போர்க் கொடி ஏந்தாத வனவிலங்குகள்

காட்டை அழிப்பின் மறையும் வனவிலங்கு!
மறைந்தால் நம் மகிழ்ச்சிக்கு கைவிலங்கு!

ஒரு நாட்டின் முன்னேற்றம் நவீனமயத்தால் மட்டும் ஏற்படுவதில்லை. அதற்கு இயற்கையின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். சுத்தமான காற்று, போதிய பருவ மழை, மரங்கள், புதர்கள் மற்றும் நீர்வளாகங்களையும், வனவிலங்குகளையும் தன்னுள் அடக்கிய காடுகள், ஒரு நாட்டின் வளமான சுற்றுப்புற சூழ்நிலையை காத்து, சுற்றப்புற சூழல் சமநிலையை( ecological balance) காக்கிறது. இதனால் தட்பவெப்ப நிலையில் தீமையின் தாக்கம் தரும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், சீதோஷ்ண நிலை சீராக இருக்கும். காடுகள், அதனைச் சார்ந்த வனவிலங்குகள் இவைகளின் பங்களிப்பால் சுற்றுப்புற சூழல் சமநிலை சாத்தியமாகிறது. இன்றைய சூழ்நிலையில், பல நகரங்களும் ஊர்களும் நவீனமயம் ஆக்கப் படுவதால், காடுகள் அதிக எண்ணிக்கையில் அழிக்கப் பட்டு வருகிறது. உலகில் மிகஅதிக அளவில் காடுகள் நிறைந்த ஆப்ரிக்கா நாட்டில் இதுவரை, கிட்டதட்ட மூன்று லட்சம் சதுரஹெக்டேர் பரப்புள்ள காடுகள், செயற்கை முன்னேற்றத்திற்காக அழிக்கப் பட்டு விட்டது. நமது நாட்டிலும் கூட, வளர்ச்சி, தொழில் மயம் போன்ற காரணங்களினால் அதிக எண்ணிக்கையில் காடுகள் அழிக்கப் பட்டு வருகின்றது. இந்த செய்கையினால் இரண்டு வேதனை தரும் விளைவுகள் ஏற்படுகிறது. 1) காடுகளின் பரப்பளவு குறைகிறது 2) வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் சுற்றுப்புற சூழ்நிலையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இவ்விளைவுகளால் ஒவ்வொரு நாட்டிலும் சீதோஷ்ணநிலையில் விபரீத மாற்றங்கள் நிகழ்கிறது.

வனவிலங்குகள் வளமான, நலமான முறையில் காடுகளில் வாழ்வது மிகவும் முக்கியம். காடுகள் அழிக்கப் படும்போது இந்த விலங்குகள் நீரையும் உணவையும் தேடி அருகில் உள்ள கிராமப் புற பகுதிகளுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்குகிறது. இதனால் மனிதர்கள் வனவிலங்குகளை தாக்குகின்றனர்.

சிலர் நல்ல விலை போகும் புலித்தோல் மற்றும் மான் தோலுக்காக , புலிகளையும் மான்களையும் கொல்கின்றனர். இன்னும் சிலர், தந்தத்தின் பெருமானம் அதிகம் என்பதால் யானைகளைக் கொல்கின்றனர். மேலும், அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வனவிலங்குகள் கைப்பற்றப் பட்டு வனவியல் பூங்காவில் தள்ளப்படுகின்றன. ஏன், பலர் வேட்டையாடுதலை ஒரு கேளிக்கையாகக் கொண்டு, முயல்கள், மான்கள் முதல் பெரிய புலிகள், சிறுத்தை, சிங்கம் வரை அநேக விலங்குகளை சுட்டுக் கொல்கின்றனர்.

சந்தனக் கடத்தலில் பெரும் புள்ளியான வீரப்பன் அவன் ஆட்களுடன் சேர்ந்து எவ்வளவு சந்தனக் காடுகளை அழித்தான்? தந்தகங்களை விற்று சம்பாதிக்க எவ்வளவு யானைகளை அநியாயமாகக் கொன்று குவித்தான்? சில மனிதர்கள் விலங்குகளையும் விட கொடியவர்கள் என்பதை மேற்கூறிய உதாரணங்கள் விளக்குகிறது.

காடுகளும் விலங்குகளும் ஒரு நாட்டின் சீரான வளர்ச்சிக்கும், தட்பவெப்ப நிலையைப் பாதுகாக்கவும் மிகவும் முக்கியமானவை. விரிந்து பரவும் நகரங்கள், புதிதாக உருவாகும் நகரங்கள், அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் போன்ற காரணங்களினால் காடுகள் பெரிய அளவில் அழிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலை நம் நாட்டில் மட்டும் அல்ல. அநேகமாக அனைத்து நாடுகளிலும் நடை பெற்று வரும் சம்பவமாகும். உலக மக்கள் தொகையில் 14 சதவிகிதம் இந்தியாவில் தான். ஆனால் இந்தியாவில் உள்ள இடம் மொத்த உலக பரப்பளவில் 2.4 சதவிகிதம் மட்டுமே. எனவே ஏற்கெனவே குறைவாக உள்ள திறந்த வெளி நிலங்கள் மற்றும் காடுகள் மேற்கூறிய காரணங்களினால் வேகமாக குறைந்து வருகிறது.

பாவம், என்ன செய்யும் இந்த வாயில்லா வனவிலங்குகள்? காட்டை அழித்தால் அவைகள் எங்கே செல்லும்? அவைகள் உயிர் வாழத் தேவையான உணவு, நீர், இருக்க இடம் யார் தருவார்கள்? அவைகளின் இடத்தை அழித்து நாம் ஆக்கிரமித்துக் கொண்டால் இந்த வாயில்லா விலங்குகள் என்ன செய்யும், எங்கே செல்லும்?

இப்படிப் பட்ட சூழ்நிலையில் மனித குலம் தார்மீக பொறுப்பேற்று, துன்பத்திற்குள்ளான வனவிலங்குகளுக்கு போதிய காடுகளையும் நீர்நிலைகளையும் அமைத்துத் தரவேண்டும். இல்லையேல் இவ்விலங்குகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவைகளை பராமரிக்க வேண்டும். யார் சிங்கங்களை வளர்க்க வேண்டும், யார் புலிகளையும் சிறுத்தைகளையும் வளர்க்க வேண்டும் என்பதை , பொருளாதார அடிப்படையில் அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும். இவை சாத்தியமாகுமா?

வனவிலங்குகளை அவைகள் ஏற்கெனவே வசித்து வரும் காடுகளில் வாழ்வதற்கு வகை செய்தால், அது தானே சுலபமான வழியாக இருக்க முடியும்? ஒரு நாடு வளமுடன் இருக்க அடர்த்தியான காடுகள் அவசியம். மரங்கள் தழைத்து ஓங்கினால் தான் காடுகள் பிழைக்க முடியும். மரங்களும், செடிகளும், கொடிகளும் எவ்வளவு அதிகமாக அடர்த்தியாக வளர்கிறதோ, அந்த அளவுக்கு தாவரங்கள் மூலம் சுற்றுப்புறசூழ்நிலையில் ஆக்ஸிஜன் அளவும் அதிகமாகும். அதனால் பூமியின் ஈரப்பசை அதிகமாகும். காடுகளில் மழை அதிகம்,ஏன் என்றால் அங்குள்ள மரங்கள், செடி கொடிகள் தான். இவை அனைத்தும் சேர்ந்து சிறப்பாக அமைந்திடில் அங்கு வனவிலங்குகள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

கடும் வெயில் பட்டு, உடம்பு சுட்டு மனிதன் அவதிப் படக் கூடாது!
ஆனால், மரங்கள் வெட்டப்பட்டு, தோட்டாவால் சுடப்பட்டு, விலங்குகள் சாகலாம்!
என்ன ஒரு கோட்பாடு! மனித சமுதாயம் வெட்கி தலை குனிய வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் கிட்டதட்ட 543 முதுகெலிம்பிகள் மறைந்து விட்டது.
சுமத்திரை காண்டாமிருகம் மற்றும் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இப்போது உலகில் இல்லை. இந்திய சிறுத்தை தற்போது இந்தியாவில் மறைந்து விட்டது. சில அபூர்வமான நாய் ஓநாய் வகைகள், பல வகையான மீன் மற்றும் தவளை வகைகளும் இப்போது கண்ணில் படாமல் போய்விட்டது.

மனிதன் எப்போது பிற உயிர்களின் மீது அன்பும் கருணையும் இரக்கமும் காட்டுகிறானோ அப்போது தான் வனவிலங்குகள் அவைகளின் இயற்கையான சூழ்நிலையில் நலமாக உயிர் வாழ முடியும். இல்லையேல், மனிதனின் பேராசையும் தன்னலமும் அதிக அளவில் காடுகளை அழிக்கக் காரணமாகி, அதன் மூலம் பல வனவிலங்குகளை அழித்து விடும்.

நாம் நலமுடன் வாழவும் பின் வரும் நம் சந்ததியினர் வாழவும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? இதில் கொஞ்சமாவது கருணையை நாம் வனவிலங்குகளுக்கும் காட்ட வேண்டாமா? காடுகளும் , வனவிலங்குகளும் இணந்து இருந்தால் தான் சுற்றுச்சூழல் சமநிலை இருக்க முடியும். இந்த சமநிலை இருந்தால் தான் தட்ப வெப்ப நிலை பாதிக்கப் படாமல் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பொய்க்காமல் மழை பெய்யும். அன்டார்டிக்காவில் பனிக் கட்டிகள் உருகாமல் இருக்கும். பல நாடுகளில் வெப்பம் விபரீதமாக அதிகரிக்காமல் இருக்கும். இதன் மூலம் பல மிருகங்களும், பட்சிகளும் காப்பாற்றப் படும்.

முன்னேற்றம் வேண்டும் ,தொழிற்சாலைகள் வேண்டும், நகரங்கள் வளர வேண்டும். எல்லாமே சரிதான். ஆனால் காடுகளில் நுழைந்து, மரங்களைக் களைந்து, காடுகளை அழித்து வனவிலங்குகளை வாழ முடியாமல் கொன்றால், அது எந்த விதத்தில் முன்னேற்றமாகும்? வனவிலங்குகள் வாழ்ந்துவரும் காடுகளை அழிக்காமல் இருந்தாலே, மிகப் பெரிய அளவில் வனவிலங்குகள் பாதுகாக்கப் படும்.


இந்தியாவில் 1972ஆம் ஆண்டு
"வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம்" அமலுக்கு வந்தது. பின்னர், 1983 ஆண்டு தொடங்கப் பட்ட "தேசீய வனவிலங்கு வாழ்க்கை செயல்பாடு திட்டம்" வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு மேலும் வழிவகை செய்தது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச வனவிலங்குள் தினம் (செப்டம்பர் 4ஆம் தேதி) அனுசரிக்கப் படுகிறது. அன்னாளில் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கமும், காடுகள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த முக்கிய திட்டங்களை, இந்த நாளில் வெளியிட வேண்டும். உணவின்றி, நீரின்றி வாடி மடிந்து போகும் வனவிலங்குகளை பற்றிய புள்ளி விவரங்களை நாடளவில், மாநில வாரியாக, மத்திய அரசு பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். அரசு எவ்வளவு சிறப்பான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தாலும், ஒவ்வொரு தனி மனிதனின் மன உறுதி, ஒழுங்கு, கட்டுப் பாடு, மனித நேயம் இவைகள் ஒன்று பட சேர்ந்து கூடி உழைத்தால் தான், காடுகளுக்கும் வனவிலங்குகளுக்கும், ஏன் நமக்கும் கூட, நல்ல காலம் பிறக்கும்.

மரங்களை வெட்ட வேண்டாம். விட்டு விடுவோம்.!
காடுகளை அழிக்க வேண்டாம். வளர விடுவோம்!
வனவிலங்குகளை திண்டாட விடாமல் காப்போம்!
காசுக்காக விலங்குகளைக் கொல்ல வேண்டாம்!
கேளிக்கைக்கு விலங்குகளை அழிக்க வேண்டாம்!
அனைவரும் மேற்கூறிய சபதங்களை எடுப்போம்!

நம் செய்கைகளால் மனித குலத்தின் உயரிய பெருமையை இனி வரவிருக்கும் சமுதாயங்களுக்கும் பறை சாற்றுவோம்!

இயற்கைத் துணை இன்றி எதுவும் இல்லை!
காடுகள் விலங்குகளின்றி நன்மை இல்லை!




ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Jun-21, 4:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 134

சிறந்த கட்டுரைகள்

மேலே