சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் இந்த இரண்டும் பிரதானம்

சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் இந்த இரண்டும் பிரதானம். முதலாவதாக
பணம், இன்னொன்று ஆரோக்கியம். இவை இரண்டும் ஒருங்கே இணைந்து செயல்பட்டால்தான் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றில் குறை இருப்பினும், வாழ்வில் நிறை இருக்காது. மாறாக ,விரைவில் நரை வரும்.

பணம் சம்பாதிப்பது, பணம் பண்ணுவது, உங்கள் முயற்சியிலும் மற்றும் அறிவிலும்.
இது வாழ்வு என்னும் விளையாட்டு விளையாட பாஸ்போர்ட் போன்றதாகும்.
அடுத்தது, ஆரோக்கியம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும்தான். உடல் நலமுடன் இருப்பின் மனமும் நன்றாக இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மனம் நன்றாக இருந்து, உடல் நலம் இல்லை என்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே, உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது. மனக் கவலைகள் இருப்பவர்கள் பலர், நன்றாக உண்கின்றனர். ஆகவே, கவலை இருந்தால் பசி இருக்கது என்பது எப்போதும் உண்மை கிடையாது. சொல்லப் போனால் கவலை அதிகம் இருந்தால், அதிகமாகப் பசி எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உடல் நலம் இல்லையேல், பசி எடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆகவே உடல் நலத்தை நிச்சயமாக நன்கு பேணிக் காக்க வேண்டும்.

நான் இங்கே ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. ஆனால் புதிய முறையில் சொல்ல முயல்கிறேன். நான் சொல்வது உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்க பத்து வழிகள். இதோ கீழே தருகிறேன். நீங்கள் படித்து கொஞ்சமாவது பயனடைந்தால் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

1. இரவில் முடிந்த வரை சீக்கிரமே தூங்கி, காலை 5.30 -6.00 மணிவரை எழ பழகிக் கொள்ளுங்கள். முடிந்தவர்கள் 4.30-5.00 மணிக்குக் கூட எழலாம். ஒவ்வொருவர் சௌகரியத்திற்கு ஏற்ப.

2. காலையில் சீக்கிரம் எழுவதால், தனிமையில் அமைதியாக சிந்தனையோ, தியானமோ செய்ய இயலும். இதைச் செய்யலாம்.செய்தால் நிச்சயமாக பலன் உண்டு. நான் என் அனுபவத்தில் சொல்கிறேன்.

3. காலையில் நீங்கள் உள்ள இடத்திலசி எந்த அளவிற்கு தெரிகிறதோ, இயற்கையைக் கண்டு ரசிக்கலாம். சூரிய உதயம் மிக அருமையான காட்சி. மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். தவிர, மரம் செடி கொடிகள், மலர்கள், பறவைகள் இவற்றை கண்டு களிக்கலாம். இவை யாவுமே மனதுக்கு சாந்தியையும் நிம்மதியையும் அளிக்கும். காலை தென்றல் காற்று மிகவும் இதமாக இருக்கும். கொஞ்சம் முன்பே எழுந்தால் இவை அனைத்தையும் ரசிக்க முடியும்.

4. தேகப் பயிற்சி அரைமணி செய்யுங்கள் . இல்லையெனில் காலாற அரை மணி விறுவிறுவென நடப்பது. இதனால் உடல் லேசாகி, சக்தியும் பெறுகிறது. கூடவே உள்ளமும் சுறுசுறுப்படையும்.

5. காலைச் சிற்றுண்டி ,நாளின் மிக முக்கியமான உணவாகும் என்பதால் அதில் திணைகள், பயிர்கள், உலர்ந்த பழங்கள் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேறு விதமாகக் கூற வேண்டுமானால், சமைத்த சிற்றுண்டியை முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள், உங்களுக்கு பிடித்த சிற்றுண்டியை சாப்பிடுங்கள். வாய்க்கு ருசியும் தேவைதானே.

6. மதிய உணவில் பச்சைக் காய்கறிகளும், கீரைகளுயும் அதிகம் சேருங்கள். அலுவலகக் கேன்டினில் தான் சாப்பாடு என்றால் நீங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் சாப்பிடும் அளவு உங்கள் கையில் தான் இருக்கிறது. மிகவும் வயிறு புடைக்க சாப்பிடாமல், வயிறு நிறைய உண்ணுங்கள். சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சாப்பாடும் அரை மணி முன்பு ஒரு கிளாஸ், சாப்பிட்ட பின் 40-45 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடித்தால் அது உடலுக்கு மிகவும் நன்மை தரும் மற்றும் வெத வெத என நீரை பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது எனவும் நான் அறிகிறேன்.

7. மாலையில் நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள். இடையில் காபி, தேநீர் அருந்துங்கள். மகிழுங்கள். நினைவில் கொள்ள வேண்டியது, சாப்பிடும் பலகாரங்களின் தரம் மற்றும் அளவு

8. இரவு அதிக நேரம் செய்யாமல், 9 மணிக்குள் இரவு உணவை எடுக்க பழகிக் கொள்ளுங்கள். பாதி வயிறு கடினம் என்பதால் முக்கால் வயிற்றுக்கு உண்ணுங்கள். முடிந்த வரை இரவில் வயிற்றை முழுதுமாக நிரப்ப வேண்டாம். உணவுக்குப் பின் அரைமணி கழித்து பழங்கள் உண்ணுங்கள். எண்ணெய், மசாலா அதிகம் இல்லாமல் இரவு உணவு அமைந்தால் ரொம்ப நல்லது. வாரத்தில் இரண்டு நாட்கள் உங்களுக்கு இஷ்டமான டின்னர் சாப்பிடுங்க.

9. 20 நிமிடம், அரை மணி அப்படியே காலாற மெள்ள நடந்து செல்லுங்கள். வேகம் தேவையே இல்லை. இதைச் செய்தால் தூக்கம் நன்றாக வரும். அதனால் தான் சொல்கிறேனே தவிர, இரவிலும் உங்களை தேகப்பயிற்சி செய்யச் சொல்வதற்கு அல்ல. படுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் ஏதேனும் நல்ல சிந்தனையில் இருக்கலாம் அல்லது குடும்பத்தாருடன் அளவளாவலாம். மற்ற காரியங்களை தவிர்ப்பது நல்லது. வார கடைசியில் ஓரிரு நாட்கள் இரவில் திரைப்படமோ வேறு உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளையோ தாராளமாக பாருங்கள்.

10. இரவு சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரத்திற்கு பிறகு உறங்க செல்லுங்கள். படுக்கும் முன் வீட்டில் உள்ளவரிடம் புன்சிரிப்புடன் இரவு வணக்கமோ, good nightஓ சொல்லிவிட்டு, படுக்கையில் அமர்ந்து ஒரு சில நிமிடங்கள்உங்களுக்கு உதவியவர்களுக்கு மனமார நன்றி சொல்லி விட்டு, உலகின் நல்வாழ்வுக்காக பிரார்த்தித்த வண்ணம், அமைதியுடன் படுத்து உறங்குங்கள். தூக்க தேவதை உங்களை சுகமாக அணைத்துக் கொள்வாள்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Jun-21, 4:24 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே