உன் வெற்றி நிச்சயம் , சக்கை போடு போடு

கிட்டதட்ட எல்லா மனிதர்களுமே, சராசரி மனிதர்கள் தான்! எல்லோருக்கும் பசி உண்டு, ருசி உண்டு. மகிழ்ச்சி உண்டு. கவலை உண்டு. அநேகமாக அனைவரும் நகைச்சுவையை விரும்புகின்றனர். ஆனால் அவர்களைப் பார்த்து, மற்றவர் சிரிக்கையில் வேதனையும் கவலையும் கொள்கின்றனர். கத்தியின் இரு கூறிய முனைகள் போன்றது இந்த, இரு வித சிரிப்புகள். ஒரு சிரிப்பு, உற்சாகத்தையும் சக்தியையும் கூட்டும். கவலையையும குறைக்கும். இன்னொரு சிரிப்போ, உள்ள சக்தியையும் உற்சாகத்தையும் கழிக்கும். தன்னையே தாழ்த்திப் பேசி, மனம் குமுறும். எவன் ஒருவன், பிறர் சிரிப்புக்கும், கேலிக்கும் பலியாகாமல் இருக்கிறானோ, அவன் வாழ்க்கையில், நினைத்தால், நிச்சயம் ஏதாவது சாதிப்பான். ஏனெனில் அவன் கவனம், பிறர் தன்னைப் பழிப்பதில், இகழ்வதில் இல்லை. மாறாக அவன் கவனம் அவன் பிழைப்பிலும், உழைப்பிலும், சிந்தனையிலும் இருக்கிறது. இத்தகைய மனிதர்கள் எண்ணிக்கையில் குறைந்த ஒரு பகுதி தான். நல்ல ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், மகாத்மா காந்தி; அவர் எதைச் செய்தாலும், அவரின் திருப்திக்காகவும், கொள்கைகளுக்காகவும் செய்தாரே தவிர, மற்றவர் என்ன நினைப்பாரோ என்றோ, மற்றவரை திருப்தி படுத்துவதற்காகவோ, மற்றவரை தன்னிடம் ஈர்க்கவோ இல்லை. இவர், உலகம் கொடுத்த மாபெரும் சில மனிதர்களில் ஒருவராக இன்றும், என்றும் திகழ்கிறார். இருந்தாலும் இவர் ஒரு சாதாரண மனிதர்தான். ஏனெனில் இவரிடமும் குறைகள் இருந்தது. ஆனால் குட்டி கழித்து பார்க்கையில் இவர் நல்ல குணங்களே அதிகம். எனவேதான் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார்.

மக்களின் வாயை பூட்டால் பூட்ட முடியாது. தண்ணீர் குழாய் திறக்குமோ, இல்லையோ, மக்களின் வாய் எப்போதும் திறந்த வண்ணம் தான் இருக்கும். ஏன், சில பேர் வாய் திறந்த படியே கூட, தூங்குகிறார்கள். இக்இட்டுரையின் நோக்கம், நாம் ஒவ்வொருவரும், நன்கு யோசித்து, ஆலோசித்து, தகுந்த முடிவை எடுக்க வேண்டும். அதன் பின், வைத்த காலைப் பின் வாங்காமல், எண்ணியதைச் செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். செய்த பின், எந்த அளவுக்கு அது வெற்றியையோ, தோல்வியையோ தந்தது என்பதை தீவிமாக அலசி ஆராய்ந்து, பின்னர் செய்யும் முயற்சிகளில், தேவையான முதிர்ச்சியும், பட்டறிவும் கலந்து செவ்வனே செய்ய வேண்டும். நாம் விழிப்புணர்வுடன், தன்னுணர்வுடன் எடுக்கும் முடிவுகள், பொதுவாக, நமக்கு நன்மை பயக்குவதாகத் தான் இருக்கும்.

மற்றவர்கள் கூறுவதைக் காதுகளில் போடு!
தேவையற்ற விமர்சனமா?குப்பையில் போடு
மனசாட்சியை கேட்டு, நிமிர்ந்து நடை போடு!
உன் வெற்றி நிச்சயம் , சக்கை போடு போடு!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-21, 11:41 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 120

மேலே