தகவோடு உயர்நீதி ஆற்றிவரின் ஆர்ந்து வருமே அறம் - தகவு, தருமதீபிகை 851

நேரிசை வெண்பா

உன்னை உயர்த்தி உலகிலொரு மன்னவனாய்
முன்னவன் பெய்த முதன்மையை - உன்னிநீ
ஓர்ந்து தகவோ(டு) உயர்நீதி ஆற்றிவரின்
ஆர்ந்து வருமே அறம்! 851

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனித இனத்துள் உன்னை ஒரு மன்னன் என மகிமையுடன் உயர்த்தி இறைவன் இனிது வைத்திருக்கிறான்; அந்த உண்மையை உணர்ந்து உரிய தகுதியோடு ஒழுகி உயர வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்; தகவறிந்து நடப்பது தகுந்த தருமமாய் வருகின்றது.

நன்றியறிவு மனிதனுக்கு நலம் பல தருகின்றது. நெஞ்சம் கோடாமல் நேர்மையோடு எதையும் சீர்தூக்கி நோக்கும் நீர்மையாளரே எவ்வழியும் செம்மையுடையராய்ச் சீர்மையுடன் சிறந்து திகழ்கின்றார். தமக்கு வாய்த்த மேன்மைகளைத் தக்க வகையில் பயன்படுத்தி வருமளவு அவர் தகவுடையர் ஆகின்றார், செம்மை, சீர்மை என்பன தகவின் தன்மைகளாம்.

தனது தலைமையான நிலைமையைத் தகுதியாய் அறிந்த அளவுதான் அரசன் உரிமையோடு கடமைகளைச் செய்துயர்ந்து வருகிறான். தன் பொறுப்பை உண்மையாய் உணர்ந்தவனே திண்மையாய்ச் செயலாற்றிச் சிறப்படைய நேர்கின்றான். உற்ற உணர்வு உயர்ந்த வெற்றியை உறுதியாய் விளைத்தருளுகிறது.

மனித இனம் மன்னனை மகிமையாய் மதித்து வருகிறது; அந்த மதிப்புக்கு உரிய மாண்பை யாண்டும் குன்றாமல் எவ்வழியும் அவன் இனிது பேணி வரவேண்டும். உரிய நீர்மை தழுவி உண்மையாய் நடந்துவரின் அரிய சீர்மை பெருகி வருகிறது.

நாடும் மக்களும் நலம் பல பெற நாடிச் செய்யின் பீடும் பெருமையும் கூடவே கூடி வருகின்றன. ஓர்ந்து செய்யும் கருமங்கள் உயர்ந்த தருமங்களாய் சேர்ந்து நிலவுகின்றன.

நாட்டுக்கு ஆக்கத்தை ஆக்கி மாந்தரைக் காத்தருளுவது கடமையாய்க் கொண்டுள்ளமையால் வேந்தனுக்குக் காவலன் என்று ஒருபெயர் வியனாய் நேர்ந்தது. அல்லல் யாதும் நேராமல் குடிசனங்களை எவ்வழியும் செவ்வையாய் ஆதரித்து வருபவனே நல்ல அரசன் ஆகின்றான். ஆளுபவன் உலக ஊழியனாகின்றான்.

A good king is a public servant. - Ben Jonson

நல்ல அரசன் என்பவன் பொதுசன ஊழியனே என்னும் இது இங்கே அறியவுரியது. உலகமக்களுக்கு உழைத்து வருமளவே மன்னனது தலைமை மகிமையாய் நிலைத்து வருகிறது.

ஆதிமுதல்வன் ஒருவனே தன்னிகர் இல்லாத் தலைவன். அவனுடைய அருள் வழியிலே உலகத் தலைமைகள் தோன்றி வருகின்றன. இந்த நிலைமையை எண்ணி எவ்வழியும் கண்ணியமாய் ஒழுகுபவர் புண்ணிய வினைகளில் பொலிந்து திகழ்கின்றார்.

மைந்தர்களைத் தந்தை காப்பது போல் மாந்தர்களை வேந்தன் காக்கின்றான். ஒரு நாட்டுக்குத் தந்தை, தாய், குரு, தெய்வமாக அரசன் சார்ந்து நிற்கிறான். தேக பிதா இருந்தாலும் தேச பிதா சரியாயில்லையானால் அந்த மனித வாழ்வு பரிதாபமாம். ஆகவே மனித சாதியின் இனிய தந்தையாய் அரசன் மருவியுள்ளமை அறியலாகும். ஆதரவு புரிபவன் தந்தை என நேர்ந்தான்.

Whoever is king, is also the father of his country. - Congreve

எவன் அரசனோ தன் தேசத்துக்கு அவன் தந்தையாகவும் இருக்கிறான் என்னும் இது இங்கே நன்கு சிந்திக்கவுரியது.

தேச மக்கள் சுகமாய் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து வரவே தன்னைத் தலைவனாக உயர்த்தி ஈசன் நியமித்திருக்கிறான் என்னும் நினைவு மன்னனிடம் மன்னியிருக்குமானால் அவன் யாண்டும் மகிமையுடையவனாய் விளங்கி நன்னயங்கள் புரிந்து நிற்பான்.

அரிய பல நீர்மைகள் அமைந்த போதுதான் மனிதன் பெரியவனாகிறான். உயர்ந்த தலைவனிடம் இயல்பாகவே சிறந்த குணங்கள் பல நிறைத்து தேசம் நலமுற வருகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கைப்புரை யேற்றுப் பொய்ப்புக ழேலாக்
..காதின னருள்பொழி கண்ணன்
தப்புரை வழங்கா நாவினன் புவியோர்
..தாசன்றா னெனவுணர் மனத்தன்
செப்பயன் மடவார் காணரு முரத்தன்
..றிருந்தலர் காணரும் புறத்தன்
எப்பொழு தினுஞ்சென் (றி)யாருங்காண் முகத்தன்
..ஈசனன் புடையவன் இறையே. 9

- அரசியல்பு, நீதி நூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை

உண்மையான ஒரு நல்ல அரசன் எப்படி இருப்பான் என்பதை இது வரைந்து காட்டியுள்ளது. சிறப்பு நிலைகளை உய்த்து உணர்ந்து கொள்ள காதினன், கண்ணன், நாவினன், மனத்தன், உப கீதன், புறத்தன், முகத்தன், என உறுப்புக்களைக் குறித்தது.

அறிஞர் கூறுகிற உறுதிமொழிகளுக்குச் செவி சாய்த்து, வீண்புகழ்ச்சிகளை விரும்பாமல், கருணை தோய்ந்து, இன்சொல் வாய்ந்து, கடமை ஓர்ந்து, பிறர்மனை நயவாமல், எதிரிக்கு இடங் கொடாமல், எவருக்கும் எளிய காட்சி புரிந்து, தெய்வ சிந்தனையாளனாய் இருப்பவனே தேசம் ஆள உரியவன் எனப்படும். பெரிய அரசன் என்று கருதிச் செருக்காமல் சீவர்களுக்கு இதம் செய்யும்படி தேவன் அனுப்பிய ஒரு உலக ஆழியன் எனத் தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் என்பது புவியோர் தாசன் என்றதனால் தெரிய வந்தது தாழும் தகவு ஆளும் வலிமையை அருளுகிறது.

தனக்கு வாய்த்துள்ள பதவியின் நிலையை உணர்ந்து தன் கடமையைச் செவ்வையாய்ச் செய்து வருபவனே எவ்வழியும் சிறந்த அரசனாய் உயர்ந்து திகழ்கின்றான். சேவை செய்து வரும் அளவு தேவனது.அருளை அவன் அடைந்து கொள்கின்றான்.

அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்றிசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்,
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி,
பொய்யா நல்இசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் - மதுரைக்காஞ்சி

அரிய பொருள்களை ஆக்கி நாட்டை வளப்படுத்திக் குடிகளை உயர்த்தி யாண்டும் புகழ்ஒளி பாப்பிச் சூரிய சந்திரர்கள் போல் பாண்டிய மன்னன் ஈண்டு விளங்கியிருந்த நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. இன்னவாறு நீதி பரிபாலனம் செய்து வருபவரே மன்னருள் மன்னராய் மகிமை பெற்று வருகின்றார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-21, 4:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே