கடமை செய்

கடமை செய் தனித்து.(ஒரு பா பஃது)
***************************************
உடுத்துதற் கென்றோர் உடுதுணி யின்றி
நடுத்தெரு வாழ்வார் நலிந்து. - எடுத்துக்
கொடுத்திடும் வள்ளல் குணமுடை யார்க்கோ
அடுத்தடுத் தின்னல் அடுக்கு.
**
அடுக்கிய செல்வம் அழிவதற் குள்ளே
கொடுத்திட மாட்டார் குளிர்ந்து - படுக்கையில்
வீழ்ந்துப் பதைத்திட வாழ்நாள் பரிசளித்தே
வாழ்த்திடும் நோயாய் வளைத்து.
**
வளைத்திடும் நோயால் வதைபடற் குள்ளே
சுளையென வின்பம் சுவைத்து - முளைவிடும்
அன்பை முதியவர் அல்லல் களைவதற்
கென்றே பொழிதல் கரும்பு
**
கரும்பெனத் தோன்றிக் கசந்திடும் வாழ்வை
விரும்பும் படிவாழ் வதற்கு - இரும்பெனும்
நெஞ்சம் எதற்கு? நினைத்துப்பார். நீகொளும்
வெஞ்சினம் தன்னை விலக்கு.
**
விலக்கிடுந் தீமை விலங்குகள் நீக்கத்
துலங்கிடு மின்பந் துளிர்த்து - உலகம்
சமநிலை காண சமத்துவ மோங்க
நமதென வாழ்வை நகர்த்து
**
நகர்த்திடுங் கால்கள் நடையது மின்னல்
நிகர்தொரு விரைவாய் நிலவை - முகர்ந்திடக்
கொள்ளும் முயற்சிக் குவலய மெங்கிலும்
துள்ளித் திரிந்திடத் தோற்று.
**
தோற்றம் மறைவெனத் தூரிகைத் தீட்டுமுன்
மாற்றம் பெறுகிற மாண்புடன் - சீற்றம்
கொளுமலை போன்றே கரைகடப்பாய். கீழ்வான்
வெளுக்கும் உனக்கும் விரைந்து.
**
விரைகின்றப் பொற்காலம் வீணாக்கி விட்டே
நரைதட்டித் தள்ளாடும் நாளில் - கரைகாணா
வெள்ளலைபோல் கண்ணீர் விடுவதுவுங் காணாவுன்
உள்ளக் குமுறல் உதிர்.
**
உதிர்ந்திடும் பூக்கள் உரமாகி வேரில்
பதித்திடும் நன்றியினைப் பார்த்து - விதிவழி
வாழ்வென்னும் வீண்வாதம் விட்டொதுக்கி வைத்தன்பால்
ஆழ்ந்தின்பம் கொள்வாய் அறிந்து
**
அறியாப் பருவத்தின் ஆக்கினைகள் விட்டே
நெறிதவறா வாழ்வின் நிறைவாய். - குறிதவறாக்
கொக்கலகின் கூர்மையுடன் கொண்டக் கடமையைத்
தக்கபடி செய்வாய் தனித்து.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Jun-21, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 116

மேலே