பெண்ணும் பணியிடமும்

பெண்ணும் பணியிடமும்
அரசு வேலையே பெற்றுவிட்டாலும் கூட,
பெண் என்பவள் எப்போதும் பெண்தான்.
பணியிடம் பொது இடம் என
பார்வைகளில் - வார்த்தைகளில் - செய்கைகளில் என
வன்முறை தெரிக்காத இடமில்லை.
ஆண் வென்றால் அது அவரின் அறிவினால் மட்டும்
பெண் வென்றால் அது அழகால் மட்டும்தானா?
அலுவலகம் அடுத்த குடும்பம் என எண்ணி
உள்ளே நுழையும் அவளை
சகோதரியாகப் பார்ப்பதற்கு அங்கே கண்கள் குறைவு.
அதிலும் கீழ்பதவியில் பெண் இருந்துவிட்டால்
உயர்பதவி ஆடவர்க்கு கிள்ளுக்கீரை
பெண்கள் கேட்டால் கிடைத்துவிடும்
பெண்கள் அழுதே காரியம் சாதிப்பவர்கள்
இப்படித் திணிக்கப்பட்ட வசைமொழிகள் பல
ஓரிரு பெண்களின் தவறான போக்கை வைத்து
ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் இழிவாக்கத்தான் வேண்டுமா?
அரிதாரம் பூசிக்கொண்டு அலுவலகம் வருகிறோம் உண்மைதான்…
அழகை உரைக்க அல்ல
அழுததை மறைக்க…
வேலைவாய்ப்பில் சரிசம இட ஒதுக்கீடு பெறுவதல்ல
உண்மைச் சுதந்திரம்;
பணியிடத்தில் சுயமரியாதை பெறுவதே
உண்மைச் சுதந்திரம்…
குடும்ப சுமை தாங்கி அதையும் தாண்டி
வேலைக்குச் செல்லும் மகளிர் தேவதைகள்!
அவர்களை மதிக்கக்கூட வேண்டாம்;
இழிவு படுத்தாமல் இருக்கலாமே…
சி.இமாக்குலேட் ப்ரீத்தீ,
திண்டுக்கல் மாவட்டம்,

எழுதியவர் : preethi (24-Jun-21, 10:17 am)
சேர்த்தது : Tamilroja
பார்வை : 728

மேலே