விழிகள் கலங்குகிறது

சிந்திக்கும் திறனும்
சிந்தையில் தேய்ந்து
சரிகிறது மனிதஇனம்
சரியாகும் நிலையென !

இனியேனும் வருமென
இன்பம் பொங்குமென
இதயங்கள் விரும்புகிறது
இல்லங்கள் ஏங்குது !

நடந்திடும் நிகழ்வுகள்
நடுங்கிட வைக்கிறது !
நடைபிணம் ஆகிறோம்
நடமாடும் நாமெல்லாம் !

நிச்சயம் மறுக்காது
நிந்தனை செய்யாது
வாசிக்கும் இதயங்கள்
யோசிக்கும் இதனை !

அல்லலில் குடும்பங்கள்
அன்றாடம் அவதியில்
அதிவேகம் காட்டுகிறான்
அரக்கன் கொரோனா !

முடிவுதான் எப்போது
விடியல்தான் என்று !
பலிவாங்கும் வைரசே
பழிவாங்கும் மனம் ஏன் ?

உயிரிழப்பு அதிகமாகுது
உள்ளங்கள் அழுகிறது
மரணமும் வாராதோ
இரக்கமற்ற வைரசுக்கு?

மனமுடைந்த மக்கள்
மகிழ்வது எப்போது?
அலைபேசி அழுகிறது
அன்றாட செய்திகேட்டு !

விழிநீரும் மறைக்கிறது
வழிகின்ற வருத்தத்தால்
வழியொன்று தெரியாமல்
விழிகள் கலங்குகிறது !

ஓலங்கள் ஒலித்திடும்
ஒன்றிரண்டு அங்கங்கு
நிலையில் மாற்றமின்று
நித்தமும் எங்கெங்கும் !


பழனி குமார்
21.05.2021

எழுதியவர் : பழனி குமார் (21-May-21, 2:38 pm)
பார்வை : 84

மேலே