பொதுநலத்தில் ஒரு சுயநலம்

பொதுநலத்தில் ஒரு சுயநலம் .

சுயநலவாதிகளாய் சுருங்கிப்போன எம் மக்களை இந்த கொரோனா எனும் பெரும் தொற்று மாற்றும் என்று கொண்டிருந்த எண்ணம் எல்லாம் ஏமாற்றம் தான் . சூறாவளியாய் சுழன்று அடிக்கும் இப்பெரும் தொற்று இன்னும் சுயநலமிகளாய் மாற்றியது தான் கொடுமையின் உச்சம் .

பல நல்ல தியாக உள்ளங்களும் இந்த உலகில் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை தான் . அவர்களால் தான் மிச்சம் மீதி இருக்கும் எம்மக்களின் உயிர்கள் காப்பாற்ற படுகின்றன . அவர்கள் எல்லாம் ஆகச்சிறந்த கடவுளுக்கு சமமானவர்கள் , அவர்கள் பாதம் தொழ எம்மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களே . இந்த கட்டுரை அவர்கள் பற்றி அல்ல . அரக்கர்களாய் மாறி மக்களின் மனங்களை நசுக்கும் , இந்த பெருந்தொற்றை சாதகமாக்கி சாமானிய மக்களின் மீது சட்டை சுழற்றும் சுயநலமிகளுக்காக மட்டுமே .

மக்களின் பயம் மற்றும் கொரோனாவின் தாக்கம் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கி கொண்டு பணம் பண்ணும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் எல்லாம் தம்மை தியாகத்தின் திருஉருவமாய் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் காலம் ஆனது தான் இந்த பெருந்தொற்று காலத்தின் மிகப்பெரும் வியாபாரம் . ஐந்து நாள் பேக்கெஜ் , ஏழு நாள் பேக்கேஜ் , பத்து நாள் பேக்கெஜ் என சுற்றுலா செல்பவர்களிடம் வசூலிப்பது எந்த விதத்தில் சமூகநலம் ஆகும் என தெரியவில்லை. குறைந்தது பத்தாயிரம் முதல் அதிகபட்சமாக இருபத்தியந்தாயிரம் வரை வசூல் செய்யும் கொடுமைக்கு பெயர் தான் பொதுநலமா இல்லை தியாகமா? என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் எல்லோரையும் குறை சொல்லவில்லைஆனால் பெரும்பான்மை அப்படி இருப்பது தான் நெஞ்சை உறைய வைக்கும் கொடுமை.

விடுதிகள் எல்லாம் கொரோனா தடுப்பு முகாம் ஆன போது இதில் இப்படி ஒரு வியாபாரம் இருப்பதாய் நான் உணரவில்லை . ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் ஒரு விடுதியை எடுத்து அதனில் சேர்க்கப்படும் ஒரு நோயாளியிடம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முதல் அதிகபட்சமாக இருபத்தியந்தாயிரம் வரை வசூல் செய்யும் கொடுமைக்கு கிடைக்கும் பாவத்தை எந்த காசியில் கரைக்கும் இந்த சுயநல கூட்டம் ?.

கொரோனா பெருந்தொற்று வாழ்வின் உண்மையை உரக்க சொல்லியும் , இந்த மக்களின் எரியும் வீட்டில் விளக்கு பற்ற வைக்கும் குணம் மாறாதது ஏனோ தெரியவில்லை . நிரந்தரம் இல்லாத வாழ்க்கையின் உண்மையை உணர்ந்த பின்பும் உறுத்தல் இல்லாமல் இந்த நிலையை காசு சம்பாரிக்கும் காலமாய் கவனம் கொள்ளும் கொடுமை ஏனோ தெரியவில்லை . கோடி கோடியாய் காசு வைத்திருக்கும் ஆகப்பெரும் பணக்காரர்கள் எல்லாம் அனாதை பிணம் ஆனதை கண்டும் இந்த கொடூரர்களின் மனம் மாற்றம் கொள்ளாததும் ஏனோ தெரியவில்லை .

இந்த பாவத்தின் பலன் அவர் தம் சந்ததியை சேராது என்று இறுமாப்பு கொண்டு இரும்பு இதயம் கொண்டிட்ட எல்லோரும் இறை முன்னால் பதில் சொல்லும் காலம் ஒன்று உண்டு என்று உணர்க . உங்களின் உள்ளம் தொட்டு கேட்டு உங்களை நீங்களே மாற்றி கொள்ளுங்கள் உலகம் கண்டிப்பாய் உங்களை அதற்கான உயரம் கொண்டு சேர்க்கும். உங்கள் நலம் , உங்கள் குடும்பத்தின் நலம் முக்கியம் தான் ஆனால் அது போலவே உங்களை சுற்றி இருக்கும் மக்களின் நலம் மற்றும் அவர் தம் கும்பத்தின் நலமும் முக்கியம் என்று உணர்க. மக்களின் நலத்தை மனப்பூர்வமாக ஏற்று அவர் தம் நலன் காக்க உழைப்பதே பொதுநலம் , பொதுநலம் என்று சொல்லி உங்கள் சட்டைப்பையை நிரப்புவது அல்ல பொது நலம் . மருத்துவம் வியாபாரம் ஆகி போய் வெகு காலம் ஆகிவிட்டது , அதை குறை சொல்லவில்லை ஆனால் அதிகலாபம் ஈட்டும் தொழிலைலாய் மாறிப்போனது தான் இந்த கலிகாலத்தின் மிகப்பெரும் இகழ்ச்சி.

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் " என்பது ஆன்றோர் வாக்கு , ஆனால் ஏழையிடம் சிரிப்பே இல்லாமல் ஆக்கிடின் எங்கு இருந்து இறைவனை காண போகிறோம் என்று தெரியவில்லை . இன்னுயிர் காக்கும் சேவை செய்யும் ஒவ்வெருவரும் இறைவனுக்கு நிகரானவர்களே.

உள்ளூர் , உற்றார் உறவினர்களுக்கு உதவிடாத ஆகப்பெரும் பணக்காரர்கள் எல்லாம் பொது நிவாரண நிதி அளிக்கும் போது எல்லாம் எனக்கு பெரும் நெருடலாய் இருப்பது உண்டு . எதற்கு இந்த சுயவிளம்பரம் , ஏன் இவர்கள் எல்லாம் தான் சார்ந்த ஊர் மற்றும் தனக்காக உழைக்கும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாது அரசுக்கு நிதி என்றவுடன் கோடி கணக்கில் கொடுப்பது ஏதோ சுயநலத்திற்க்காக என்பதாய் எனக்கு பல நேரங்களில் தோன்றியது உண்டு . இவர்களை பார்க்கும் பொது எல்லாம் " படிப்பது இராமாயணம் ஆனால் இடிப்பது பெருமாள் கோவில் " என்ற பழமொழியே ஞாபகம் வருவதுண்டு. ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியாமல் கொடுப்பதே மாபெரும் ஈகை என்பதை மறந்து சுயவிளம்பரத்திற்க்காகவும் , தன் சுயநலம் குறித்தும் செய்யும் எந்த உதவியும் உங்கள் புண்ணிய கணக்கில் சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுயநலமிகளாய் இருங்கள் தவறில்லை ஆனால் பொதுநலம் என கூறி உங்கள் சுயநலத்திற்க்காகவும் , சுயலாபத்திற்க்காகவும் எதையும் செய்யாதீர்கள்.

உங்களின் தவறுகள் எல்லாம் உங்களை சார்ந்த உங்கள் குடும்பத்தார் சுமக்க நேரிடும் என்று தெளிவு கொள்ளுங்கள் . கடவுள் இல்லை என்று எண்ணுபவர்களுக்கு எல்லாம் இயற்க்கை தன் இருப்பை இது போன்ற பெருந்தொற்று மூலம் இந்த உலகிற்கு உணர்த்தி கொண்டுதான் இருக்கிறது. உத்தரவாதம் அற்ற இந்த உலக வாழ்வில் உங்கள் இருப்பை உணர்ந்து உள்ள பூர்வமாக உங்களால் இயன்றதை செய்யுங்கள் எந்தவித சுயநலமும் இல்லாத பொதுநலமாய் ...

நன்றி

இவன்
ம கோ ( மகேஸ்வரன்.கோ )
+91 -98438 12650
கோவை - 35

எழுதியவர் : மகேஸ்வரன். கோ ( மகோ) (29-Jun-21, 3:13 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 419

மேலே