இழிசொல் பொறுத்த இளவரசி

அம்மாவின் பழைய சேலை
கதவாக வீட்டை காக்க;
பக்கவாதத்தில் படுத்த அப்பா
முக்கி இரும்மும் முன்னே,
அம்மாவோட வலது கை
அவரு நெஞ்ச தேச்சுவிடும்
சூட்டில் தினம் விழிப்பான்
எங்க ஊரு சூரியன்;
பத்துவீட்டு பாத்திரம் தேச்சு
பயமில்லா பெண்ணாக
பக்குவமாக பாத்து வளர்த்து
பட்டதாரியாக்கி மகிழ்ந்தாள்
படிக்காத என் தாய்;
செம்மண் பூசிய வீட்டைவிட்டு
சென்னையில் வேலை சேர்ந்தேன்
மாத்து துணி இல்லாம
மதிய சோறு திண்ணாம
வாடகை பகிர்ந்து தங்கி
சிறுக சிறுக சேகரிச்சு
சிமிண்டு வீடு கட்டி
ஆத்தா அப்ப சிரிப்பு
உயிரோடிருக்கும்போதே பாக்க
பசி மறந்து பாடுபட்டேன்,
ஆனந்தமா என் அம்மா
எங்க ஊரு கருப்பனுக்கு
புதுவீடு போகனும்னு
நேந்துகிட்டு சேத்த காச
காணிக்கை செலுத்தி கொண்டாடினா;
பகல் கனவும் நிஜமாச்சு
உண்மையான உடல்வருத்தி
நிறுவன வேலை செஞ்சதால
உயரிய பதவி கொடுத்தாங்க
அடுத்தென்ன நடக்குமுனு
உங்களுக்கு தெரியாதா..!!
கிராமத்து பொண்ணு ஒன்ணு
பட்டனத்து காரங்க குழுவுக்கு
மேலதிகாரியா எப்படி ஆயிருப்பா?
திரைமறைவாக கிண்டல் பேச்சும்
கிசுகிசுக்கும் பெண்கள் நாக்கும்
தினம் தினம் என்நெஞ்சை
குத்தி கிலுச்சு ஆனந்தபட்டுச்சு;
அடுக்கடுக்கா இழிசொல் கேட்டே
ஜொல்லு வாயன் மேனேஜர
மைய வச்சு மயக்கிட்டா;
ஏழை வேஷம் போட்டு
ஏமாத்தி பதவி வாங்கிட்டா;
இழிச்சு இழிச்சு பேசி
எல்லாத்தையும் சாதிச்சா;
இளவரசி பேர வச்சு
அந்தபுர இளவரசியாயிட்டா;
கண்ண காட்டி கட்டியிழுத்து
கல்லாபெட்டிய நிரப்பிகிட்டா;
நாகூசும் வார்த்தை அம்பை
ஏவியது எம்மீது
நாயினும் கீழான கூட்டம்.
என் நிலையில்
வேறொரு பெண்னிருந்தால்
மேலுலகே போயிருப்பாள்; குடிசையில பொறந்த நானோ

குமுரி அழவில்லை;
தைரியமான மனதுடன்
கேலி சொல்லை மதிக்காமலும் திட்டியவர் முன் திமிராக
தலை நிமிர்ந்து வாழ்வதே
நாம் அவர்களுக்கு
கொடுக்கும் தண்டனையென்று வெற்றிபெற்றேன்;
முள் தைத்த காயம்
மூனு நாளில் ஆறிவிடும்;
சொல் தைத்த ரணம்
மரணம் வரை நோகடிக்கும்;
இனியேனும் யாரையும்
மனம் வருந்த பேசாது
பிறர் வளர்ச்சியில்
மகிழ்ச்சி கொள்ளும்
மனநிலை பெற்றுவிட்டால்
வாழும் கடவுள் நீங்கள்தான்.

எழுதியவர் : பிரபாகரன் தமிழ்மாணவன் (11-Jun-21, 9:46 am)
சேர்த்தது : Prabhakaran b
பார்வை : 71

மேலே