’முதல் அப்பா பாவம்டி’

இந்த வருடத்தின் இன்று கடைசி நாள். மே மாதத்தின் முதல் நாள் என்பதால் எல்லா குழந்தைகளின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. வசதியோடு படிக்கின்ற பள்ளியில் சகலமும் கிடைத்தாலும், அம்மா அப்பாவின் கவனிப்பில் வறுமையிலும் பங்குபோட்டு உண்டு வளரும் பிள்ளைகளின் மனங்களில் ஒரு வருடம் தனித்து ஒன்று கூடும் நாள் ஒரு திருவிழாதான். இங்கு படிக்கும் எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு விதத்தில் அழிக்க முடியாத பாதிப்புகளை மனதில் சுமந்துகொண்டு வாழ்பவர்கள் தான்.

ஆண்கள் விடுதியும். பெண்கள் விடுதியும் பரபரப்பாக இருந்தது. காலை உணவை ஒன்றுகூடி உண்டுவிட்டு அவரவர் துணி ,பெட்டி படுக்கைகளை சுருட்டி வைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள் .எங்கும் ஒரே சலசலப்பு குழந்தைகளின் கூச்சல்.

மணி ஒன்பதைத் தொட்டது. ஒவ்வொருவராக வரத் தொடங்கின.

ஒவ்வொரு மரமும் ஒரு குழந்தையோடு ஒரு தாயோடு ஒரு தந்தையோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை தன் தாய்க்கு அறிமுகப்படுத்தியது

” அன்பா இருக்கணும் .யாரும் அடிச்சுக்க கூடாது .நல்லா படிக்கணும் ”என்ற பேச்சுதான் அறிவுரையாக எல்லா மரத்தடியிலும் ஒலித்துக்கொண்டிருந்தது.

எல்லோருடைய கையிலும் குடும்ப அட்டையின் நகல் .அதில் தொலைபேசி எண் எழுதியிருந்தது .வந்திருந்த பெற்றோர்கள் தங்க ஆவணங்களில் உள்ள முகவரியுடன் தொலைபேசி எண்ணையும் எழுதி கையெழுத்திட்டு இருகரம் கூப்பி வணங்கிவிட்டு போயிட்டு வரங்க என்று சொல்லும் ஒவ்வொருவரிடமும் ஜூன் ஒன்னாம் தேதி காலையில் ஏழு மணிக்கெல்லாம் இங்கு இருக்கணும் மறந்து விடக்கூடாது என்று அந்த குழந்தையிடம் சொன்ன அந்தப் பள்ளியின் முதல்வர் ’எங்கயும் சுத்த கூடாது ’என்று அன்பு கலந்த கண்டிப்புடன் கன்னத்தில் தட்டி வழியனுப்பி வைத்தார்

எங்கும் பரபரப்பு .ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் சிரிப்பு .கூட்டம் கூட்டமாய் மரத்தின் கீழ் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் அவள் மட்டும் உணவு விடுதி நுழைவுவாயில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கையைக் கட்டிக் கொண்டு நின்றிறுந்தவளின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது.

நேற்று வரை அவள் அம்மாவின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தவளின் மனதில் இன்று தன் தாயின் வருகையை கொண்டாடுவோ அதனை மற்ற தோழிகளுடன் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளவும் தோன்றவில்லை.
அந்த குழந்தையின் உள்ளம் குமுறி போயுள்ளது என்பதனை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது .கண்ணீர் துளிகளின் வழியாக,

’ ஏண்டி என்னடி ஆச்சு?’ ’ஏன் அழற?’ என்றாள் அவளின் வகுப்பு தோழி சத்யா.
’ஒன்னும் இல்லடி’ என்றவள் தனது இடது கை ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் துடைத்தாள்

’ என்னை விட்டு பிரிய போறோமோ என்கிற கவலை தானே உனக்கு’ என்ற குறும்புத்தனமான பேச்சால் அவளின் உள்ள குமுறலை ஓரளவு தனிய செய்தவள் அவளின் தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தார்கள்

வலியின் அளவை வாய்விட்டு உற்ற தோழியிடம் அத்தனையும் சொல்வதுதான் சிறந்தது என முடிவு எடுத்தவள் பேச ஆரம்பித்தாள்

’இல்லடி நேத்து எங்க அம்மா மட்டும்தான் வரன்னு சொன்னாங்க போன்ல, ஆனா இன்னைக்கு காலையில போன் பண்ணி இரண்டாவது அப்பா கூட வராரு ன்னும் சொல்றாங்க அதான் எனக்கு கோபம்’

கொஞ்சம் மௌனம் .தேம்பி அழுதாள்
’அது மட்டும் இல்லடி, எனக்கு இரண்டாவது அப்பா வேண்டாம் .,நீ மட்டும் வான்னு சொன்னேன்.
’ஆனா எங்க அம்மா இரண்டாவது அப்பாகிட்ட கார் இருக்கு அவரு ரொம்ப நல்லவருன்னு சொல்றாங்கடி ’தேம்பி அழுதுகொண்டே கண்ணை கசக்கிய அவள்


’முதல் அப்பா அவர் ரொம்ப நல்லவர்’ விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்

கசக்கிய இரு கைகளை பிடித்துக் கொண்டு என்ன சொல்வதென தெரியாமல் மனதுக்குள்ளேயே அழுதாள் சத்யா
’இவளுக்காவது ரெண்டு அப்பா, எனக்கு அப்பான்னா யாருன்னு தெரியாது’ என மனதிற்குள் நினைத்து கொண்டவள் ‘அழாதடி….’ என்று கலங்கிய கண்களோடு
இருவரும் நடந்து சென்றனர்

எழுதியவர் : இரா.ரமேஷ் (9-Jun-21, 3:15 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 93

மேலே