உள்ளம் பகையாய் உறுவாரைக் கல்விநலம் உள்ளமையால் தேறி உறாதொழிக - யூகம், தருமதீபிகை 834

நேரிசை வெண்பா

உள்ளம் பகையாய் உறுவாரைக் கல்விநலம்
உள்ளமையால் தேறி உறாதொழிக - வெள்ளமென
நீறுபுறம் பூத்து நெருப்பிருத்தல் போலவருட்
சீறி யிருப்பர் தெளி! 834

- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம் உள்ளத்தில் பகையாயுள்ளவர் கல்வி முதலிய நலங்களை அடைந்திருந்தாலும் அவரை நல்லவர் என்று நம்பிச் சேராதே; அகத்தே கொடிய நெருப்பு மண்டிப் புறத்தே இனிய நீறுபூத்துள்ளது போல் அவர் சீறி நின்று தீமையே புரிவர்; அதனைத் தெளிந்து தேர்ந்து பாதுகாத்துக் கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குணநலங்கள் மனிதனை இனிமை செய்து உயர்த்துகின்றன; குற்றங்கள் அவனை இழிவாக்கித் தாழ்த்துகின்றன. நல்ல தன்மைகளை விடப் பொல்லாத புன்மைகளே மனிதனிடம் எங்கும் பொங்கி வளர்கின்றன. கெட்ட பழக்கங்களையே மனிதன் விழைந்து தழுவிக் கொள்ளுதலால் கேடுகளே யாண்டும் நீண்டு வர நேர்ந்தன. தீமைகள் எவ்வழியும் திரளாய் விளைகின்றன.

கோள், வஞ்சம், குரோதம் பொறாமை, பகைமை முதலிய தீமைகள் மனித இனத்தைப் பாழ்படுத்தி யிருக்கின்றன. உள்ளம் தூய்மையான நல்ல ஒருவனைக் காண்பது மிகவும் அரிதாயுள்ளது. இந்த நிலையில் வளர்ந்து நிற்கின்ற சமுதாயத்துள் மாறுபாடு மண்டியுள்ள பகையாளியை எந்த வகையிலும் நம்பலாகாது. நம்பினால் நாசங்கள் விளைந்து விடும்.

நெஞ்சில் பகையிருந்தால் அது வஞ்சகமாய் வதை செய்யும் வழிகளையே தொகையாய் நாடி வரும். பாம்பை நம்பினாலும் பகையை நம்பாதே என்பது பழமொழி. இதனால் அதன் அழிவு நிலைகளைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு
மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா
புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே! 260 கனகமாலையார் இலம்பகம், சீவகசிந்தாமணி

ஏமாங்கத நாட்டு அரசி இன்னவாறு புத்தி போதித்திருக்கிறாள்; தன் மகனான சீவகமன்னன் பகைவருடைய சூழ்ச்சிகளில் அகப்படாமல் சுகமாய் வாழ வேண்டும் என்று அத்தாய் பேரன்போடு கூறியிருக்கும் நீதி மொழிகள் நினைந்து சிந்திக்கத் தக்கன. உற்ற அறிவுக்குப் பயன் ஊறு நேராமல் ஓர்வதாம்

பகை நோக்கு, பாம்பின் போக்கு, மங்கையர் மனம் ஒரு நிலையில் நில்லா; அவற்றை நம்பலாகாது; நம்பி அணுகினால் நாசமே நேரும் என்று எச்சரிக்கை செய்து உச்ச நிலையில் போதித்திருக்கிறாள். அதன் இயல்பான கொடுமையைக் கூர்ந்து தெரிய கேடு சூழும் கெடுநிலைகளுள் பகையை முன் வைத்தது;

பாம்பை அணுகினால் அபாயம்; மகளிரை நணுகினால் நாசம், பகையை அணுகாமல் அயலே விலகியிருந்தாலும் அவன் கேடே சூழ்ந்து அழிதுயரையே கருதி நிற்பனாதலால் கொடிய பாம்பினும் அவன் கடியத் தக்கவன். நஞ்சிருக்கும் பாம்பினும் பகையிருக்கும் நெஞ்சு படுதுயர் புரியும். பாம்பு கடித்தால் கடிபட்ட ஒருவனே சாவன்; பகைவனை அடுத்தால் பலவகை இடர்களை விளைத்துக் குடியை அடியோடு அவன் கெடுத்து விடுவான்

இனியவனாய் நடித்தாலும், இதமுடையவனாய் அடுத்தாலும் பகைவனை உரிமையாய்ச் சேர்க்கலாகாது. தன்னை நம்புதற்கு உரிய வழிகளையெல்லாம் விழி தெரியச் செய்து பகைவன் நல்லவன் போல் ஒட்ட வருவான், வரினும் உள்ளம் ஒட்டாமல் கள்ளமாய் எட்ட நில். வஞ்சப்பகை நஞ்சினும் கொடியது.

கல்வி குற்றங்களை நீக்கிக் குணங்களை ஆக்குமாயினும், உள்ளத்தில் செற்றம் உள்ளவரை அது நல்லவர் ஆக்காது.

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்(கு) அரிது. 823 கூடா நட்பு

நல்ல பல நூல்களை நன்கு கற்றாலும் உள்ளம் பகையாயுள்ளவர் ஒழுங்காய்த் திருந்தி நல்லவராக மாட்டார் எனத் தேவர் இங்ஙனம் பகைமையின் கொடுமையைக் கடுமையாய்க் காட்டியிருக்கிறார். மாணார் - பகைவர்.

தரும நீதிகள் தழுவிய அரிய பல கலைகளைப் பயின்று தெளிந்து பெரிய மேதைகளாய் வெளியே விளங்கியிருந்தாலும் உள்ளே பகைமை யிருக்குமாயின் அவர் தகைமையோடு நடக்க முடியாது; ஆகவே அவரை நல்லவர் என்று நம்பி நெருங்கலாகாது. நெருங்கினால் நெடுங்கேடு நேரே விளைந்து விடும்.

உள்ளே கட்டையில் தீ எரிந்து கொண்டிருக்கும்; வெளியே நீறு வெள்ளையாய்ப் பூக்திருக்கும்; புறத்தோற்றத்தைக் கண்டு திருநீறு என்று அதனை எடுக்க நேர்ந்தால் தீ கையைச் சுட்டுவிடும். பொல்லாத பகையாளியை நல்ல கல்விமான் என்று நம்பி அடுத்தால் அல்லலே விளங்க அவலமேயாம். எதிரியிடம் எச்சரிக்கையாயுள்ளவன் யாண்டும் அச்சமின்றி உச்சமாய் வாழுகின்றான். நல்ல அறிவு அல்லலையறிந்து விலகுகிறது.

மவுனம் கலகத்தை ஒழிக்கிறது; எச்சரிக்கை பயத்தை நீக்குகிறது என்னும் இது இங்கே அறியவுரியது. நெஞ்சம் திகிலடையாமல் நிம்மதியாய் வாழ்வதே நிறைந்த மதியின் சிறந்த பயனாம். துயர் அணுகாமல் உயர் நிலையில் வாழுக.

பகைவருடைய நிலைகளை அறிந்து வகைபுரிந்து தகையாய், ஒழுகி வருபவன் விழுமிய விவேகி யாகின்றான். பலவகையான சூழ்ச்சிகளும் படிப்பினைகளும் எதிரிகளிடமிருந்து அறிய வருகின்றன. அந்த வரவு சிந்தை தெளியச் செய்கிறது.

The wise learn many things from their foes. - Aristophanes

தங்கள் பகைவரிடமிருந்து பல நிலைகளை அறிவாளிகள் தெரிந்து கொள்ளுகிறார்கள் என்னும் இது இங்கே அறிந்து கொள்ளவுரியது. அல்லலுறாமல் வாழ்வதே நல்ல யூகமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-21, 9:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே