PERUNTHOTRIN PERUNDHUYARAM

உடம்பு கொதிக்கும்
உள்காய்ச்சல் வரும்

தொண்டைப் பகுதி
தொற்று வந்து அலறும்

உடல் வலி மேவி
உயிர் அவஸ்தைப்படும்

வயிற்றுக்குள் போனதெல்லாம்
வயிற்றலிருந்து போகும்

நாசி வாசம் அறியாது
நாவிற்கும் சுவை தெரியாது

பயம் தொற்றி விடும்
பலம் வற்றி விடும்

நுண்கிருமிகளால்
நுரையீரல் துன்பப்படும்

சத்தான உணவுக்கு
சரீரம் தினமும் ஏங்கும்
வாசம், ருசி தெரியாததால்
வயிறு உண்ணாமலே தூங்கும்

பக்கத்துவீட்டுப் பந்தங்களுக்கு
பரவாமல் பாதுகாக்க
கதவு, ஜன்னல்கள்
கச்சிதமாக மூடப்படும்
வெளிக்காற்று உள்ளே புகாது
உள்காற்று வெளியே போகாது
நான்கு சுவர்களால்
நரகம் நம்மை சிறைப்படுத்தும்

முந்திரி, பாதாம் அவசியம்
முட்டை முக்கிய உணவாகும்

கபசுரக்குடிநீரே - நமக்கு
கவசகுண்டலமாகும்

கருணை உள்ளத்தோடு
உறவுகள் தரும் உணவுகள்தான்
உயிரை மீண்டும் உயிர்ப்பிக்கும்

நம்மைப் பெற்றவர்களும்
நாம் பெற்ற பிள்ளைகளும்
எங்கோ ஒரு மூலையில்
ஏங்கித் தவித்திடுவார்கள்

முதல்நாள் மட்டும் பிறரால்
தனிமைப்படுத்தப்படுவோம்
அதற்க்கடுத்த நாள்முதல்
தனிமை என்ற பெயரால்
கொடுமைப்படுத்தப்படுவோம்

பாராசிட்டமால், சிங்க்
அஸீத்ரோமைசின் - இவைகள்தான்
உற்ற துணையாய் உடனிருக்கும்

நோய் வந்து நொந்தபின்புதான்
தாயாய் மாறும் தாரத்தின் நிழலில்
சேயாய் மாறும் தருணத்தை அறிவோம்

மனக்கலக்கமின்றி ஓய்வெடுக்க
மருத்துவமனைப் படுக்கையில்லை
ஆழ்ந்து சுவாசிக்க
ஆக்சிஜன் கைவசமில்லை
சுதந்திரமாய்ச் சாகலாமென்றால்
சுடுகாட்டிலும் இடமில்லை

ஆகவேதான் அன்பர்களே
அலட்சியத்தைத் தவிர்த்திடுவோம்
இன்பமும், அமைதியும் பெற
இல்லத்திலேயே இருந்திடுவோம்
பொன்னான நேரத்தை
பிள்ளைகளோடு செலவிடுவோம்

நாடு நலமாய் இருக்க - நாம்
வீட்டோடு இருப்பது அவசியம்
வீடு நலமாய் இருக்க - நாம்
உயிரோடு இருப்பது அவசியம்

கிருமிநாசினி, முகக்கவசம்
சமுதாய இடைவெளி - இதுவே
நலமாய் நாம் வாழ சிறந்த வழி

ஞான் பெற்ற துன்பம்
பெறாதிருக்க இவ்வைகயம்

எழுதியவர் : VIJAYAKUMAR NATRAYANM (29-May-21, 3:44 pm)
பார்வை : 38

மேலே