அலெக்சாண்டர் கிரகாம் பெல்லும், என் செல் போனின் சொல்லும்

நேத்தி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்ததுங்க. நேத்து காலைல என் செல்போனை குளிப்பாட்டறப்போ அது காது வழியா கொஞ்சம் அதிகமா தண்ணி போய் , ரொம்ப நனஞ்சு போய் ஜன்னி கண்டுவிட்டது. உடனே போனை தூக்கிண்டு ஓடோடிப் போனேன். எங்கே? ஹோட்டலுக்கா போவான், செல் போன் கடைக்குதான் போனேன். போனை பரிசோதித்தத கடைக்காரர் சொன்னார் "அதை கொஞ்சம் நல்லா உலுக்கி, கொஞ்சம் தட்டி, கொஞ்சம் கையால் சூடு பண்ணி, ஒரே ஒரு தடவை கீழே போட்டு விட்டு, பின்பு கொஞ்ச நேரம் காய வைக்கணும், எல்லாம் சரியா ஆயிடும். கொஞ்சம் wait பண்ணுங்க".
ஒரு தனி அறையில் நான் மட்டும் கைப்பேசி இல்லாம, கையும் ஓடல( செல் போன் கையில் இருந்தாத்தானே கை ஓடும்), காலும் ஓடல ஏன்னா, நாற்காலியில் தானே சும்மா உட்கார்ந்திருந்தேன். அப்போது மெதுவா ஒரு உருவம் கடைக்குள்ள நுழைந்தது. கண்களை பெரிதாக சிறிதாக உருட்டிக் கொண்டு கடைக்காரரிடம் சென்றது. நான் மெள்ள சென்று அவரை கூர்ந்து கவனித்தேன். ஏற்கெனவே கைகால் ஓடாம இருந்த எனக்கு மூளையும்(கொஞ்சம் உண்டல்லோ) ஓடாம போச்சுங்க. அவரிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று தோணிச்சு. ஆனா வாய் திறக்கவில்லை. அப்புறம் வார்த்தை எங்கிருந்து வரும்? ஆனா அவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

நீங்க நம்பினா நம்புங்க. இல்லேன்னா ஜும்முங்க. அவர் தாங்க Alexander Graham Bell! தொலைப்பேசியை கண்டுபிடிச்ச ஆளு.

இவர் இப்போ இங்கே எதுக்காக வந்தார்னு தெரிஞ்சிக்க, ஓசை போடாம அவர் பின்னாலே போனேன். கிட்டதட்ட 10 செல்போனைப் பார்த்து சோதித்து, நல்லா flash light எரியும் புத்திசாலி செல்போனை எடுத்தாருங்க. ஆனா, அவரை யாருன்னு கடைக்காரருக்கு தெரியவில்லை. Payment counterல இவர்கிட்ட இருந்த பெரிய தோள் பையிலிருந்து, அவர் முதன் முதலில் கண்டு பிடித்த பெரிய போனை( நல்ல கருப்பு கலர்) எடுத்து கொடுத்து "இதை வச்சிண்டு exchange offer கொடுங்க" ன்னாரு. கடைக்கார் "அட நீங்க வேற, வேலை செய்யற நல்ல செல்போனையே நாங்க திரும்பி எடுக்கிறதில்லை. இந்த பழைய பெட்டியை வச்சிண்டு என்ன பண்ணுவோம். எதிரில் கடையில் கொடுத்தா, weight பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி பேரிச்சம் பழம் கொடுப்பாங்க"

இதப் பார்த்துட்டு எனக்கு பகீருன்னு ஆகிவிட்டது. பாவம், கிரகம் பெல். செல் போன் வாங்காமலேயே கடையிலிருந்து புறப்பட்டார். வேதனை தாங்காம நான் அவரிடம் " சார், உங்களை எனக்கு தெரியும். கிரகம் பெல் தானே நீங்க" ன்னு கேட்டேன்.
" அடாடா, அது எப்படி உங்களுக்கு தெரியும்ன்னு ஆச்சரியப் பட்டார். நான் சொன்னேன் " சார், இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. கிட்டதட்ட 50 வருடத்திற்கு முன்னால், நான் எட்டாம் வகுப்பில் படிக்கையில் விஞ்ஞானப் பாடப் புத்தகத்தில் " தொலைபேசியின் தந்தை பெல்," என்ற பக்கத்தில் உங்கள் முகம் தான் அச்சிடப்பட்டு இருந்தது.

Bell ரொம்பவும் மகிழ்ந்து" well done" அப்படீன்னார். நான் கேட்டேன்" எப்படி சார் நீங்க இரண்டு நூற்றாண்டுக்குப் பிறகு இங்க வந்தீங்க" அவர் சொன்னார்" நான் இப்போ சனி கிரகத்தில் வாசம் செய்கிறேன். அங்கே மார்கோனி, எடிஸன், பாரடே, ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் இவர்களும் என்னோட இருக்காங்க. என் போனில் மறந்து போய் ஏதோ நம்பரை டயல் செய்து விட்டேன்". அப்போது நான் " சார், என்ன நம்பர் போட்டீங்க"ன்னு கேட்டேன். நல்ல ஞாபக சக்தி உள்ளவர்தானே அவர். உடனே என்னுடைய 10 digit செல் போன் நம்பரை சொன்னார். எனக்கு பேய் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. " எப்போ சார் போன் பண்ணீங்கன்னு" கேட்டேன். " இன்று காலைதான்னு சொன்னார்"
ஐயோடா ராமா, அதானல்தான் என் செல் போன் repair ஆகிவிட்டது என்று தெரிந்து கொண்டேன். இருப்பினும் அவரிடம் உள்ள மரியாதையால்" சார் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, ஒரு smart phone வாங்கித் தரட்டுமா" ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் கீழ்வரும் பதிலை கொடுத்துட்டு, deleted msg மாதிரி உடனேயே மறைஞ்சி போயிட்டார்.
"ஏற்கெனவே எல்லா விஞ்ஞானிகளும் பண்ண பாவத்துக்கெல்லாம் சரியான தண்டனையை அநுபவித்துக் கொண்டிருக்கோம். இப்போ செல் போனை சனிக்கு கொண்டு போனா , எனக்கும் இது மாதிரி வாங்கிக் கொடுன்னு எல்லோரும் கேட்டு என் உயிரை எடுத்துடுவாங்க"

ஆனந்த ராம்

பின் குறிப்பு:
எனக்கு தெரியுமே, நீங்க கேட்பீங்க " ஏன்யா உம் செல்பொன் சரியா ஆச்சா இல்லையா"ன்னு. அந்த வயித்தெரிச்சல ஏன் கேட்கறீங்க. கிரகம் பெல் மாயமா மறைஞ்ச உடன்,பார்த்தால் செல்கடைக்காரர் அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தார். . நான் இரக்கம் கொண்டு அவரிடம் கேட்டேன். " ஏங்க என்னத்தை தேடறீங்க, சொன்னா நானும் சேர்ந்து தேடுவேனே". அவர் தொங்கும் முகத்துடன் என்னைப் பார்த்து பரிதாபமாகச் சொன்னார் " உங்க செல்போனைத் தாங்க, இதோ இந்த stand மேல தான் காய வச்சிருந்தேன். எவனோ களவாணிப் பய காயடிச்சிட்டான்."

(என் மனசாட்சி சொல்றதுங்க , நீங்க நினைக்கிற மாதிரியே..." அந்த அலெக்சாண்டர் கிரகம் பெல் தான், உன் போனை சுட்டிருப்பார்")

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-21, 10:25 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 127

மேலே