கேனோ உபநிஷத் - கதை
முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம் . அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் .
அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை , என்ற ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள்., தேவர்களான இந்திரன், வருணன், வாயு, அக்னி போன்றவர்கள் , சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, பரமாத்மா பார்த்தார். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயித்த உடனே, அசுர குணம் வந்துவிடும் போல இருக்கே, என்று நினைத்து, , அப்படி கெட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி, அவர்கள் வரும் வழியில் ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஒரு ஜோதி ஸ்வரூபமாக, ஒளி வடிவமாக ஒரு யக்ஷனை அனுப்பினார் . இது என்னன்னு, ஜோதி ஸ்வரூபம் என்று தேவர்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது .
இது யார், நாம் தேவர்கள், நம் வழியை மறித்துக் கொண்டு, இந்த யக்ஷன் யார்?
கோபத்துடன், இந்திரன், அந்த யஷத்துக்கிட்ட முதலில் அக்னியை அனுப்பினான் . “ அக்னி, நீ போய் , யார் இந்த யக்ஷன், நாம் போகும் பாதையில் குறுக்கே வந்து வழியை மறிக்கிறான். அவனிடம், நமது பெருமைகளை சொல்லி, உன் பராக்கிரமத்தை காட்டி, அவனை வழியில் இருந்து அப்புறப்படுத்து. நம்மை யாரென்று நினைத்து கொண்டிருக்கிறான், பொடிப் பயல் ? “
அக்னி உடனே அந்த யக்ஷனிடம் சென்று “நீ யாருன்னு? ” அதிகாரமாக கேட்டான் , அந்த யக்ஷன் “ நீ யாரென்று முதலில் சொல்” என்று பதில் கேள்வி இட்டான். அக்னி சொன்னான் “ நான் அக்னி, நான் ஜாதவேதஸ், என்னை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே. எதையும் நான் நொடியில் சாம்பலாக்கி விடுவேன்”
அதை கேட்ட யக்ஷன், சிரித்துக் கொண்டே , ஒரு காய்ந்த சருகை எடுத்து அவன் முன் எறிந்தான். “ எங்கே இதை முதலில் எரி பார்க்கலாம்?” என்றான். அக்னி தன் சக்தி அனைத்தையும் உபயோகப் படுத்தி காய்ந்த சருகை எரிக்கப் பார்த்தான் . அவனால் ஒன்றும் முடியவில்லை . “ நான் யார் தெரியுமா ? நான் அக்னி , நான் ஜாதவேதஸ் , என்னால், எதையும் நொடியில் பஸ்பமாக்க முடியும் என்று திரும்ப திரும்ப எரிக்க முயற்சித்தான் . ஒன்றும் நடக்க வில்லை. அக்னியின் முயற்சி அனைத்தும் தோற்றது . அவனது உருவம் சிறிதாகி சிறிதாகி திரும்ப இந்திரனிடம் ஓடினான் .
இந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை . நம்மை தோற்கடிக்க ஒரு யக்ஷன், எப்படி சாத்தியம் ?
கொஞ்சம் யோசனைக்கு பிறகு, இந்திரன் வாயுவை அந்த யக்ஷனிடம் அனுப்பினான் . “ நீ போய் அந்த யக்ஷன் யார் என்று தெரிந்து கொண்டு, அவனை தோற்கடித்து விட்டு வா. “
வாயு அந்த யக்ஷனிடம் சென்றான் . “யக்ஷனே நீ யார்? “ உடனே அந்த யக்ஷன் “ நீ யாரென்று முதலில் சொல்” என்று கேட்டான். . வாயு சொன்னான் “ நான் வாயு, , நான் மாதரீஷ்வன் , என்னை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே . எதையும் நான் நொடியில் புரட்டி போட்டு விடுவேன்”
அதை கேட்ட யக்ஷன், சிரித்துக் கொண்டே , ஒரு காய்ந்த சருகை எடுத்து அவன் முன் எறிந்தான். “ எங்கே இதை முதலில் புரட்டி போடு பார்க்கலாம்?” என்றான். வாயு தன் சக்தி அனைத்தையும் உபயோகப் படுத்தி காய்ந்த சருகை புரட்டி போட பார்த்தான் . அவனால் ஒன்றும் முடியவில்லை .
“ நான் யார் தெரியுமா ? நான் வாயு, , நான் மாதரீஷ்வன் , என்னை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே. எதையும் நான் நொடியில் புரட்டி போட்டு விடுவேன் என்று திரும்ப திரும்ப முயற்சித்தான் . ஒன்றும் நடக்க வில்லை. வாயுவின் முயற்சி அனைத்தும் தோற்றது . அவனது உருவம் சிறிதாகி சிறிதாகி திரும்ப இந்திரனிடம் ஓடினான் . தன் தோல்வியை ஒப்புக் கொண்டான் .
இந்திரனுக்கு கவலை வந்து விட்டது . “ என்னடா இது, நாம எல்லாம் வெற்றி விழா கொண்டாடும் போது, ஒரு யக்ஷன் , யார் என்னவென்றே தெரியவில்லை, தெரிந்து கொள்ள முடிய வில்லை. அதுவே நமக்கு ஒரு தோல்வி. அது தவிர , நம்முடைய ரொம்ப சக்திமானான அக்னி, வாயுவெல்லாம் தோற்றுப் போயிட்டார்கள் . , நமது இந்த வெற்றி விழாவே ஒரு தோல்வி ஆகி , அவமானமாக ஆகி விட்டதே” என்று ஒரு யோசனை வந்து விட்டது .
கூடவே கொஞ்சம் நல்லறிவும் இந்திரனுக்கு வந்தது . கர்வம் அடங்கியது இந்திரன் பணிவோட அந்த யக்ஷனை நெருங்கி வணங்கினான்
அவன் தேவர்களின் தலைவன் மட்டுமல்ல, மற்றவர் மனதை , புரிந்து கொள்ளும் , அடக்கும் சக்தி படைத்தவன் . “ எங்களை மன்னியுங்கள். எங்கள் கர்வம் அடங்கியது . நீங்கள் யார் ? என்று யக்ஷனை கேட்டான் அப்போது அந்த யக்ஷன் இருந்த இடத்தில் ஒரு ஸ்திரீ ரூபத்தில், உமா தேவி, ஹைமாவதியாக காட்சி கொடுத்தாள்”
அவள் சொன்னாள். “ இந்திரா ! உன் வெற்றி , உன் வெற்றியல்ல . எல்லாம் பிரமமத்தின் வெற்றியே . அவன் கொடுத்த சக்தி தான் உன் வெற்றி . அதை புரிந்து கொள் “
அப்போதுதான், இந்திரன் புரிந்து கொண்டான், யக்ஷனாக , வெளிச்சக் கோளமாக வந்தது பிரம்மமே என்று .
உமாதேவியை வணங்கி, கர்வம் அடங்கி விடை பெற்றான் .மற்ற தேவர்களும் ஆணவம் அடங்கி ஒடுங்கினர்.
****
ஆ. கு இந்த கதை கேனோ உபநிஷதில் உள்ளது. இந்த கதை சொல்லும் அறிவுரை ஒன்று தான் . கர்வம் கூடாது . கூடவே கூடாது மற்றவரை தாழ்வாக மதிக்காதே . நீ மட்டும் தான் திறமைசாலி என நினைக்காதே
(Do not underestimate anybody. Do not think that you are the only intelligent one, and do not underestimate any challenge even if it comes from ‘beneath’ you.)
.