஜென்மத்திலேயாவது உன்னருகிலே இருக்க அருள் பண்ணு ! ஆண்டவா ! நீயே என் கதி ! ” அவனுக்கும் மரணம் சம்பவித்தது.
*********
யம பட்டினம்
மூவரின் ஆத்மாவும் யம லோகத்தில். சித்ர குப்தன் மூவரின் கணக்கையும் படித்தான். யமன் அது கேட்டு தீர்ப்பு கூறினான்.
யமன் மணியின் பக்கம் நோக்கினான் மணியின் ஆத்மாவை பார்த்து கூறினான்.
“நீ நிறைய பாபம் செய்திருக்கிறாய். அதர்ம நெறியில் போயிருக்கிறாய். அரசையும், மக்களையும் ஏமாற்றியிருக்கிராய். அதனால் பூதங்கள் சித்திரவதை செய்யும் அசிபத்திரம் நரகத்திலும்,.அக்னி குண்டம் நரகத்திலும் நூறு ஆண்டுகள் வாடுவாய் . பின், உன் கடைசி கால இறை பிரார்த்தனையால், மீண்டும் பூலோகத்திற்கே சென்று பிறப்பாய். அதுவும் ஒரு நரகம் தான் ! . அங்கு பூரி ஜகந்நாதன் கோயில் அர்ச்சகனாக , இறைவன் பிரதி பிம்பத்தின் முன் ஆராதனை செய்வாய். செல் . இப்போது இவனை அசிபத்திரம் நரகத்தில் எறியுங்கள்”
பின்னர், பிரபுவின் ஆன்மாவை பார்த்து தீர்ப்பு சொன்னான். “ நீ பாவங்கள் நிறைய செய்யா விட்டாலும், புண்ணிய காரியங்கள் எதுவும் செய்ய வில்லை. எனவே நீ சொர்க்க லோகம் செல்ல தகுதியற்றவன். இருப்பினும், உன் கடைசி கால இறை பிரார்த்தனையால், மீண்டும் பூலோகத்திற்கே சென்று பிறப்பாய். அங்கு காஞ்சிபுரம் பெரிய கோயிலில் , வாயில் காப்பானாக இருப்பாய். தினமும் இறைவனை காணும் பாக்கியம் கிடைக்கும் . உன் விருப்பப் படி ஆராதனை செய்வாய்.”
கடைசியாக, யம தர்மன் கோவிந்தன் பக்கம் திரும்பினான். “ நீ நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறாய். அதனால், நீ சொர்க்க லோகம் சென்று அங்கு சுகத்தை அனுபவிப்பாய். பின்னர், நூறு ஆண்டுள் கழித்து, மீண்டும், பூலோகத்தில் பிறப்பாய். உன் கடைசி கால இறை பிரார்த்தனையால் காட்டு மன்னார் கோயில் அருகே உள்ள ஒரு கோயில் அர்ச்சகனாக , இறைவன் பிரதி பிம்பத்தின் முன் ஆராதனை செய்வாய். செல் யாரங்கே, ! இவனை சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லுங்கள் “
. ****
மீண்டும் பூலோகம்
யம தர்மனின் ஆணைப்படி, மணி, பிரபு மற்றும் கோவிந்தன் பூலோகத்தில் வந்து, அவரவர் தலை விதிக்கேற்ப பிறந்தனர்.
மணி , பூரி ஜகந்நாதன் கோயில் அர்ச்சகனாக ,
,பிரபு காஞ்சிபுரம் பெரிய கோயிலில் , வாயில் காப்பானாக
கோவிந்தன் , காட்டு மன்னார் கோயில் அருகே உள்ள ஒரு கோயில் அர்ச்சகனாக
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
***
மணி :
பூரி ஜகந்நாதன் கோயில் அர்ச்சகனாக இறைவன் அருகிலிருந்தும், மணி, உலக சுகத்திற்கு ஆசைப்பட்டான். அதை அடைய காசு பணத்திற்கு அலைந்தான். . அதனால், வரும் யாத்திரிகர்களிடம், அர்ச்சனை பண்ணுகிறேன், ஆராதனை பண்ணுகிறேன் என்று சொல்லி பணம் பிடுங்கினான்.
பிரபு
காஞ்சிபுரம் பெரிய கோயிலில் , வாயில் காப்பானாக இருந்த பிரபு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனை தரிசித்து , உண்மையே பேசி , சில்லறை வாங்காமல், காலத்தை கழித்தான்.
கோவிந்தன்
காட்டு மன்னார் கோயில் அருகே உள்ள ஒரு கோயில் அர்ச்சகனாக பொறுப்பேற்ற கோவிந்தன், ஏழ்மையாக இருந்தான். ஆனால், உண்மையான பக்தியுடன் இறைவனை தொழுதான். வரும் பக்தர்களை அன்புடன் வரவேற்று, ஆர்வமுடன் ஆராதனை செய்தான். காசு பணத்தில் , உலக சுகத்தில் ஆசை இல்லை.
மூவரின் காலம் முடிந்தது. வேறு வேறு கால கட்டங்களில்.
யம பட்டினம்
மூவரின் ஆத்மாவும் யம லோகத்தில். வேறு வேறு கால கட்டங்களில். சித்ர குப்தன் மூவரின் கணக்கையும் படித்தான். யமன் அது கேட்டு தீர்ப்பு கூறினான்.
பூரி ஜகந்நாதன் கோயில் அர்ச்சகனாக மணி இறைவன் அருகிலிருந்தும், பாபங்கள் செய்ததால், மீளாத நரகம்:
காஞ்சிபுரம் பெரிய கோயிலில் , வாயில் காப்பானாக இருந்த பிரபு, இறைவனை தரிசித்து புண்ணியம் செய்ததால், அவனுக்கு திருப்பதி கோயில் அர்ச்சகனாக ஒரு வாய்ப்பு. அங்கயும் அவன் நல்ல கைங்கரியம் செய்தால் மேலும் உயர ஒரு சந்தர்ப்பம் .
காட்டு மன்னார் கோயில் அருகே உள்ள ஒரு கோயில் அர்ச்சகனாக பொறுப்பேற்ற கோவிந்தன் , உண்மையாக இறைவனுக்கு தோத்திரம் செய்ததால், அவனுக்கு இறைவனடி.
*****
பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறார் :
நல்லதை செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு இவ்வுலகிலோ இதன் பிறகோ அழிவில்லை. அதனால், மீண்டும் அடையும் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையான வெற்றியை நோக்கி மீண்டும் உழைக்கிறான், அல்லது அழிவை நோக்கி செல்கிறான் - கீதையில் கண்ணன் (6. 43)
.....முற்றும்