நிலவே நீ சாட்சி
மேகசேலைக்குள் முகம் புதைத்து
நீ ஏன் வெட்கப்படுகிறாய்?
நீ ஓர் ஆண்மகன்!
வெட்கம் உனக்குத் தேவையில்லை!
வெள்ளி நிலவே!
வெளியே வந்து உன்
வெண்மை முகத்தைக்
காட்டிவிடு!
ஒர் பௌர்ணமியன்றுதான்
என்காதல் அவளிடம் உரைத்தேன்!
எங்கள் கண்களின் காட்சி நீ!
எங்கள் காதலின் சாட்சியும் நீ!
நீ வானத்தின் வட்டநிலா!
அவள் என் இதயத்தை சுட்ட நிலா!
எனவே வெள்ளி நிலவே!
வெளியே வந்து உன்
வெண்மை முகத்தைக்
காட்டிவிடு!
அலைகள் உன்னை முத்தமிட
தாவித்தாவிக் குதித்துத்
தவித்துப்போகின்றன....
நட்சத்திரப்பெண்கள்
உன்முகம் பார்க்க
கண்சிமிட்டிக் கொண்டு
காத்துக் கிடக்கின்றன...
எனவே வெள்ளி நிலவே!
வெளியே வந்து உன்
வெண்மை முகத்தைக்
காட்டிவிடு!
அல்லிமலர்கள் உனக்காக
இன்னும் பூப்பெய்தாமல்
காத்திருக்கின்றன,
பூத்த பின் காத்திருக்கும்
என்காதலியைப் போல...
எனவே வெள்ளி நிலவே!
வெளியே வந்து உன்
வெண்மை முகத்தைக்
காட்டிவிடு!
___________________________