அவளுக்காய்

#அவளுக்காய்

"என்ன மச்சி 'ஐ சப்போர்ட்...' என்று யாரோ பொண்ணுட பெயர் போட்டிருக்கிறாய்... என்னடா நடக்குது இங்கே..." - ரமேஸ்

"என்ன பண்ணடா... வேற வழி..." - இது வினோதன்

"நீ இப்பிடியெல்லாம் போடுற ஆள் இல்லையேடா..."

"கழுதைக்கு வாக்கப்பட்டால் கணைச்சு தானே ஆகனும்...அதை விடு மச்சி..."

"ஓஹ்... மேலிடத்து உத்தரவோ... சரி சரி புரிஞ்சிடுச்சு..."

"உவளுகளுக்கு பெண்ணியமும் தெரியலை, கண்ணியமும் தெரியலை... எவளோ ஒருத்தி போட்டோ போட்டாளாம். அது சரி என்று அங்கே போய் வக்காளத்து வாங்கிட்டு இருக்கிறாள் டா... "

"சொல்லி புரியவையேன் டா... நீ தானே வாய் சொல் வீரனாச்சே..."

"அதெல்லாம் படிக்கிற காலத்திலயும் உங்க கூடயும் தான் டா... இங்கே அவள் நினைக்கிறது, செய்கிறது தான் சரி என்று அவள் சொல்லுறதை மட்டும் 'ம்ம்ம்...' கொட்டி கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மீறி எதிர்த்து கதைச்சால் 'உனக்கும் எனக்கும் சரிவராது பிரிஞ்சிடுவோம்' என்று ஆரம்பிச்சிடுவாள்..." - வினோதன்

"அதுக்காக அடிமையாய் இருக்க போறியா... போடி இவளே என்றுட்டு வேற வேலையை பாரு மச்சி..." - ரமேஸ்

" இதெல்லாம் எனக்கு சரி வருமா என்று பல தடவைகள் யோசித்திருக்கிறேன் டா... ஆனால், ஏதோ ஒன்று என்னை தடுக்குது... அவளை விட்டு வர மனசு இடம் கொடுக்குதில்லை... உலகம் அறியா சின்னப்பிள்ளை டா..."

"உந்த சின்ன பிள்ளை தான் அந்த போட்டோ போட்டதுக்கு வக்காளத்து வாங்குதா...?"

"அதான் டா அவள் ட பிரச்சனை... ஆம்பளைங்க செய்வதை பொண்ணுங்க செய்வது தான் பெண்ணியம், ஆணுக்கு பெண் என்றைக்குமே சளைத்தவள் இல்லை என தான் நினைக்கிறதெல்லாம் சரி என்று நினைச்சிட்டு இருக்கிறாள்... "

"உவளோட எப்பிடி காலந் தள்ளப்போகிறாய்... கடைசியில் உன்ர வாழ்க்கையும் சீரழிஞ்சி போகபோகுது..."

"இள இரத்தம் டா... அடி பட்டு தான் திருந்துவார்கள். போக போகத் தான் வாழ்க்கையை உணருவாள். அப்போ தான் சரியாய் பட்டதில் சில தப்பாவும், தப்பாக சொன்னவற்றில் சில சரியாகவும் இருப்பதை உணருவாள்... அதுவரைக்கும் காத்திருப்பேன் டா..."

"எதுக்கும் ஒரு அளவு இருக்கோனும் இல்லையா..."

"உண்மை தான்... நானும் தனியா இருந்து யோசித்து பார்த்தேன். ஒன்று மட்டும் தெளிவாய் புரிஞ்சிருச்சு... அவளுக்கு வாழ்க்கை பற்றிய பயம் இல்லை. என்ன நடந்தாலும் நான் அவளை விட்டு போகமாட்டேன் என்ற மலையளவு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில் தான் 'எனக்கும் உனக்கும் சரிவராது' என்று சொல்வதெல்லாம். எப்பிடியும் நான் அவளை சமாதானப்படுத்திடுவேன் என்ற நம்பிக்கை. எல்லா பொண்ணுகளுக்குமே இருக்கிற குணம் தான் டா. காதல் கண்ணை மறைச்சிட அவனும் ஒரு மனுசன் தான் என்றில்லாம் அவனை காயப்படுத்துவார்கள்..."

"நம்ம பெடியல் கிள்ளுகீரை போல் ஆகிடுறாங்கள் இல்லையா...நம்ம பெடியல்ட சாபம் அது... தூக்கில தான் தொங்க போகிறேன் என்றால் யாரால தடுக்க முடியும் சொல்லு..." சொல்லிக்கொண்டே நகர்ந்தான் ரமேஸ்.

எழுதியவர் : மணிவாசன் (18-May-21, 2:36 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : avalukkai
பார்வை : 279

மேலே