கண்போல் அரசுக்குக் காட்சி புரிந்தமைச்சு நெறியே நிற்பன் உயர்ந்து - யூகி, தருமதீபிகை 841

நேரிசை வெண்பா

கண்போல் அரசுக்குக் காட்சி புரிந்தமைச்சு
மண்பால் அமைந்து மதிசுரந்து - நண்பால்
அரிய வினைகளை ஆற்றி நெறியே
உரியவனாய் நிற்பன் உயர்ந்து! 841

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அமைச்சன் அரசனுக்குக் கண்போல் அமைந்து காட்சிகள் புரிந்து அறிவு நலங்கள் சுரந்து உரிமையோடு அரிய கருமங்களை ஆக்கியருளி உலகிற்கு உயர்ந்த நன்மைகளை உதவி நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர். மந்திரியின் மாண்புகள் சிந்தனை செய்ய வந்தன;

ஒரு நிலமண்டலத்தை நெறிமுறையே பாதுகாத்து ஆண்டு வருபவன் அரசன் என அமைந்தான். அவனுக்கு எவ்வழியும் உறுதித் துணையாய் நின்று அறிவு நலங்கள் கூறி ஆதரவு புரிந்து நீதி தெரிந்து நெறியே வருபவன் அமைச்சன் என வந்தான்

மதிநலம் அமைந்து விதிமுறை தெளிந்து ஆட்சி நிலைக்குரிய துறைகளை உணர்ந்து மன்னனுக்கு அண்மையில் அமர்ந்து உண்மையாக உதவி புரிபவன் என்னும் குறிப்புகளை அமைச்சன் என்னும் பெயர் உணர்த்தி நிற்கிறது. அரசனுக்கு உரிமையாய் யாண்டும் உதவி புரிய அமைந்தவன் அமைச்சன் என நேர்ந்தான்.

மந்திரி, அமாத்தியன், உழையன், சூழ்வோன், முன்னோன் எண்ணன், நூலோன், தேர்ச்சிக் துணைவன் முதலிய பல பெயர்கள் அமைச்சனுக்கு அமைந்திருக்கின்றன. யாவும் காரணக் குறிகளால் வந்து அவனது கரும நிலைகளை உணர்த்தி நின்றன.

எண்ணர் நூலோர் அமைச்சர் மந்திரியர் - பிங்கலந்தை

பிங்கல முனிவர் மந்திரிகளை இங்ஙனம் குறித்திருக்கிறார்;

உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர்மந் திரரே நீதி
அறிந்திடு முதுவர் முன்னோர் அமாத்தியர் அமைச்சர் நாமம் - நிகண்டு

குறித்துள்ள பெயர்களால் அமைச்சனுடைய குண நலங்களையும் அறிவு நிலைகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ளுகிறோம். செய்யும் செயல்களை நோக்கிப் பெயர்கள் பெருகி வந்துள்ளன.

பெரிய தேச ஆட்சிக்கு உரிய உசாத்துணையாய் அமைகின்றவனிடம் அரிய பல நீர்மைகளும் சீர்மைகளும் நன்கு அமைந்திருக்க வேண்டும். மதிநுட்பமும் வினைத்திட்பமும் மந்திரியின் சொந்த இயல்புகளாய் வந்த அளவுதான் அந்த அரசு எந்த வகையிலும் உயர்ந்து யாண்டும் மேன்மையாய் விளங்கும்.

காலம், இடம், வலி முதலிய நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி தெளிந்து நாட்டுக்கும் அரசுக்கும் நலம் புரிந்து நெறிமுறைகளோடு நீர்மையாய்ச் சீர்மை செய்து வருபவனே சிறந்த மந்திரியாய்த் திகழ்ந்து எவ்வழியும் சீர்த்தியோடு துலங்கி வருகிறான்;

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட(து) அமைச்சு. 631 அமைச்சு

இன்ன சீர்மைகள் அமைந்திருப்பவனே மன்னனுக்கு மந்திரியாய் வர வுரியவன் எனத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார். அரச காரியங்களைக் கருதி ஆராய்ந்து பருவம் தவறாமல் உறுதியோடு ஆற்ற வல்லவனே அமைச்சன் என்றதனால் அவனுடைய அறிவும் செயலும் நெறியும் நிலையும் அறிய வந்தன.

விதிமுறை தழுவி வினையாண்மையில் வீறு கொண்ட போதுதான் அவன் மதி மந்திரியாய் மாண்புறுகின்றான். கண்ணுக்கு அழகு காட்சியில் தெளிவு; எண்ணுக்கு அழகு ஆட்சியில் மாட்சி, மண்ணுக்கு அழகு மன்னவன் மாண்பு.

மந்திரியைக் கண் என்றது மன்னனுக்கு எவ்வழியும் செவ்வையாய்த் தெளிவுறுத்தி ஒளி செய்து வரும் உரிமை தெரிய வந்தது. கண் ஒளியுடையதாயின் அந்த மனிதன் எதையும் கூர்ந்து நோக்கி ஓர்ந்துணர்ந்து உவந்து வாழுவான்; மந்திரி தெளிவுடையனாயின் அந்த மன்னன் எந்த நிலையையும் எதிரறிந்து இனிது நடந்து தனியுரிமையோடு இன்பமாய் ஆளுவான்.

எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்பது பழமொழி. இந்த முதுமொழி பிரதானிக்கும் பொருந்தி வந்துள்ளது. உடலுக்குத் தலைபோல் உலகுக்கு மன்னன் தலைவனாயிருக்கிறான். அந்தத் தலைக்குக் கண்போல் இந்தத் தலைவனுக்கு மந்திரி மருவி யிருக்கிறான். மந்திரி இல்லையானால் அந்த அரசு கண் இழந்த குருடு போல் கழிந்துபடும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. மதி யூகமுடைய மந்திரிகளைத் தன் கண்களாய்ப் பேணிக் காரியம் புரிந்து வருகிற மன்னன் சீரிய மேன்மைகளோடு சிறந்து யாண்டும் உயர்ந்து திகழ்கின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மந்திரக் கிழவர் கண்ணா
..மக்கள்தன் தாள்கள் ஆகச்
சுந்தர வயிரத் திண்டோள்
..தோழராச் செவிகள் ஒற்றா
அந்தர உணர்வு நூலா
..அரசெனும் உருவு கொண்ட
எந்திரம் இதற்கு வாயாத்
..தூதுவர் இயற்றப் பட்டார் 565

- தூதுவிடு சருக்கம், சூளாமணி

அரசாட்சியை ஒரு மனிதப்பொறியாக உருவகப் படுத்தினார்; அமைச்சர்களைக் கலந்து ஆராய்ந்து பார்த்துச் செய்யப்படுகிற முடிவே முடிவாதலின் அமைச்சர்கள் கண்களாகவும், மக்களின்றி அரசியல் நடவாதாகலின் குடிகள் கால்களாகவும், நண்பினர்களின் உதவி இன்றியமையாத தாகலின் அவர்கள் தோள்களாகவும், ஒற்றர்கள் கூறுதலைக் கேட்டே எச்செயலையும் புரிய வேண்டுதலின் அவர்கள் காதுகளாகவும், நூலறிவு இன்றியமையாத தாகலின் அதனை அந்தர உணர்வாகவும், தூதர்கள் முன்னின்று செய்தியுரைப்பவர்களாதலின் அவர்கள் வாயாகவும் அமையுமாறு பொருந்திக் கூறினார்.

அரசனுக்குக் கண் கால் தோள் செவி வாய் அறிவு இவையாம் என இது சுவையாய்க் குறித்துள்ளது. உருவக நிலைகளை ஊன்றி உணர்ந்து பொருள் நயங்களை ஓர்ந்து கொள்ளுங்கள்.

நல்ல வழிகாட்டியாயுள்ள விழிபோல் மந்திரி அமைந்துள்ளமையால் அவனுடைய மதிமொழிக்குச் செவிசாய்த்து மன்னன் விதிமுறையே ஒழுகி வர வேண்டும்; அந்நிலை வழுவின் புலை படிந்து அரசு பல துயரங்களை அடைந்து வருந்த நேரும்.

கற்ற மந்திரி காட்டவுங் காணாது
பெட்டாங் கொழுகும் பெருமகன் போலவும்
முறைமையிற் றேயு நிறைமதி நீர்மை 1-46 உழைச்சன விலாவணை, பெருங்கதை

மந்திரியின் மதிமொழியைக் கேளாமல் மனம் போனபடி நடக்கும் மன்னவன் ஆட்சி சந்திரன் தேய்வது போல் தேய்ந்து போம் என இது குறித்திருக்கிறது. ஆட்சி மாட்சியுற வேண்டுமாயின் அமைச்சின் காட்சியை யாண்டும் கருதி ஒழுக வேண்டும்.

உள்ளத் தெளிவும் நல்ல நீர்மையும் உள்ளவர் அமைச்சராக அமையின் ஒளி மிகுந்த விழிபோல் அந்த அரசு எந்த வழியும் இனிது இயங்கும்; அங்ஙனம் இல்லாதது அல்லலாய் மயங்கும்.

இன்னிசை வெண்பா

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
சுரையாழ் நரம்பறுத் தற்று! 228 பழமொழி நானூறு

கல்வியறிவுடைய நல்ல மந்திரி இல்லாத அரசு நரம்பற்ற யாழ்போல் இழிந்து படும் என இது குறித்துள்ளது. கற்றாரைக் கண்ணாக உள்ளவன் உற்ற நிலையில் உயர்ந்து திகழ்கின்றான்.

கண் முகத்துககு அழகு; முகம் கண்ணுக்கு ஆதாரம்;. ஒளி அமைந்த கண்போல் தெளிவமைந்த மந்திரி அமையின் மன்னன் எழில் மிகுந்து விளங்குவான்; அவ்வாறு அமைய வில்லையானால் கண் இழந்த முகம் போல் அவன் பொலிவிழந்து மெலிவான்.

நேரிசை வெண்பா

கண்ணும் முகமும்போல் காட்சியுயர் அமைச்சும்
அண்ணல் அரசும் அமைந்துளகாண் - நண்ணியதில்
ஒன்று பழுதுறினும் ஊனமா யீனமுறும்
நின்று தெளிக நிலை!

இதனை ஈண்டு நன்கு தெளிந்து கொள்ள வேண்டும்.

உவமான உவமேயங்களின் பொருள் நயங்கள் கூர்ந்து ஓர்ந்து கொள்ளவுரியன. ஒளி இல்லாத கண்போல், கண் இல்லாத முகம்போல் அமைச்சில்லாத அரசு அவலமா யிழிவுறும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சந்திரன் இல்லா வானம்,
..தாமரை இல்லாப் பொய்கை,
மந்திரி இல்லா வேந்தன்,
..மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
..தொல்சபை, சுதரில் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை,
..தனமில்லா மங்கை போலாம்!

- விவேக சிந்தாமணி

வானத்துக்குச் சந்திரன், தடாகத்துக்குத் தாமரை, சேனைக்கு யானை, சபைக்குப் புலவர், மனைக்குப் புதல்வர், வீணைக்குத் தந்தி, மங்கைக்குக் கொங்கை போல் மன்னனுக்கு மந்திரியாம் என்க. எனவே அவனது நீர்மை சீர்மைகள் தெரியலாம்.

ஒளியும் அழகும், வலியும் மதிப்பும், வாழ்வும் இசையும், இன்பமும் ஏற்றமும் முறையே இங்கு நன்கு தெரிய வந்தன.

அரசனது நிலை முழுதும் அமைச்சரால் ஒளி பெற்று வரலால் அவர் கண் என எண்ண நேர்ந்தார். உடம்பு விழியால் ஒளி பெறுகிறது, அரசு அமைச்சால் தெளிவுற்று எழில் மிகப் பெறுகிறது.

The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light. - Bible

கண் உடலின் ஒளி; ஆகவே உன் கண் தெளிவாயிருந்தால் உனது தேகம் முழுவதும் ஒளி நிறைந்திருக்கும் என ஏசு கூறியிருக்கிறார். உடலுக்குக் கண்போல் அரசுக்கு அமைச்சு.

கண்வழி யாக்கை நடக்கிறது; அதுபோல் அமைச்சுவழி ஆட்சி நடக்கிறது. ஒளி நிறைந்த கண் போல் தெளிவமைந்த அமைச்சரை உரிமை செய்து கொண்டால் அந்த அரசனது ஆட்சி எவ்வழியும் சிறப்பாய் நடந்து இன்ப நலமாய் விளங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-21, 2:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே