கூட்டு குடும்பம்
ஒரு கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்தால் அது ஒரு சிறிய குடும்பம்! இருவரும் தாய்-தந்தையர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் அது சிறிதான பெரிய குடும்பம்! ஒரு வேளை இவர்கள் தாய், தந்தை, தங்கை அண்ணன், தம்பி, அக்கா, இவர்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது கூட்டுக் குடும்பம்! இவர்களுடன், அடுத்த நிலை உறவினர்கள் கூடி வாழும்போது அது பெரிய கூட்டுக் குடும்பம்!
இந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது அநேகமாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு கணிசமாகக் குறைந்து வருகிறது. ஏனெனில் அதிகம் பேர்கள் சேர்ந்திருந்தால் இந்நாளில் கூட்டுக் குடும்பம் என்பது ஒரு கூத்துக் குடும்பமாகிவிடுகிறது! ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கிராமப்புற இடங்களிலும் மற்றும் சமூகத்தினரிடமும் பெரிய கூட்டுக் குடும்ப வாழ்வு இன்னமும் இருந்து வருகிறது. ராஜஸ்தான் மார்வாரி குடும்பங்கள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒரிஸ்ஸா மாநிலத்தில் பொதுவாகவே பெற்றோருக்கு மிகுந்த மரியாதை வழங்கப் படுகிறது. இதனால் அங்கே மக்கள் கூட்டுக் குடும்பங்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். இது என்னுடைய கணிப்பு. பொதுக் கணிப்பாகவும் இருக்கலாம்.
காலமும், கோலமும், கருத்தும், விருப்பமும் விரைவாக மாறி வருகின்ற எந்திர யுகத்தில், கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், அதைத் தழுவிய நடைமுறைகளும் வெகுவாக மாறிவிட்டது! கல்யாணத்திற்குப் பின் அம்மா-அப்பாவிடமிருந்து பிரிந்து, துணையுடன் தனித்து வாழ்வது இந்நாளில் மிகவும் சகஜமாகிவிட்டது. உடன் பிறந்த அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை எல்லோரும்
இதே மாதிரி தனித்து சென்றுதான் வாழ்கின்றனர். இதன் விளைவால்தான் நிறைய முதிய பெற்றோர்கள் 'முதியோர் இல்லங்களில்' வாழத் தொடங்கி விட்டனர். பண வசதி இல்லாத பெற்றோர்களுக்கு மகனோ, மகளோ பொருளுதவி செய்து அவர்கள் முதியோர் இல்லங்களில் வாழ உதவினாலே போதும் என்கிற நிலையும் பல குடும்பங்களில் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பிரிந்து வாழும் தம்பதியினர்,' விவாகரத்து பெற்ற தம்பதியினர்' என்ற மேலை நாடுகளில் புழங்கி வரும் சமூக நிலை நமது நாட்டிலும் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. இதைப் போன்ற பிரிந்து வாழும் குடும்பங்களில் குழந்தைகளும் அடங்குவர். ஒரே ஒரு பெற்றோருடன் (single parent) வாழ்கின்ற குழந்தைகளின் மனநிலையும் வெளிநோக்கும் இதனால் நிச்சயம் பாதிக்கப்படும். இதன் தாக்கம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் இருக்கக் கூடும்.
இரண்டு பேரும் சேர்ந்து சம்பாதித்தால்தான் வாழ்க்கை வண்டி ஓடும் என்கிற நிலையில் பல குடும்பங்கள் தத்தளித்தும், எதிர் நீச்சலடிதும் வாழ்ந்துதான் வருகிறது.
போகின்ற வேகத்தில், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என அழைக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
ஆனந்த ராம்
பின் குறிப்பு:
உடன் பிறந்தவர்களுடன் உண்மையான அன்பும் பாசமும் கொண்டு , குறிப்பாக, தன் பெற்றோர்களை தனியாக தவிக்கவிடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்ப நபருக்கும் என் தலை தாழ்த்தி வணக்கங்கள், மனமார்ந்த நன்றிகள்!