கோமுறையை வழுமாமல் செய்துவரும் மன்னவனைத் தெய்வம் காக்கும் நன்கு - நீதி, தருமதீபிகை 824
நேரிசை வெண்பா
பெற்ற மகனே எனினும் பிழைபுரியின்
குற்றமறத் தண்டித்துக் கோமுறையை - எற்றும்
வழுமாமல் செய்துவரும் மன்னவனைத் தெய்வம்
நழுவாமல் காத்துவரும் நன்கு! 824
- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தான் பெற்ற அருமை மகனேயானாலும் பிழை செய்தால் அவனை உடனே தண்டித்து அடக்கி அரசமுறை புரியும் விழுமிய வேந்தனைத் தெய்வம் எவ்வழியும் செவ்வையாய்க் காத்து வரும்; அந்த ஆட்சி அதிசய மாட்சியாய் உயர்ந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நாடு காக்க நேர்ந்தவன் யாண்டும் நடுவு நிலைமையோடு நீதி புரிய வேண்டும் என்பதை இது ஈண்டு உணர்த்தியுள்ளது. உயர்ந்த மேன்மைகள் யாவும் சிறந்த செயல்களால் விளைந்து வருகின்றன. ஒருவனுடைய தன்மையைக் கொண்டே நன்மைகள் அளக்கப் படுகின்றன. தனது கருமம் தருமநீதிகள் தழுவிவரின் அவன் எவனாயிருந்தாலும் உலகம் அவனை உயர்குல வேந்தனாய் உவந்து புகழ்ந்து யாண்டும் வியந்து கொண்டாடுகின்றது.
ககந்தன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசு புரிந்தான். அரசுக்கு இவன் நேரான வாரிசு அல்லன்; ஆயினும் நாட்டை மிகவும் நீதிமுறையோடு பாதுகாத்து வந்தான். இராச தானியான அந்த நகரம் இவனுடைய பெயர் உரிமையோடு காகந்தி என வழங்க நேர்ந்தது. இவனது ஆட்சித் திறம் மாட்சி மிகுந்து நின்றது. குற்றம் குறைகள் யாண்டும் யாரிடமும் நேராதவாறு ஓர்ந்து இவன் ஆண்டு வந்தமையால் உயர்புகழ் நீண்டு வந்தது. அவ்வாறு வருங்கால் மருதி என்னும் ஒரு தருண மங்கையை இவனுடைய மகன் காதலித்தான்; சமயம் பார்த்திருந்து தனியே அவளைச் சந்தித்துக் கலவிக்கு அழைத்தான். அவள் கலங்கி வருந்தி அயலே ஒதுங்கி விரைந்து பூத சதுக்கம் புகுந்து தெய்வ சந்நிதியில் நின்று அழுது முறையிட்டாள்.
நீதி முறை செய்கிற அந்தத் தேவதை நேரே தோன்றி ’நீ நல்ல பதி விரதைதான்; ஆனாலும் உன்னிடம் சில குறைகள் உள்ளன; நாடகம், கூத்து முதலிய போலிக் காட்சிகளைக் காண விழைந்தமையால் உயர்ந்த உத்தம பத்தினிகளுக்கு உரிய சிறந்த மகிமை குறைந்து போயது; ஆதலால் நான் யாதும் செய்ய முடியாது; காம இச்சையால் உன்பால் பிழை செய்தவனை இவ்வூர் அரசன் தண்டிப்பான்; நீ நெஞ்சம் திருந்தி நேர்மையாய் வாழுக' எனக் கூறி விடுத்தது.
அந்தத் தெய்வம் கூறியபடியே ககந்தன் நீதி விசாரணை செய்தான். தீது புரிந்தமை தெரிந்தது; உடனே தன் மகனுக்கு மரண தண்டனை விதித்தான். பெண்ணின் கற்பு உயிரினும் சிறந்தது; அதனை நீ அழிக்க முயன்றாய்; ஆதலால் நீ அழிந்து ஒழிய வேண்டும்' என்று தீர்ப்புக் கூறி அவனைக் கொன்று தொலைத்தான். அயலே வருவது இங்கு அறிய வுரியது.
பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்
யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக்
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
45 நீவா என்ன, நேர்இழை கலங்கி
மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன்
முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என
50 மாதுயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன்
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்
55 யான்செய் குற்றம் யான்அறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும்,
மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி
நீகேள் என்றே நேர்இழைக்கு உரைக்கும்:
60 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
65 கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை
70 ஓங்குஇரு வானத்து மழையும்நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்
கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம்
மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம்
பின்முறை அல்லது என்முறை இல்லை
75 ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன
இகந்த பூதம் எடுத்துரை செய்தது. 22 சிறைசெய் காதை, மணிமேகலை
அங்கே நடந்த நிகழ்ச்சிகளை இது வரைந்து காட்டியுள்ளது. பொருள் நிலைகளைக் கண்ணுான்றிக் காண்பவர் அரிய பல உண்மைகளை உணர்ந்து கொள்வர். மருதி என்னும் பார்ப்பன மங்கையை மாரதன் காதலிக்க அழைத்ததும், அவள் மன்றம் புகுந்து பூதத்தை நோக்கி முறையிட்டதும், அந்தக் காவல் தெய்வம் தோன்றி யாவும் தெளிவாக விளக்கித் ‘தீது செய்தவனை அரசன் தண்டிப்பான், நீ போ!' என்று அவளைத் தேற்றி விடுத்ததும் இதனால் தெரிய வந்தன. தெய்வம் குறித்தபடியே ககந்தன் செய்து முடித்தான் குற்றவாளி என்று கண்டவுடனே தனது மகன் என்றும் பாராமல் அவனை மன்னன் கொன்று ஒழித்தான். இது எவ்வளவு அதிசயம்! எத்துணை நீதிமுறை! உய்த்துணர வேண்டும். சிறந்த ஆட்சி நிலைக்கு உயர்ந்த சாட்சியாய் நின்றான்.
யாண்டும் யாதும் அநியாயங்கள் புகாமல் எவ்வழியும் நியாயங்கள் நிலவிவர ஆண்டு வருவதே அரச தருமம் என்பது ஈண்டு அறிய வந்தது. பெற்ற மகனே ஆனாலும் பிழை செய்தால் அவனை உடன் கடிந்து நீக்கி மாந்தரை மாண்போடு பேணுவதே வேந்தன் கடமையாம் என்பதை இவன் விளக்கி நின்றான். அரிய நீதியை உரிமையோடு செய்து வந்தானாதலால் இவனுடைய புகழ் உலகமெங்கும் ஒளி பெற்று நின்றது. இவன் பெயரை மருவி ஊரும் நாடும் உரையாட நேர்ந்தன. ககந்தன் காத்தலின் காகந்தி எனக் காவிரிப் பதி ஒரு காரணப் பெயரைப் பூண்டு நின்றது. நீதி நெறியால் உலக சோதியாய் உலாவ நேர்ந்தான்.
ஆட்சி முறையில் இவன் புரிந்த நீதி அரச குலத்துக்கு ஒரு மாட்சியாய் வந்தது. மாசு களைந்து தேசத்தை ஆள்பவன் ஈசனருள் அடைந்து தேசு மிகப் பெறுகின்றான். அந்த அரிய பேற்றை இவன் உரிமையாய்ப் பெற்று ஒளிமிகுந்து விளங்கினான்.