கொரோனாவும் குழந்தை தொழிலாளர்களும்

காலையில வாசலுக்கு சாணி போடுறதுல இருந்து இரவு பாலுக்கு உறை ஊத்துற வரைனு என் வாழ்க்கை ஒரே ஓட்டம் தாங்க... எல்லாம் வேற யாருக்கு என் ரெண்டு பசங்களுக்காக தான்.

' டேய் குடுடா... இல்லைனா அடி வாங்குவ...' 'போடா.... இவ்ளோ நேரம் நீதானே செல் போன் வச்சிட்டு இருந்த' புள்ளைங்க போடுற சத்தம் காது கிழியுது.

என்ன செய்றாங்கன்னு போய் பாத்தா பசங்க ரெண்டு பேரும் செல் போனுக்காக உருண்டு பிரண்டு சண்டை போடுதுங்க !

'டேய் காலைலே செல் போன் சண்டையா.... குளிச்சிட்டு சீக்கரம் ரெடி ஆகுங்க இன்னைக்கு பள்ளி கூடத்துக்கு போகணும் சரியா... ' என சத்தம் போட்டேன்.

'நல்லா படிச்சி பெரிய பட்டம் எல்லாம் வாங்குவீங்கன்னு நெனச்சா ரெண்டுல ஒன்னு கூட தேறாது போல...' என பெரு மூச்சி விட்டேன்.

சின்னவன் குட்டி என் காதோரம் வந்து 'அம்மா நீ கவலை படாத அண்ணனை விடு நா உன் ஆசையை நிறைவேத்துறன் ஒரு ஐம்பது ரூபா குடு' என்று குசு குசுனு சொன்னான்'.
'எதுக்குடா ? குட்டி'

'அம்மா பெரிய பட்டம் வேணும்னு கேட்டாலே அதுக்கு கலர் பேப்பர் ,நூல்,பசை எல்லாம் வாங்கணும்ல..' என லிஸ்ட் போட்டான் குட்டி.

மெதுவாக குட்டியின் காதை திருகி கொண்டே சொன்னேன் 'வாங்குவ வாங்குவ இது எல்லாம் வக்கணையா பேசு ஆனா நைட்டு பாயில ஒண்ணுக்கு அடிச்சிட்டு'.
ஆ...என கத்திய படி ஓடினான்.

பசங்க பள்ளிக்கு செல்ல தயாரானாங்க .ரெண்டு பசங்களையும் பள்ளி சீருடைல பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா என அணைத்துக்கொண்டேன்.

'பெரியவனே இன்னைக்கு பள்ளி கூடத்துல அரிசி பருப்பு முட்டை எல்லாம் தராங்க வாங்கி வீட்டுல வச்சிட்டு நீ பாபு அண்ணா பட்டறைக்கு போ சரியா..?' என்றேன்.

'எதுக்குமா...? நா வேளைக்கு போயிட்டா அப்புறம் நீ ஆச பட்ட மாறி படிச்சி எப்படி பெரிய பெரிய கம்பனில போய் வேல பாக்குறது ?' என்றான் பெரியவன்.

'நம்பள மாதிரி ஆளுங்க வெறும் கனவு மட்டும் தான் காண முடியும் ஆனா எதார்த்ததுல என்ன நடக்குமோ அத ஏத்துக்கிட்டு வாழ பழகிக்கணும் போல' என மனசுக்குள்ளே புழுங்கினேன்.

'நா வேலைக்கு போய்ட்டா குட்டி வீட்டுல தனியா இருப்பானே..?' என பெரியவன் பாசாங்கு செய்தான்.

'அம்மா வேளைக்கு போன வேட்டி பசங்களோட வெயிலே சுத்துறது; ஏரி பக்கம் போயி வெளயாடுறது; குட்டி தனியா வீட்ல இருக்கறதுனு எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா' என கொஞ்சம் கோபத்தோடு அதட்டினேன்.
'அது எல்லாம் கவலை படாதே நா குட்டிய என் கூடவே கூட்டிட்டு போறான்' என்றேன்.

'ஐ ஜாலி இனி அம்மா கூட நானும் போவேன் ஸ்கூலுக்கு போக தேவ இல்லையா' என உற்சாகமானான் குட்டி.

'அப்படி எல்லாம் இல்ல பள்ளி கூடம் திறந்தவுடன் ரெண்டு பேரும் கட்டாயம் பள்ளி கூடத்துக்கு தான் போகணும்னு' தெளிவாக விளக்கினேன்.
'கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்க சாத்தியமில்லை' என டிவில செய்தி ஓடிட்டு இருந்துச்சி.

'டேய் பெரியவனே போயி டீவியை நிறுத்திட்டு வீட்டை பூட்டு லேட்டா போன பள்ளி கூடத்துல அரிசி வாங்க கூட்டம் அதிகம் ஆகிடும்; வேளைக்கு போகவும் லேட்டாகிடும் என்றேன்.
நானும் என் இரண்டு பசங்களும் வேகமாக பள்ளிக்கு சென்றோம்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்கள் பலர் இன்று குழந்தை தொழிலாளர்கள் ஆகிவிட்டனர் .

எழுதியவர் : Jeyalakshmi (6-Jun-21, 12:48 pm)
சேர்த்தது : Lakshmi
பார்வை : 51

மேலே