வேலை_நான்_அனுபவம்
வெசாக் தினம் என்றாலே எனக்கு மறக்க முடியாத தினம். முன்ன பின்ன போய் பழக்கம் இல்லாமல் திருகோணமலையில் மாட்டுப்பட்டது தான் ஞாபகத்துக்கு வரும்.
அது நடந்தது கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்கள் இருக்கும்.
வவுனியாவில் இருந்த காலப்பகுதி அது. வேலை தேடிகொண்டிருந்த போது கண்ணில் பட்டது அந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் விளம்பரம். ஏதாவது ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது அன்றைய நிலையில் இருந்த கனவு. சரி விண்ணப்பித்து தான் பார்ப்போமேன் என முடிவானது. என்னுடைய கெட்ட நேரம் அவர்கள் கேட்டிருந்தது பாலம் கட்டுமான வேலைக்கானது. எனக்கோ அதுபற்றிய அனுபவம் இல்லை.
அந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் போது ஓர் படிவம் இருக்கு. அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதில் பால கட்டுமான அனுபவம் பூச்சியம் என பூர்த்தி செய்தேன். ஆசை இருந்தாலும் யாரும் அனுபவம் இல்லாமல் தாமாக முன்வந்து வேலை கொடுக்கமாட்டார்கள். வேலை கொடுக்காமல் எப்படி அனுபவம் பெறுவது.
ஒரு வாரத்தில் மின்னஞ்சலில் பதில் வந்திருந்தது. 'எமது தேவையை பூர்த்தி செய்யும் தகமை தங்களிடம் இல்லாத காரணத்தினால் தங்கக் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. தங்கள் தகமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தங்கள் விண்ணப்பத்தினை கருத்தில் கொள்கிறோம்' என இருந்தது.
இதை தான் எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமாய் இருக்கவில்லை. கனவு இன்னும் கொஞ்சம் பிற்போடப்பட்டிருக்கின்றது என என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
இரண்டு நாட்களின் பின்னர் புதிய இலக்கத்தில் இருந்து தொலைபேசிக்கு ஓர் அழைப்பு.
அதே நிறுவனத்தில் இருந்து அதே வேலைக்கான நேர்முக தேர்வுக்காக திருகோணமலைக்கு வருமாறு அழைத்திருந்தார்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்ட என் விண்ணப்பத்துக்கு மீண்டும் அழைப்பா? இதை நம்பலாமா? கொழும்பில் இருந்து அழைத்திருந்தாலாவது சிறு நம்பிக்கை வந்திருக்கும். திருகோணமலை என்பதால் சிறு சந்தேகம் வேற. எனக்கு வந்திருந்த மின்னஞ்சலை திரும்ப திரும்ப படித்து பார்த்தேன். என்னுடைய ஆங்கில புலமை மட்டத்துக்கு நிராகரிக்கப்பட்டதாகவே இருந்தது.
குறித்த திகதி நெருங்கவும் இறுதி முடிவு எடுக்கமுடியாத குழப்பம். இறுதியில் இதுவரை திருகோணமலை போனதில்லை. இதை வைத்து போய் பார்த்து ஊர் சுற்றிவிட்டு வருவோம் என உறுதியாகிவிட்டது.
அதிகாலையிலேயே வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பேருந்து பயணம் ஆரம்பித்திருந்தது. பத்து மணியளவில் திருகோணமலை சென்றடைந்தேன். அங்கிருந்து புல்மோட்டை செல்லும் பாதைக்கு மற்றொரு பேருந்து. 11:30 மணியளவில் குறித்த இடத்தினை சென்றடைந்துவிட்டாகிவிட்டது.
ஒருவர் உள்ளே அழைத்து சென்றார். அவர் பேசிய தமிழ் இருந்து அவர் முஸ்லிம் என்று புரிந்து கொண்டேன். நேர்முக தேர்வு. பொது நிறம் கொண்ட நரைத்த தலைமுடியுடன் இன்னுருவர் இருந்தார். சிங்களவராக இருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். முற்றுமுழுதாக ஆங்கிலத்தில் தான் நடந்தது. ஆனால், அவரின் ஆங்கில சொல் உச்சரிப்பு புதுமையாக இருந்தது. புரியாமலும் இருந்தது. பின்னர் அறிவிப்பதாய் சொல்லி அனுப்பி வைத்தார்கள். வெளியில் வரும் போது அவரை பற்றி விசாரித்தேன். 'டுபாய்யில் நிரந்தர வதிவிடமாக வாழும் பங்களாதேஷ் நபர். பாலம் கட்டுமானத்தில் 25 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர்' என பதில் கிடைத்தது.
12:30 மணியளவில் எல்லாம் முடிந்துவிட 'இவ்வளவு தூரம் வந்தனான். புல்மோட்டையை பார்த்திட்டு போவோம்' என ஆசை பிறந்தது. பேருந்தில் போகும் போது ஓர் இடம் அழகாக இருந்தது. ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் வீதியின் குறுக்கே கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அவற்றை புகைப்படம் பிடித்தவாறு பயணம் தொடர்ந்தது.
புல்மோட்டையை சென்றடைந்ததும் பசி வயித்தை பிராண்டியது. சாப்பிடுவோம் என்று பார்த்தால், அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை முடித்து எல்லா சாப்பாட்டு கடைகளும் சனத்தினால் சூழப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இது சரிவராது என முடிவு பண்ணி திருகோணமலை நோக்கி அடுத்த பேருந்தில் புறப்பட்டேன்.
திரும்பும் போதும் அந்த வீதி வேலை இடத்தினை மீண்டும் சில புகைப்படங்களுக்குள் சிறைபிடித்துக் கொண்டேன். திருகோணமலை நகரை சென்றடைந்த போது நேரம் 3:15 ஐ தாண்டி இருந்தது. வவுனியாவுக்கான கடைசி பேருந்து 3:00 மணிக்கு போய்விட்டது. இப்போ எனக்கு தலை சுற்ற தொடங்கியது. விசாரித்தி பார்த்ததில் இனி வவுனியா செல்ல இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணம் போகும் பேருந்தில் தான் செல்ல முடியும். வேற எந்த வழிகளும் இல்லை.
கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் கடத்த வேண்டிய சூழ்நிலை. பசி வேற ஒரு பக்கம். தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. முதலில் சாப்பிடுவோம். பிறகு யோசிப்போம் என முன்னே இருந்த கடைக்கு சென்று வாயிறு முட்ட சாப்பிட்டாச்சு.
கோயில், கடைகள், சந்தைகள் என நடை பயில தொடங்கினேன். அப்பாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் விதியை நொந்து கொண்டேன். அப்போது தான் தனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். என அப்பா கூறிய திரை அரங்கிற்கு நடையை கட்டினேன்.
அன்று தான் கலகலப்பு படம் வெளியாகி இருந்தது. பட இடைவேளை நேரம். அந்த நபர் என்னை உள்ளே சென்று படம் பார்க்க சொன்னார். இடைவேளையில் இருந்து கலகலப்பு படம். என் கவலையெல்லாவற்றையும் மறந்து வயிறு நோக சிரிச்சு முடிச்சு படம் முடிவடைந்து வெளியில் வந்தேன். இன்னமும் நிறைய நேரம் இருக்கின்றது. அதே நபர் வந்து நேரம் இருக்கு தானே. படத்தை பாருங்கோ என்றார். மாலை நேர காட்சியில் இடைவேளை வரை விட்டதை தொடர்கிறேன்.
முதன் முதலாக ஒரு படத்தை இடைவேளையில் இருந்து முடிவு, பின்னர் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை வரை படம் பார்க்கிறேன்.
இடைவேளையில் அந்த நபர் வந்து என்னை அழைத்துச் சென்றார். இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு 9:00 மணி தாண்டிய பின்னர் பேருந்து நிலையத்துக்கு சென்றேன். நேரம் இருக்கின்றது.
நகரில் இருக்கும் மைதானத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. உள்ளே சென்று கடைகளை சுற்றி பார்த்துவிட்டு மறுபக்கம் செல்லும் போது மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட அரங்கினை ஆச்சரியமாய் பார்த்து ரசித்தேன். அது தான் என்னுடைய முதலாவது வெசாக் தினம். தமிழ் பகுதிகளிலேயே இருந்துவிட்டதால் இது பற்றி பெரிதாக தெரியாது.
10:00 மணி அளவில் பேருந்து நிலையத்துக்கு சென்ற போது பேருந்து தயாராக நின்றது. இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்து கொண்டமையினால் இருக்கைகள் இல்லை. அதிகாலை 2:00 மணியளவில் நின்று கொண்டே வவுனியா சென்றடைந்தேன்.
நான் எடுத்து வந்த புகைப்படங்களை கணினியில் எடுத்து ஆசையோட பார்த்துக்கொண்டேன். இப்பிடியான வேலையும் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவலும் உருவானது.
ஒரு வாரத்தின் பின்னர் வேலைக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. வேலையில் இணைந்து கொண்ட முதல் நாள் வேலைத் தளத்துக்கு அழைத்து சென்றனர்.
நான் எந்த இடத்தினை ஆச்சரியத்துடன் புகைப்படம் பிடித்து வியந்தேனோ, அதே இடத்தில் நிறுத்திவிட்டு இது தான் உன்னுடைய புகுந்த வீடு என பாலம் முடித்து வைத்தார்கள்.
மறக்க முடியாத அனுபவத்தினையும் நண்பர்களையும் மீன், இறைச்சி என வாய்க்கு ருசியான சாப்பாட்டினையும் கொடுத்த இடம் அது.
காலையில் வேலைக்கு போனால் இரவு வீட்டுக்கு திரும்பிவிடும் வேலை பார்த்து வந்த எனக்கு வீட்டை விட்டு வெளியே ஆரம்பித்த முதலாவது வேலை. மாவட்டம் தாண்டி மாகாணம் தாண்டி பிள்ளையார் சுழி போட்டது. இன்றும் வெளி பிரதேசமாகவே தேசாந்திரியாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
