கண்ணதாசன்

கவிக்குக் கவி கண்ணதாசன்
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
எட்டாம் குழவியாய் உன்னன்னை பெற்றெடுத்தும் - நீ
ஏழாயிரம் ரூபாய்க்கே அன்றைக்கு விலை போனாய் !

பத்து பிள்ளைகளோடு கொத்தாகப் பிறப்பெடுத்தும்
நித்திலம் உன்பிறப்பை சிப்பியுமே உணரவில்லை !

மூன்று துணைவியரை இல்வாழ்வில் கையிணைந்து
முழுமனதாய்ப் பெற்றெடுத்த பிள்ளைகளோ பதினைந்து !

எறுழ் நிறைந்திட்ட தமிழ்ப் புலமை - அது
எட்டாம் வகுப்பே கொடுத்திட்ட கல்விக்குப் பெருமை !

நண்ணிய கவிசெய்ய நற்றமிழ் பாரதியும் ..
கண்ணியக் கவிசொன்ன கம்பனுமே முன்னெடுப்பு !

பனுவல்களைத் துன்னலாக்கி பக்குவமாய் கவிபாட
அனுபவமே பலநேரம் அறிந்திருந்தாய் உரைகல்லாய் !

களிறு படைத்திட்ட கலைநய இருமருப்பாய்
கவியிலும் பாட்டிலும் எப்படிடா அலையடித்தாய் !

ஆழ்மனதைக் கடைந்தெடுத்து அலைநோக்கும் புனரியாய்
பாடல்களைப் படைத்தெடுத்து பரப்பிவிட்டாய் இசைக்கடலில் !

காரைக்குடி பெற்றெடுத்தா கோப்பைக்குள்ளே குடியிருந்தாய்
ஏமமது விலகாமல் கோலமயில் துணையிருந்தாள் !

முள்மீது உலர்வித்த முழுத்துணியாய் நீ விரிந்து
ஞெள்ளல் காலம் வரும்போதே நீயுணர்ந்தாய் தவறென்று !

ஆத்திகமும் நாத்திகமும் அணு அணுவாய் வாழ்ந்துணர்ந்து
ஞமன் பிடித்து இரண்டையுமே வாழ்க்கையிலே சமன்செய்தாய் !

இறப்பிலும் உன்பாடல் இசைத்தட்டு இமிழ்க்குதடா
இறுதியிலும் அதற்காக பிணம்கூட செவிக்குதடா !

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எழுதியவர் : க.செல்வராசு (24-Jun-21, 6:42 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 45

மேலே